ஈழத்து எழுத்தாளர் உரும்பையூர் து. திலக் அவர்களின் “சிதறல்கள் – 100 கவிதைகள்” நூல் 2வது பதிப்பு வெளியீட்டு விழா கடந்த 27.10.2024 சுவிஸ் நாட்டின் பேர்ன் மாநிலத்தில் தமிழர் களறி மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தேசிய செயற்பாட்டாளர்கள் பங்குபெற்றனர்.
மங்கல விளக்கேற்றும் நிகழ்வில் பின்வரும் முக்கியத்துவமிக்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்:
- சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர், ஒருங்கிணைப்பாளர், சைவநெறிக்கூடம்

- மெய்டித்தொண்டர் சிவபசி விக்னேஸ் ஐயா, ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர், ஒருங்கிணைப்பாளர் „சிவபணி“, சைவநெறிக்கூடம்

- திருமதி. அமலா சேரலாதன், மாவீரர் கேணல் சேரலாதனின் துணைவியார்

- திரு. கந்தையா வசந்தகுமார், நூலாசிரியரின் உறவினர்

- செல்வி தமிழினி விநாயகமூர்த்தி, செங்காளன் மாநிலத்தின் இறெயின்தாளர் தமிழ்மன்ற தலைவி

- அஷ்டாங்கயோகி நாகலிங்கம் குலசிங்கம், நல்வாழ்வுதரும் யோகாக்கலை நூலாசிரியர் மற்றும் யோகா பயிற்றுவிப்பாளர் மங்கல விளக்கினை ஏற்றிவைத்த பின்பு அகவணக்கம் நிகழ்ந்தது.




ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் மங்கலவாத்தியக் கலைஞர்கள் இசையுடன் நிகழ்வை சிறப்பித்தனர்.

திருமதி. கார்த்திகா முரளிதரன் தமிழர்களறி சார்பில் வரவேற்புரையாற்றினார்.

சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அருள்வாழ்த்துரை வழங்கி, ஈழத்தின் மூத்த படைப்பாளர் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார், நூலின் அறிமுக உரையை வழங்கினார். ஈழத்தில் தோன்றிய போர்க்காலப் படைப்பாளிகளை நினைவுகூர்ந்து, எமது மண் அளித்த படைப்பாளிகளின் எழுத்தையும் அப்படைப்பால் ஈழத்தமிழ் இலக்கியத்தில் ஆன பங்களிப்பையும் சிறப்பித்துத், திரு திலக் அவர்களையும் அவரின் படைப்பையும் அறிமுகம் செய்து தனது உரையை ஆற்றினார்.


பன்முகம் கொண்ட இசை ஆசிரியை, பாடகி, எழுத்தாளர் திருமதி மணிமொழி கிருபாகரன் திரு திலக் அவர்களின் படைப்புக்கு வாழ்த்துரையாற்றினார்.

பாவலர் அறிவுமதி அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெண்திரையில் வாழ்த்துரை வழங்கியபோது, புனைவுத்திறனுடன் திலக் அவர்களின் கவித்திறனை விளக்கினார்.

திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி வெளியீட்டு உரையாற்றி, இலக்கியம் வழியாக எமது வரலாற்றை பதிவு செய்ய வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்தில் தமிழர்களால் இன்றுவரை முன்னெடுக்கப்பட்ட பணிகளை விவரித்து, திரு திலக் அவர்களின் படைப்புகள் இக்காலத்தில் எதற்குத் தேவை என்பதைத் தெளிவுபடுத்தியும், அனைத்து தமிழர்களும் எமது வரலாற்றை உண்மையுடன் பதிவு செய்து அதனை எதிர்காலத் தலைமுறைகளுக்குப் பரிமாறவேண்டும் எனக் கூறி, திரு தில்லையம்பலம் சிவகீர்த்தி வெளியீட்டு உரையாற்றினார்.

திருமதி பிரேமினி அற்புதராசா, நூலாசிரியர் திலக் அவர்கள் எழுதிய 100 சிதறல் கவிதைத் தொகுப்பின் மீது நயப்புரை ஆற்றினார். தனது கூர்மையான எழுத்துக்களில் தாய்மொழி, தாயகம், தலைவர்கள், உறவுகள், போரின் வலி, காணாமல் போனவர்களை எதிர்பார்க்கும் குடும்பங்களின் துயரம், அரசியல், புலம்பெயர்ந்தோரின் வாழ்வு, வாழ்க்கையின் நிலையாமை ஆகிய கருக்களை எழுத்தில் பகிர்ந்திருப்பதை சிறப்பித்தார்.

விடுதலைப் புலிகள் பத்திரிகை ஆசிரியர் திரு சு. ரவி சிறப்புரையாற்றினார். திரு கிரி அவர்களைப் பற்றி பேசுகையில், இவரது மேடைப்பேச்சு ஆளுமை அவரது ஆசான் இளம்பருதியிடமிருந்து பெறப்பட்ட ஒன்று என்று குறிப்பிட்டார். 1990களில் தாயகத்திலிருந்து வெளிவந்த படைப்புகளை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். கிரி அவர்களின் எழுத்து புதுவை அண்ணையின் படைப்புபோல் வளர வேண்டும் என வாழ்த்தினார்.

நூல்வெளியீட்டை நூலாசிரியரின் சகோதரி திருமதி தமிழ்ச்செல்வி வசந்தன் தொடங்கி வைத்து, முதற்பிரதிகளை விடுதலைப்புலிகள் பத்திரிகை ஆசிரியர் திரு. சு. ரவி, மூத்த படைப்பாளர் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார், சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நூலாசிரியர் திரு. திலக் நன்றி உரையாற்றினார், நிகழ்விற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தார்.

ஏற்புரை மற்றும் நன்றியுரையைத் திரு திலக் அவர்கள் வழங்கினார். „இன்றைய சந்திப்பினால் பல விதைகள் என் உள்ளத்தில் விதைக்கப்பட்டன. எனது ஆசான் இளம்பருதியிடம் பழகிய காலம் என்னை செப்பனிட்டது“ என அவர் பகிர்ந்து கொண்டார். இப்படைப்பு வெளிவரக் காரணமாக இருந்த அனைவரையும், வருகை அளித்த அனைவரையும் பெயர் குறிப்பிடடு நூலாசிரியர் நன்றி நவின்றார். நிறைவில் இரவு விருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டு நூல்வெளியீடு நிறைவுற்றது.




