இரவின் கனத்த போர்வை உலகை மூடியிருந்தது. நேரம், இரவு பத்து மணி.
நாயாற்றுப் பாலத்தின் மேல் வானின் கரிய இருட்டைக் கீறிக்கொண்டு பாய்ந்த ஓர் ஒளிக் கற்றை, வானெங்கும் வெள்ளிப் பூச்சாகப் படர்ந்து சட்டென மறைந்தது. அது, ஒரு வாகனத்தின் முகப்புக் குமிழிலிருந்து புறப்பட்ட வெளிச்சம்..
“அன்பண்ணாவின் பிக்கப் வண்டி வருது!”
காவல் அரணில் நின்றிருந்த ஒரு போராளியின் குரல், இராக்கால நிசப்தத்தைக் கிழித்தது.
அன்பண்ணா! அவர் மணலாறு மாவட்டத் தளபதி. அனல் பறக்கும் கோபக்காரர்; அதே சமயம், கண்டிப்பு எங்கிருக்கிறதோ அங்கேயே அன்பும் நிலைகொண்டிருக்கும் என்பதற்குச் சான்று அவர். அவரைப் பற்றிச் சொல்லப் புகுந்தால், இக்கதை பெருநாவலாகும். ஆகவே, இக்கதைக்கு அவரின் அறிமுகம் இவ்வளவு போதும்.
நிசாம் முகாம், மணலாறு காட்டின் வாசலில் அமைந்திருந்த ஒரு காவல் முகாம். ஒரு காலத்தில் மாட்டு வண்டிப் பாதையாக இருந்த ஒற்றைத் தடத்தின் வழியாகக் காட்டுக்குள் செல்லவேண்டுமெனில்,
அனைத்து வாகனங்களும், இம்முகாமை ஊடறுத்தே ஆகவேண்டும்.
காவலில் நின்ற போராளி அந்த ஒளியைப் பார்த்துக் கணித்தது சரிதான். அது அன்பண்ணாவின் வாகனம் என்பதை, அந்தப் பகுதியில் எவரேனும் எளிதில் ஊகித்திருக்க முடியும். ஏனெனில், பிக்கப் ரக வாகனத்தில் அந்நேரம் அன்பு அண்ணன் மட்டுமே வருவது வழக்கம். அதையும் தாண்டி, இரவில் வேறு வாகனங்கள் வருவது மிக மிக அரிது. காரணம், விமான மற்றும் போர்க்கப்பல் இருந்து தாக்குதல்களில் தற்காத்துக்கொள்ள இரவின் பயணங்கள் முற்றிலும் தவிர்க்கப்படுவதுண்டு.
நாயாற்றுப் பாலத்திலிருந்து கீழே இறங்கி, உப்பு நீரேரி வற்றிய வெள்ளை மணற்பரப்பில் பள்ளம் மேடான பாதையில் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிசாம் முகாமை அடைவதற்கு, குறைந்தபட்சம் பதினைந்து நிமிடங்களாவது தேவை.
காவலில் நின்ற போராளியின் கூக்குரல், முகாம் பொறுப்பாளரான மதியை, தூக்கத்திலிருந்து துள்ளி எழக் காரணமாக அமைந்தது. கண்மூடித் திறக்கும் நேரத்தில், முகாமில் உள்ள கொட்டில்கள், காவல் அரண்கள் என எங்கும் ஓடி, காவலில் நிற்கும் போராளிகள் விழிப்பாய் இருக்கிறார்களா என்று ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்தான்.
அவன் பதற்றப்படுவதற்குக் காரணமிருந்தது. அன்பு அண்ணா திடீரென முகாமுக்கு வந்து, காவலில் நிற்கும் போராளிகளைச் சோதனை செய்வதுண்டு. காவலில் இருப்பவர்கள் யாரேனும் கண்ணயர்ந்திருந்தால், அடுத்த நாள் முகாம் பொறுப்பாளரின் நிலைமை திண்டாட்டம் தான்.
நிசாம் முகாம் இராணுவ முகாமிலிருந்து பல மைல்கள் தூரத்தில் இருந்ததால், அது மிகவும் பாதுகாப்பான இடம். எனவே, சில நேரங்களில் களைப்பின் மிகுதியால் போராளிகள் சற்றே தூங்கிவிடுவது உண்டு. எனினும், எத்தகைய பாதுகாப்பான இடமாக இருந்தாலும், ஏழு பேர் கொண்ட குழுவில் ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் சுழற்சி முறையில் காவலில் இருக்க வேண்டும் என்பது போராளிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டாயக் கடமைகளில் ஒன்று. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
போராளிகள் இரவு பத்து மணிக்கு உறங்கச் சென்று, காலை ஐந்து மணிக்கு எழுந்து, ஆறு மணிக்குள் அனைத்துக் காலைக் கடமைகளையும் முடித்துவிட வேண்டும். இந்த இடைப்பட்ட நேரம்தான் இரவு காவல் (சென்றி) நேரம்.
பகல் முழுவதும் உடற்பயிற்சி மற்றும் பல வேலைகள் செய்துவிட்டுப் படுக்கச் செல்லும் போராளிகளுக்கு, இந்த ஏழு மணி நேரமே ஓய்வு நேரம். அதில் ஒரு மணி நேரம் சென்றிக்கு எழவேண்டி வருவதால், தூங்கும் நேரம் ஆறு மணியாகக் குறைந்துபோகும்.
முதல் சென்றியோ அல்லது கடைசிச் சென்றியோ கிடைத்துவிட்டால், அது மிகவும் மகிழ்ச்சியான இரவு. ஏனெனில், சென்றியை முடித்துவிட்டு விடியும்வரை தூங்கலாம். இல்லாவிட்டால், நன்றாகத் தூங்கிவிட்டு விடியற்காலையில் சென்றி பார்க்கலாம்.
ஆனால், நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கையில் இடைப்பட்ட நேரத்தில் எழுந்து சென்றி பார்ப்பதென்பது, ஒருவித எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தும். ‘இதற்குப் பதிலாக, இராணுவக்காரன் டக்கென்று வந்து தலையில் டோக்கென்று போட்டால் நன்றாக இருக்கும்’ என்று கூடத் தோன்றும்—அந்த அளவுக்கு ஒரு கசப்பான உணர்வை ஏற்படுத்தும் அது.
தூக்கக் கலக்கத்தில் காவலுக்கு நின்றால், நுளம்புகளின் தொல்லை தாங்க முடியாதிருக்கும். காதுகளுக்குள் ரீங்காரமிட்டு, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோலக் கோபத்தை மேலும் தூண்டும்.
ஒரு மணி நேரச் சென்றியை முடித்துவிட்டு, அடுத்த போராளியை எழுப்புவதற்குக் கடித்துப் போட்ட பேட்டரியின் மங்கிய டார்ச் வெளிச்சத்தை முகத்திற்கு அருகே கொண்டு சென்றால் மட்டுமே முகம் தெரியும். இதற்கிடையில், ஒரு சிலர் மீது ஏறி விழுந்து, அவர்களின் தூக்கத்தைக் கெடுத்து விட்ட நகைச்சுவைக் கதைகளும் பல உண்டு. சில போராளிகளை எழுப்ப முயல்வதற்குள் விடிந்தே போய்விடும்.
அடுத்த சென்றிக்கு நிற்பவரைச் சாதாரணமாகத் தட்டி எழுப்பிவிட்டுக் கடந்துவிட முடியாது. அவர் எழுந்து, உடைகள் அணிந்து, கோல்சர் கட்டி, துப்பாக்கியுடன் காவலரண் சென்று நிற்கும் வரை எழுப்புபவரின் பொறுப்பிலேயே இருக்கும். அரை குறையாக எழுப்பிச் சென்றியில் தூங்கிவிட்டால், எழுப்பியவருக்கும் தூங்கியவருக்கும் அடுத்த நாள் சமையலோ அல்லது மைதானத்தைச் சுற்றி ஓடும் தண்டனையோ நிச்சயம் விதிக்கப்படும்.
இரண்டாவது சென்றி அல்லது கடைசிக்கு முதற் சென்றி என்றால், அந்த உணர்வை வார்த்தைகளால் வடிக்க முடியாது. ஒரு மணி நேரம் தூங்கிய சிறிது நேரத்தில் மீண்டும் எழ வேண்டியிருக்கும். “என்ன வாழ்க்கையடா!” என்று உறுதியான மனதிலும் சலிப்புத் தட்டும்.
எந்தவொரு ஒளியுமின்றி, இருட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஒரு மணி நேரம், ஒரு யுகமாகக் கடக்கும். மன எண்ணங்களில் பலவும் வந்து ஓடி மறையும். திடீரெனப் பன்றியோ அல்லது வேறு மிருகங்களோ ஓடும் சத்தம் கேட்கும்போது மட்டும் ஐம்புலன்களும் உஷாரடையும். மற்ற நேரங்களில் கடிகாரத்தின் மீதே கண் இருக்கும்.
தங்கள் காவலில், மற்ற ஆறு உயிர்களும் இருக்கின்றன என்பதை அனைத்துப் போராளிகளும் அறிந்திருந்தனர். முன்னரங்குக் காவலரணில் நிற்பது வேறு; பாதுகாப்பான இடத்தில் இருக்கும் முகாமில் நிற்பது, சில நேரங்களில் சோர்வைத் தரலாம். இருப்பினும், ஒரு சிறிய கவனக்குறைவு கூட மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால், எந்தச் சமரசமுமின்றி விழிப்புடன் நிற்பது கட்டாயக் கடமை என்பதைப் போராளிகள் உணர்ந்திருந்தாலும், களைப்பின் மிகுதியில் இரவில் சென்றிக்குப் போவது என்பது அவர்களுக்குப் ஏதோ பெரும் சுமையாகவே அமைந்திருந்தது.

