பெண்களின் ஆளுமையைச் சரியாகத் தெரிந்து கொள்ளத் தொடங்கிவிட்ட சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சொல்லால் அல்ல எமது தீரச்செயல்களால் பெண்களுள்ளே மறைந்து கிடக்கின்ற ஆற்றலை புரியவைப்பதனூடாக பெண்களின் தனித்துவத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றோம். தேசிய ரீதியான அடக்குமுறையால் மட்டுமல்லாமல் சமூக ரீதியான ஒடுக்குமுறைக்குள்ளும் அகப்பட்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்ற பெண்களின் விடுதலைக்காக குரல் எழுப்புவதோடு நின்றுவிடாமல் எமது விடுதலையை வென்றெடுக்க நாம் தான் போராட வேண்டும் என்பதில் உறுதியாக நின்று போராடிக் கொண்டிருக்கின்றோம்.
எமது தேசம் விடுதலை அடையும் போது பெண்களும் தமது அடக்குமுறைக்குள்ளிருந்து விடுபடுவார்கள் என்பதைத் திடமாக நம்புகின்றது எமது அமைப்பு. உதிரியாக அல்ல; பலமான ஓர் அமைப்பாக பெண்கள் இணைந்தால் தான் வெற்றியின் பாதையில் சுலபமாக நகர்த்தப்படுவோம் என்பதை சரியாகப் புரிந்து கொண்டதைத் தொடர்ந்து 1985ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழ்ப்பெண்களைப் பொறுத்தவரை மட்டுமல்லாமல் சகல அடக்குமுறைகளாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களையும் உறுதியுடனும் துணிவுடனும் நிமிர்ந்து நிற்க வைத்த ஆண்டு தான் 1986ஆம் ஆண்டு. போர்க்களத்தில் விடுதலைப் புலிகள் மகளிர்படை தன்வீரத்தை, விடுதலை உணர்வை, ஆற்றலை வெளிப்படுத்திய ஆண்டு அது. அன்று தொடங்கிய ஆளுமையை வெளிப்படுத்தும் நிகழ்வு தனித்துவத்தை நிலைநாட்டும் உறுதி இன்று மேலும் பலபடி முன்னேறிவிட்டது. எண்ணில்லாத பெண்களை இன்று எமது அமைப்பு உள்வாங்கிக் கொண்டு வருகின்றது.
இந்த முன்னேற்றகரமான செயற்பாட்டின் ஆணிவேரில் அத்திவாரக் கற்களில் ஒருத்தி தான் மேஜர் சோதியா.
முதன்முதலில் மகளிர் படைப்பிரிவில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சரியான பாதையில் மகளிர் அமைப்பை வழிநடத்தியதன் மூலம் நிர்வகிப்பதற்கும் தலைமை வகிப்பதற்கும் பெண்களும் தகுதியானவர்கள் தான் என்பதை நிரூபித்துக் காட்டியவள். தேசிய விடுதலைப் போராட்டத்துள் தம்மை இணைத்துக் கொண்ட போராளிகள் மனங்களில் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் பெண்விடுதலைப் போராட்டமும் நிகழ வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பதிய வைத்தவள் மேஜர் சோதியா.

பெண்களால் எதனையும் திறம்படச் செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவள் அவள். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது பெண்கள் பயிற்சி முகாமில் இராணுவப் பயிற்சி பெற்றதோடு நின்றுவிடாமல் தொலைத்தொடர்பு, மருத்துவத் துறைகளிலும் பயிற்சி பெற்றவள். களத்தில் தொலைத் தொடர்பாளராகவும், காயமடைந்த சக போராளிகளுக்கு மருத்துவம் செய்பவராகவும் கடமையாற்றினாள். அவள் பாசறை முழுவதற்கும் மருத்துவராகவும் இருந்தவள் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவராகவும் தொலைத் தொடர்பாளராகவும் மட்டுமல்லாமல் போர்க்களத்தில் வீரத்துடன் எதிரிப்படையை விரட்டி அடிக்கும் உரமான உள்ளம் கொண்டவள் சோதியா என்பதை நிரூபிக்க அவள் பங்குபற்றிய தாக்குதல்கள் பலவற்றைக் குறிப்பிடலாம். 1986ஆம் ஆண்டு ஐப்பசி 12ஆம் திகதி லெப். கேணல் விக்ரர் தலைமையில் அடம்பனில் இடம்பெற்ற சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல், யாழ். தொலைத்தொடர்பு நிலையத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவ முகாம் தகர்ப்பு, கோப்பாயில் இந்திய இராணுவத்தின் கவச வாகனத் தொடர் அணியினருடன் நடந்த மோதல், கல்லுண்டாயில் நடைபெற்ற இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல், சித்தன்கேணியில் இந்திய ஆக்கிரமிப்புப் படையின் டாங்கியை நிர்மூலமாக்கிய தாக்குதல், முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் இந்திய இராணுவத்தினருடனும் சிறிலங்கா இராணுவத்தினருடனும் நடைபெற்ற தாக்குதல்கள் என்று தொடர்ந்து கொண்டே போகலாம்.
தேசவிடுதலையோடு பெண் விடுதலையும் கிடைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தன் உடல்நிலையைச் சிறிது கவனிக்காது ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்துக் கொண்டிருந்த அவளை துரத்தி அடிக்க முடியாத எதிரியாக வந்த நிமோனியா காவு கொண்டது. அவள் சாதிக்க நினைத்த சாதனைகளையோ வென்றெடுக்க நினைத்த போராட்டத்தையோ நாம் மறந்துவிட மாட்டோம் அதற்காக உழைப்போம் என்ற நம்பிக்கையுடன் அவள் தன் விழிகளை மூடிக்கொண்டாள்.
எமது போராட்டத்தில் மரணிக்கும் ஒவ்வொரு போராளியும் தனித்துவமானவர்கள். அவர்கள் ஒவ்வொருவரின் இழப்பும் ஈடுசெய்ய முடியாதது. அந்த வகையில் மகளிர் படையின் பரிணாம வளர்ச்சியில் தனது செயற்பாடுகளூடாக படிப்படியாக தலைமைத்துவப் பண்புகளை அடைந்து கொண்டு சரியான முறையில் எமது மகளிர் படையை வழிநடத்திய சோதியாவின் இழப்பும் ஈடுசெய்ய முடியாதது.
“எந்த நோக்கில் எமது விடுதலை இயக்கம் தோற்றம் பெற்றதோ அந்த நோக்கத்தை நாம் நிறைவேற்றி வைப்போம்.” என்ற நம்பிக்கையுடன் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட எமது போராளிகளின் கனவை நனவாக்குவோம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்.
நன்றி: ஈழநாதம் 1991.01.11
https://noolaham.net/project/238/23771/23771.pdf

