இன்று காலையிலும் மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையில் வாய் பேச முடியாத கால்நடைகள் சட்டவிரோத சிங்கள குடியேற்றவாசிகளால் துடிக்கத் துடிக்க சுடப்பட்டுள்ளன
300,000-க்கும் அதிகமான கால்நடைகளை நம்பி வாழும் 978 அப்பாவி தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரம், இன்று நடுக்காட்டில் அநாதையாக நின்று இரத்தக் கண்ணீர் வடிக்கிறது
தலைமுறை தலைமுறையாகத் தமிழர்கள் கால்நடை மேய்த்த பரம்பரை புல்வெளிகள், சட்டவிரோத சிங்கள அத்துமீறல்கள் துவம்சம் செய்யப்படுகின்றன.
மயிலத்தமடு – மாதவனை பகுதியில் மட்டும் சுமார் 2,500 ஏக்கரையும் தாண்டிய மேய்ச்சல் நிலங்கள் சோளம் மற்றும் பிற பயிர்ச்செய்கைக்காக சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் வி*ஷம் வைத்தும், து*ப்பாக்கியால் சு*ட்டும், வெ*டிவைத்தும் 1,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொடூரமாகக் கொ*ல்லப்பட்டுள்ளன.
“உங்கள் மாடுகள் எங்கள் பகுதிக்கு வந்தால் சுடுவோம்; உங்களையும் விடுவிக்க மாட்டோம்” என அத்துமீறிக் குடியேறியவர்களால் பண்ணையாளர்களுக்குத் தினமும் மரண பயமும் கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் எந்த அரசியல் சம உரிமையையும் கேட்கவில்லை; “எங்கள் வயிற்றுப் பிழைப்பைச் சிதைக்காதீர்கள், எங்கள் கால்நடைகளையும் எங்கள் உயிரையும் காப்பாற்றுங்கள்” என்றுதான் கையேந்திப் பிச்சை கேட்கிறார்கள்.
மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனா, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கே என நாட்டின் உச்ச ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.
தற்போது அநுர குமார திசாநாயக்க தலைமையிலான JVP ஆட்சியும் வந்து இரண்டு வருடங்களை நெருங்கிவிட்டது.
ஆனால், தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தின் கோரமுகமும், அரச புறக்கணிப்பும் மட்டும் எள்ளளவும் மாறவே இல்லை
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் மங்கோலியா நாட்டின் முயற்சியால் இந்த 2026 ஆம் ஆண்டு ‘மேய்ச்சல் நிலங்கள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான சர்வதேச ஆண்டாக’ (International Year of Rangelands and Pastoralists – IYRP) உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்படுகிறது.
உலக நாடுகள் அனைத்தும் கால்நடை வளர்ப்போரைக் கொண்டாடிப் பாதுகாக்கும் வேளையில், இலங்கையிலோ அதற்கு முற்றிலும் முரணான கொடூர அநீதியும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் அரங்கேறுகின்றன.
இலங்கை தனது நாளாந்த பால் தேவைக்கு சுமார் 35% – 40% மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது.
எஞ்சிய தேவைக்காக ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுப் பால் மாவு இறக்குமதிக்கு வாரி இறைக்கிறது.
மறுபுறம், நாட்டில் 15.3% முதல் 17.1% வரையிலான பிஞ்சுக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுத் தவிக்கும் இந்த வேளையில், மலிவான விலையில் புரதச்சத்துமிக்க பாலை வழங்கக்கூடிய உள்ளூர் பால் உற்பத்தியைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைத்து சாம்பலாக்குகிறார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் நாளாந்த பால் உற்பத்தியில் கணிசமான பங்களிப்பை வழங்கும் இந்த மேய்ச்சல் நிலம், கிழக்கு மாகாணத்தின் மிகப்பலமான பொருளாதார ஆதாரமாகும்.
வாய் கிழியப் பேசப்படும் “ஒரே நாடு! ஒரே சட்டம்!” என்ற கோஷம், தமிழ் பண்ணையாளர்களின் வாழ்வுரிமையும் அவர்களின் மாடுகளின் உயிரும் பறிபோகும்போது மட்டும் எங்கே போய் ஒழிந்து கொள்கிறது?
இது வெறும் பண்ணையாளர்களின் பிரச்சினை மட்டுமல்ல; கிழக்கின் பொருளாதாரத்தையும் தமிழர்களின் உரிமையையும் வேரோடு அறுக்கும் திட்டமிட்ட அநீதி
ஒரு இனமொன்றின் குரல்
