கப்டன் செம்மலையான்.(சுப்பிரமணியம் ரமணீகரன்)ஆசைமாமா
“ஆசைமாமா”
அவர் எங்கள் அன்புநிறை அவதாரம்.
இன்முகமும் இளகிய மனமும் கொண்ட
இலட்சிய வீரன்
ஓவியக்கலையும் சிற்பக்கலையும் ஒளிப்படக்கலையும் உயர்வாகக்கைவரப்பெற்றவர்.
ஓவியர் “மார்க்” அவர்களின் விருப்பிற்குரிய மாணவன்
கவிதை ,கட்டுரை வரைவதில் வல்லவர்.
ஆங்கிலமொழியறிவு நிரம்பப்பெற்றவர்.
கழுத்தில் நஞ்சைக்கட்டுமுன்னேயே
காலம் உணர்ந்து கடமை செய்த
போராளி.
புலிப்படையில் இணையுமுன்னமே புலிதான் இவர்என அறியப்பட்டவர்.
இந்திப்படைகளால் சிறைசெய்யப்பட்டு கடும்வதை கண்டவர்.
கண்டவன் காலில் எம்தேசம் வீழாது என்று
காட்டிய பற்றாளன்.
தாயகத்தைத் தாயாகப்போற்றிய தமிழன்.
எடுப்பான தோற்றமும்
துடிப்பான நடையும்
மிடுக்கான செயல்களும்
இவரின் அழகு.
அண்ணன் ஆனந்தனின் வழியில் விடுதலைக்காய் வீறுகொண்டு
விடுதலைப்புலியாகி களம் பல கண்டவர்.
உறவுகளைப்போற்றி உள்ளத்தால் அன்பைப் பொழியும்
அன்பாளன்.
தலைவர் அவர்களின் பாராட்டைப்பெற்றவர்.
அவரின் சொல்லே வேதமாய்க்கொண்டவர்.
அனைத்துலகத்தொடர்பகப்பணியை
அன்னைமண்ணில் ஏற்றவர்
அனைவர் மனங்களையும் அன்பால் வென்றவர்
சூரியக்கதிர்
சூறாவளிச்சமருக்கு
சுறுசுறுப்பாய்த்தயாராகிச்சென்றவர்
திரும்பி வந்தது வித்துடலாகத்தான்.
ஆசைமாமாவை ஆசையாய்க்கூப்பிட்ட இறுதிப்பொழுதின் நினைவை
இன்னமும் பொத்திவைத்திருக்கிறேன் ஆசையாக..
செம்மலைக்குமட்டுமா அவரைத்தெரியும்?
இல்லை செம்மலையானாக அகிலத்திற்கே தெரியும்…
ஓவியனாய் ,சிற்பியாய்,”உலக உலா” ஆசிரியராய்,”சாளரத்தின்” கலைஞராய் ,இன்னும்பல சஞ்சிகைகளின் படைப்பாளியாய்
தேசியத்தலைவரின் அகம்நிறைந்தவராய்
நிலைத்துவிட்டார் ஆசை..
மண்ணின் மகனாய் மாவீரனாய்..
கலைமகள்
19.10.2025






