ஒரு போராளியின் நினைவலைகளில்மேஜர் சோதியா

0 0
Read Time:11 Minute, 36 Second

1984-ம் ஆண்டின் முற்பகுதி.
விடுதலைக்காகப் போராட வேண்டும் என்ற ஆவலில் சோதியா நீண்ட நாட்களாக முயற்சி
செய்து, விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களைச் சந்தித்தார்.
சோதியா தலைவரைச் சந்தித்ததன் மூலம் நானும் அவரும் புலிகள் இயக்கத்தில் இணைந்து
கொண்டோம்.


நாங்கள் போராளிகளாகியதிலிருந்து, பயிற்சியை முடித்து ஈழத்துக்கு வரும் வரையில்
நடந்தவை நிறைய விடயங்கள். இந்தியாவில் எங்களுடன் சோதியா மருத்துவம் படித்து,
எம்மோடு பயிற்சியை எடுத்து, பயிற்சியின்போதே மருத்துவப் பணியிலும் ஈடுபட்டு…
அப்போது சோதியா செய்தவற்றை எல்லாம் எழுதத் தாள்கள் போதாது.
பயிற்சி முடிந்தவுடன் சோதியா உட்பட பெண்போராளிகளின் குழுவொன்று ஈழத்துக்கு
வந்தது. மன்னாரில் தளம் அமைத்துத் தங்கிய அவர்களுக்கும், தலைவருக்கும் இடையிலான
செய்திப் பரிமாற்றம் சோதியாவின் பொறுப்பில் விடப்பட்டது. சுற்றிவர இராணுவத்தினர்
சூழ்ந்திருந்த அன்றைய நிலையில், அவர்களுக்கும் தலைவருக்கும் இடையில் பாலம் போன்று
செயற்பட்டவர் சோதியாதான். அதன் பின் யாழ். கோட்டையிலிருந்த சிறீலங்கா
இராணுவத்தினருடனான மோதலில் பங்கு கொண்டார்.
இதன்பின் வடமராட்சியில் ;விடுதலை நடவடிக்கை; என்ற இராணுவ நடவடிக்கையை
இலங்கை இராணுவம் நடாத்தியதும், அதைத் தொடர்ந்து நெல்லியடி மத்திய
மகாவித்தியாலயத்தில் இருந்த இராணுவத்தினரைக் கரும்புலி கப்டன் மில்லர் தாக்கியதும்,
அதன்பின் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும், இந்திய இராணுவம்
எம்மண்ணுக்கு வந்ததும் எல்லோரும் அறிந்த விடயங்களாகும். இந்திய இராணுவம் இங்கு
வந்ததும் மீண்டும் சோதியா களத்தில் இறங்கினார்.
கல்லுண்டாய் வெளியில் அமைக்கப்பட்டிருந்த இந்திய இராணுவத் தளம் மீதான தாக்குதலில்
சோதியா முக்கிய பங்கெடுத்தார். இத்தாக்குதலின் போது அவர் நேரடி மோதல், வைத்திய
சேவை ஆகிய இரு பணிகளிலும் ஒரே நேரத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து
சண்டிலிப்பாயில் இந்திய இராணுவத்தினரின் கவசவாகனம் மீதான தாக்குதலிலும்
பங்கெடுத்தார். நாட்டிலிருந்த புலிகளில் பெரும் எண்ணிக்கையானோர் காடுகளில் பாசறை
அமைத்துத் தங்கத் தொடங்கும் காலம் வரையில், இந்திய இராணுவத்தினரை நேர்கொண்ட
சந்தர்ப்பங்களில் நடந்த மோதல்களிலெல்லாம் சோதியா பங்கு கொண்டார்.
அதன்பின் காட்டிலே அமைக்கப்பட்டிருந்த பாசறைகளில் தனது மருத்துவப் பணியைத்
தொடர்ந்தார். காட்டிலே தங்கியிருந்தபோது வெலிஓயாவில் சிங்கள இராணுவ அணிமீது
எம்மவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் காயமடைந்த போராளிகளுக்குக்
களத்தில் வைத்தே சிகிச்சை அளித்தார்.
மீண்டும் சோதியா காட்டுப் பாசறைக்குத் திரும்பினார். சோதியாதான் முகாம் சுத்தம்,
சமையலறைச் சுத்தம், போராளிகளின் சுத்தம் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கவனிப்பார்.
பெண் போராளிகளுக்கு என்னென்ன தேவை என்பதைத் தலைவரிடமே கேட்பார்.
சோதியாவின் செயலாற்றும் தன்மையையும் பெண்களணியை நல்ல முறையில் வழிநடத்தும்
ஒழுங்கையும் அவதானித்த தலைவர் பெண்களணிக்கான தலைமைப் பொறுப்பை 1989இன்
முற்பகுதியில் சோதியாவிடம் ஒப்படைத்தார்.
தலைமைப் பொறுப்பேற்ற பின்னர், நாள்தோறும் பெண்போராளிகளைக் குழுக்குழுவாகக்
கூப்பிட்டு, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவர்கள் எப்படி இருக்க வேண்டும்,
என்ன வேலைகள் செய்யவேண்டும், சண்டை வந்தால் எப்படிச் சண்டையிடுவது என்பது
பற்றிக் கதைப்பார். போராளிகளுடன் கதைப்பதில், அவர்களுக்கு அறிவுரைகள் கூறுவதில்
சோதியாவுக்கு நிகர் அவரேதான்.
சோதியா பொறுப்பெடுக்க முன், ஆண் போராளிகளும் நாங்களும் எமது
வேலைகளையெல்லாம் அட்டவணை போட்டு ஒழுங்குபடுத்திச் செய்தோம். சோதியா
பொறுப்பெடுத்த பின் எமது வேலைகளை நாமே தனித்துச் செய்வதற்கு தலைவரிடம் அனுமதி
கேட்டார். தலைவரும், பெண் போராளிகள் தமது கால்களை ஊன்றி வளர்வதுதான் தனது
விருப்பமாகும் என்று அனுமதித்துவிட்டார். அதன் பின்னர் எமக்கான எல்லா வேலைகளையும்
நாமே செய்யத் தொடங்கினோம்.
சிலகாலத்தின் பின் பெண்போராளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் எமது பாசறையில்
இருந்த வசதிகள் போதாமல் போய்விட்டன. முக்கியமாகத் தண்ணீர் ஒரு பெரும்
பிரச்சினையாக இருந்தது.
தலைவர் சோதியாவைக் கூப்பிட்டு, பெண் போராளிகளுக்கெனத் தனியாகத் தளம் அமைத்து,
தனியாக ஒரு கிணறு வெட்டும்படி உத்தரவிட்டார். சோதியா பெண் போராளிகளைப் பல
குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு வேலையைக் கொடுத்து புதிய தளம்
ஒன்றை அமைத்தார். அத் தளத்துக்கு .விடியல்; எனப் பெயரிடப்பட்டது. இந்தப் பெயரைப்
பற்றி தலைவர் கருத்துத் தெரிவிக்கும்போது ;பெண்கள் தனித்து நின்று செயற்பட்டு ஒரு
விடிவைக் காணவேண்டும்; என்று சொன்னதாகச் சோதியா என்னிடம் சொன்னார்.
தனித் தளம் அமைக்கப்பட்ட பின்னர் சோதியா பெண்போராளிகளை வளர்த்தவிதம்
தனியானது. எல்லா வேலைகளையுமே ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவந்தார். எல்லாப்
போராளிகளுடனும் கதைப்பதன் மூலம் அவர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும்
ஊட்டலாம் என்பதில் சோதியா அதீத நம்பிக்கை வைத்திருந்தார். பெண்களைச் சகல
வேலைகளிலும் பயிற்றுவித்தார்.
சோதியாவின் தலைமையில் விடியலில் பெண்போராளிகளின் ஐந்தாவது படையணி தனது
பயிற்சிகளை ஆரம்பித்தது. பயிற்சியாளர்களுக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்டு
அறிந்து அதற்கான ஒழுங்குகளை ஓடி ஓடிச்செய்து கொண்டிருந்தார். எல்லோரையும்
கவனிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் தன்னைக் கவனிக்கத் தவறிவிட்டார். ஐந்தாவது
படையணி தனது பயிற்சிகளை முடிக்கும் தறுவாயில் சோதியா சற்றுச் சோர்வாக இருப்பதாக
எனக்குப்பட்டது.
தனக்கு நெஞ்சு வலிப்பதாக சோதியா ஒருநாள் என்னிடம் சொன்னார்.
கொஞ்ச நாளைக்கு ஓய்வெடுங்கோ. ஒழுங்காகச் சாப்பிடுங்கோ. என்று நான் கூறினேன்.
ஆனால் சோதியா தனது வழமையான வேலைகளில் எதையுமே நிறுத்தவில்லை.

ஒரு நாள் தலைவர் சோதியாவைக் கூப்பிட்டார். அன்றும் சோதியாவுக்குக் காய்ச்சல்தான்.
ஆனால் யாரிடமும் சொல்லவில்லை. தலைவரிடம் போய் வந்தார். மறு நாள் காலையில்
சோதியா எழும்பவில்லை. என்னவென்று கேட்டபோது தனக்குக் காய்ச்சலும் நெஞ்சு
நோவுமாக இருப்பதாகக் கூறினார். நான் சோதியாவுக்கான மருந்துகளை மருத்துவப்
பிரிவினூடாகப் பெற்றுக் கொடுத்தேன். தலைவரின் இடத்தில் நிற்கும் வைத்தியரைக்
கூப்பிட்டுக் காட்டுவோமா என்று நான் கேட்க, அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டார்.
மறுநாளும் வருத்தம் குறையாததால் நான் அந்த வைத்தியரைக் கூப்பிட்டுக் காட்டினேன்.
தலைவரும் வந்து பார்த்தார். இருவரும் சோதியாவை யாழ்ப்பாணத்துக்குப் போய்ச் சிகிச்சை
செய்யுமாறு கூறினார்கள்.
யாழ்ப்பாணம் போன சோதியாவின் உடல்நிலை பரவாயில்லை என்ற செய்தி எமக்குக்
கிடைத்தது. சோதியா திரும்பி வந்துவிடுவார் என்றே தலைவர் எண்ணியிருந்தார். நாமும்
அவ்வாறே எண்ணியிருந்தோம். ஆனால் திடீரென, சோதியா வீரச்சாவடைந்த செய்தி எமக்குக்
கிடைத்தது. நாம் அதிர்ந்து போனோம்.
ஆனாலும் சோதியாவின் புகழுடலை விடியலுக்கு கொண்டு வருவதற்கான ஒழுங்குகளைச்
செய்துவிட்டுக் காத்திருந்தோம். விடியலுக்குக் கொண்டுவரப்பட்ட சோதியாவின் உடலை,
வழமையாகச் சோதியா படுக்கும் இடத்தில் வைத்து அஞ்சலி செய்தோம்.
சோதியா எம்மைவிட்டுப் பிரிந்தது நேற்றுத்தான் போலிருக்கிறது.
சோதியா அன்று போட்ட அந்தப் பலமான அடித்தளம்தான் இன்று மகளிர் படையணி ஒரு
பலம்வாய்ந்த இராணுவ அணியாக உருவாகிய காரணங்களுள் ஒன்றாக அமைந்தது.

சுகி
நன்றி: ஈழநாதம் 1994.01.11

https://noolaham.net/project/320/31917/31917.pdf

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment