(1987 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதை)
வீமன் செத்துப் போனான். மூன்று மாதங்கள் உணவின்றி பட்டினியால் செத்துப் போனான். மானிடர்களின் அருவருப்பான ஆசைகளிலிருந்து பிறப்பெடுத்த போரினால் வீமன் செத்து போனான்.
‘வீர்’ என விண்ணைக் கிழித்துக் கொண்டு வந்து விழுந்தன குண்டுகள். காற்று வெளி எங்கும் கந்தகத் தூசியின் நெடி. ‘எம்மை காப்பாற்ற வந்தவர்கள்’ என்று யாரை நம்பினோமோ அந்த இந்திய இராணுவம் விட்டெறிந்த ஏறிகுண்டுகள் சந்து, பொந்து, ஊர், வீடு, கோயில், பள்ளிக்கூடங்கள் என்ற எந்தவிதப் பேதமும் இன்றி வந்து விழுந்தன.
ஆறறிவு கொண்ட மனிதர்கள் பதுங்கு குழிக்குள் பதுங்கிக் கொண்டனர். ‘என்ன செய்வது’ என்று அறியாத வீமன், வாலை இரண்டு காலுக்கு இடையில் சுருட்டிக் கொண்டு, தலைதெறிக்க வீட்டையே சுற்றிச் சுற்றி ஓடினான்.
இப்போது துப்பாக்கிச் சன்னங்களும் ஒன்றையொன்று போட்டி போட்டு, காற்றை உரசிக் கொண்டு தலைக்கு மேலாகச் “சர்” என சென்று கொண்டிருந்தன. நேரம் செல்லச் செல்ல துப்பாக்கி வெடிச்சத்தங்களும் அண்மித்துக் கொண்டிருந்தன. சில நாட்களுக்கு முன்னர் கொக்குவில் பிரம்படியில் நடந்த கொலைவெறியாட்டத்தையும் இவர்களும் கேள்வியுற்றுத்தான்
இருந்தார்கள். அதனால், ‘இதற்கு மேல் இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து’ என்று அறிந்த எஜமான், தன் கையில் கிடைத்த பொருட்களைச் சுருட்டி வாரிக் கொண்டு, தன் பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு, சில மைல்கள் அப்பால் இருந்த ஒரு பாடசாலைக்குள் தஞ்சம் புகுந்தார்.
வீமனும் இவர்களுக்குப் பின்னாலே ஓடிச் சென்றான். என்ன நினைத்தானோ தெரியவில்லை, பாதி தூரத்தில் வீடு திரும்பி விட்டான். ஒருவேளை, எஜமான் இல்லாத வீட்டில் தான் தான் காவல் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வு அவனைத் தூண்டி இருக்கலாம்.
எந்தவொரு ஆள் நடமாட்டமும் அற்று ஊரே வெறிச்சோடி கிடந்தது. எவ்வளவுதான் அவன் எஜமானுக்கு விசுவாசமாக இருந்தாலும், அவனால் எந்த சூழ்நிலையிலும் எஜமானின் வீட்டுக்குள் செல்ல முடியாது. காற்று, மழை, குளிர், வெயில் எல்லா காலங்களிலும் அவனது இடம் வெளி வாசல் படிதான். அந்த ஊரில் சில மனிதர்களைக்கூட வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். விசித்திரமான ஊர்; விசித்திரமான மானிடர்கள்.
நாட்கள் வாரமானது. வாரம் மாதங்கள் ஆனது. மூன்று மாதங்கள் கடந்தன. அந்த மூன்று மாதங்களும் அவன் என்ன சாப்பிட்டிருப்பான்? ஐப்பசி மாத மழையில் தேங்காய் சிரட்டைகளில் தேங்கி நிற்கும் மழைநீரைக் குடித்து தாகம் தீர்த்திருப்பான். ஆனால் உணவு? இயல்பாகவே நாய்கள் வேட்டையாடும் விலங்குகள். ஆனால் எஜமானின் மிச்சச் சோற்றைத் தின்று வாழும் வீமனுக்கு வேட்டையாடத் தெரியாது. அவனுக்குப் பசியெடுத்திருந்தாலும் எஜமான் வளர்த்த கோழிகளைப் பிடித்துச் சாப்பிட மனம் இருந்திருக்காது. ‘அது எஜமானுக்குத் துரோகம்’ என்று அவன் எண்ணியிருப்பான். எப்படி மூன்று மாதம் உணவு இல்லாமல் உயிரோடு இருந்தான் என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது.
மூன்று மாதங்களுக்குப் பின்பு சற்று அமைதி நிலவியது. வீட்டுக்கார எஜமானும் எங்கெங்கோ ஓடி ஒழிந்து, உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
வீட்டு முன் கேட்டைக் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தபோது, அவர்களின் வாசல் படியில் என்னவென்று தெரியாத ஒரு விலங்கு படுத்திருந்தது. வயிறு ஒட்டி, ஒட்டுமொத்த எலும்புகளும் தோலுக்கு மேலாகத் தள்ளி, ஒரு பெருத்த தலையும் ஒடுங்கிய உடலுமாக ஒரு விலங்கு அசைவற்று கிடந்தது.
வீமன் அடையாளம் காண முடியாதவாறு உருக்குலைந்து போயிருந்தான். மெல்லிய சுவாசம் மட்டும் அவன் இன்னும் உயிரோடு இருக்கிறான் என்பதை உறுதிபடுத்தியது. எத்தனை நாட்கள் அப்படியே அந்த இடத்தில் சுவாசத்தை மட்டும் பிடித்துக் கொண்டு இருந்தானோ தெரியவில்லை. கண்களை மட்டும் உருட்டிக் கொண்டு மேலே பார்த்தான். எஜமானைக் கண்ட மகிழ்ச்சியில், தன் உடலில் இருந்த சக்தி எல்லாம் ஒன்று திரட்டி வாலை ஆட்ட முயன்றான். ஒரு அசைவுடன் அது தோற்றுப் போனது. தன் எஜமானின் நோக்கி எழ முயன்று, பலமிழந்த முன்னங்காலை ஊன்றிப் பல தடவைகள் முயற்சி செய்து, சிமெந்து தரையில் வழுக்கித் தலையைத் தரையில் மோதிக் கொண்டான். எந்த முயற்சியும் கைகூடவில்லை. இறுதியில் வாடிய உடலில், பெருத்த தலையைத் தூக்க முடியாமல், முனங்கக்கூட பலம் இன்றி, சின்ன முனங்கலுடன் படுத்துக் கொண்டான்.
ஏன் குண்டுகள் விழுகின்றன, மனிதர்கள் எங்கே ஓடுகிறார்கள், ஏன் மீண்டும் வருகிறார்கள், ஏன் நான் பட்டினியால் வாடினேன் என்று அவனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் மனிதர்கள் மேல் உள்ள உண்மையான விசுவாசம் மட்டுமே. ‘எஜமான் வீடு திரும்பும் வரை வீட்டைக் காவல் செய்து தன் கடமையைச் செவ்வனே செய்து முடித்தோம்’ என்ற மன நிறைவுடன் அடுத்த நாள் காலை அதே வெளி வாசல் படியில் செத்துப் போனான் வீமன்.
