40வது ஆண்டு நினைவின்
சுமையில்….
ஒரு துளி…..
1985 April 09
பகல் நேரம்
மன்னார் இலுப்பைக்கடவை படகுதுறையிலிருந்து
அணிகளை ஏற்றிச் செல்வதற்கான படகுகள் நான்கு( 04)
ரவியப்பா தலைமையில்
புறப்பட்டுவிட்டன.
கப்டன்ரகு, கப்டன்பழனி, லெப் கேணல் டேவிட் போன்ற
மிகவும் பலம்வாய்ந்த படகு ஓட்டிகள் கூட வருகின்றனர்.
தளபதி விக்டர் சகலரையும்
துரிதப்படுத்துகிறார்.
தளபதி ராதாவும் அதே வேகம் காட்டுகிறார்.
மீனவர்களால் பயன்படுத்தப்படாத
சேற்றுப் பகுதியான கரையில் இருந்து புறப்பட வேண்டும்.
மக்களின் பார்வையிலிருந்து விலகி
சற்று தொலைவில் மறைவில் இருந்த அந்தப் பகுதியானது,
கடல்நீர் ஏறி, இறங்கி
சேற்று நிலமாக,
கண்டல் ,கண்ணா பற்றைகளால் சூழப்பட்டிருந்தது ,
இவற்றைக் கடந்து
அறுத்தோடும் சிற்றாறுகள் தாண்டியும்
உற்சாகத்தோடு நகர்வு தொடங்குகிறது.
தளபதி குமரப்பா
கோல்சர் பாபு ஆகியோர்
எந்தப் படகில்?
பகல்வேளை விரைவாகக் கடந்து செல்கிறது.
ஆயுதங்கள், வெடிபொருட்கள்
வோக்கி டோக்கிகள் அனைத்தும்
நீர் புகாமல், காப்பிற்காக
பொலித்தீன் சுற்றப்பட்டு, சுமைகளுடன் அணிகள் படகில் ஏற்றப்படுகின்றன.
படகுப் பயணம் தாமதமாகிக் கொண்டிருப்பது
சிறு பதட்டத்தை தருகிறது
பகல் நன்றாக சாய்ந்து விட்டது.
RPG அப்துல்லா,
அர்ச்சுனா,
றீகன்( பருதி),
ஜோன்சன்,
ரகீம்,
வேணு
இப்படி
மன்னார்- யாழ் படையணிகளின் ஒருங்கிணைவு இன்னும் உத்வேகத்தைத் தருகிறது.
விக்டர் அண்ணன் எத்தனையாவது படகில் சென்று கொண்டிருக்கிறார்?.
அருகில் இருப்பவரை
இது குரு இது தர்மா தான் என அடையாளம் தெரியாத
இருட்டாக மாறிக் கொண்டிருந்தது.
படகு இயந்திரங்கள் உறுமி, ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்பட்டு,
கடற்பரப்பில் சற்று
அகன்று விரிந்து ஓடிக்கொண்டிருக்கின்றன.
படகு பயணத்தின் இடையில்
விடத்தல் தீவிற்கு அண்மித்த மேற்கடலில்,
வழிகாட்டிச் சென்ற படகின்
வெளி இணைப்பு இயந்திர சக்கரம்
(Propeller) மீனவர் வலையில் சிக்கியதால், பயணத்தில்
சிறு தடங்கல் ஏற்பட்டு விடுகிறது
தரையிறக்க நேரம் தாமதமாகிறது,
எனினும்,
துரிதமாகச் சரிசெய்து
ஏனைய படகுகளுடன்
விரைகின்றது.
நான்கு (04)படகுகள்,
சுமார் 80 வரையிலான புலிவீரர்கள்.
அதோ …அங்கே தெரிவது
தள்ளாடி முகாமின் சுடர்பரப்பு.
அதோ …பள்ளிமுனை.
அடுத்து,
மன்னாரின் நகர்பகுதி சுடர் சற்று பரந்து காட்சி தருகிறது.
குளிர் காற்று சில்லிடுகிறது.
சூட்டியும் ,கிளியும் ஒன்றாகத்தான் இருப்பார்களா?
தளபதி சாஜகன்
சீறி எழுமுன்
அமைதியாக இருப்பது இருளில் தெரிகிறது.
இன்னும் சற்றுத் தொலைவில் எருக்கலம்பிட்டி கிராமத்தின்
சுடர் பரப்பு வான விழிம்போடு தொட்டு தன்னை அடையாளப் படுத்தியது.
இதன் இடைத்துண்டு பரப்புத்தான் குறிபுள்ளி.அது
ஊசிமுந்தல் குடா நீர் ஏரிப் பகுதி
இங்குதான் தரையிறக்கம்.
கடல் அலைகள் சில தெறிந்து எழுந்து
முகம் துடைத்து போகிறது.
தாமதமாக வந்து சேர்ந்தாலும்.
பாரிய இடர்பாடுகள் ஏதும் இல்லை.
தரையிறங்கும்
படகுப் பயணம்
நிறைவுறுகிறது.
அடுத்து,
சேறும், செறிந்த உப்பும் சேர்ந்த அந்த பகுதி
அதிக சிரமத்தை தரக்கூடிய
இந்த வழிதான்,
இரகசிய நகர்விற்கு மிகவும் பாதுகாப்பானதாகவும்,
பொருத்தமானதாகவும் இருக்குமென,
தளபதி விக்டரால் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
சேற்று ஓடையை ஊடறுத்து கால்நடை
நகர்வு தொடங்கியது.
மழைக் குணமும், இல்லை.
குளிரும் இல்லை,
வானில் நட்சத்திரங்களும் இல்லை.
இருள் என்ற இயற்கை , உற்ற நண்பாக கூடவே பயணித்தது.
இருட்டே,
வானமே,
கடலே,
கடல் அலையே,
கடல் காற்றே நன்றி.
நாங்கள் விக்டரின் தோழர்கள்.
ஊசிமுந்தல்
குன்றும் ,குழியும்
இடுப்புவரை தண்ணீர்,
சில இடங்களில் நெஞ்சுவரை
தண்ணீரூடாக.
கால்கள்
நடக்க நடக்க,
புதையுண்ட கால்களை இழுத்து தூக்கி வைக்க,
கால்கள் சோர்வடைகின்றன.
காவு கொடுத்து தூக்கிச் சுமக்கும்
சக்கைக் கான்கள் (வெடிமருந்து கொள்கலன்கள்)
தோள்ச் சுமையை அதிகரித்து,
தோளைவெட்டி
தோளை விறைக்க வைத்து,
தலை , முகம் வியர்த்துக் கொட்ட,
மூச்சு வாங்க, வாங்க,
சேற்று வழிப்பாதை
உரித்து வாட்டி எடுத்தது.
மனதுமட்டும் ஏன் களைப்படையவில்லை.?
ஏன் சோர்ந்து போகவில்லை.
போலீஸ் நிலைய தகர்ப்பு என்பதில்
எழுந்த உள்ளுணர்வு
மனதை மிதக்கவிட்டது
விக்டரும்
ராதாவும் நகர்த்தும் விறுவிறுப்பான போர் பயணம் இது.
என்னதான் வந்திடப்போகிறது.
புலிகளின்
வரலாற்றில்,
இராணுவ தாக்குதல் ஒன்றிற்கான
தரையிறக்க நடவடிக்கை யின் நாற்பது ஆண்டு வரலாற்றை
புதிய பரிமாணத்தில் தொடக்கி வைக்கிறது.
இந்த நகர்வு.
தரையில் மிதந்து
சீருடைகள், ஆயதங்கள்,
அணிகளின் ஆள் இருப்பு சரிபார்க்கப்படுகிறது.
அப்பாடா,
நீண்ட பெருமூச்சு.
பொலித்தீன் கவர்கள் அகற்றப்பட்டு, உருமறைப்புச் செய்யப்படுகிறது,
உடல் ஊறி
உப்புப் படிவுகளை பொருட்படுத்தாமல்
தரைவழி நடை பயணம்
தொடர்கிறது.
Man/St Xavier’s College அமைந்திருந்த பின் பகுதியை அண்மித்து,
பரந்துவிரிந்த ஆலமரம்
அதன் ஒருபக்க வேலி,
அதன் கரைபிடித்தபடி
சிற்றொழுங்கையால்
அணிகள் வருகின்றன.
இந்த கல்லூரியின் சுற்றாடல் இருள் மயமாகி அமைதி காத்தது.
தன்னை செதுக்கி
அறிவுச்சுடரை ஏற்றி வைத்து,
தலைமை தாங்கும் நற்பண்பினை ஊன்றி விதைத்த கல்லூரிக்கு
நன்றி நன்றி நன்றி என
மனது துடிக்க கால்கள்
அணிவகுப்பில் இணைகிறது.
எவருக்கும் வாய்த்திராத
இந்த சரித்திர நாயகனின்
வரலாறு, இன்னுமோரு
அலெக்கஸ் கெயிலின்
நாயகனாக
நம் தளபதி விக்டர்
உலகில் வலம் வரவேண்டும்.
விக்டரின் இலட்சியக் கனவும்,
தமிழ்மக்களின் விடுதலைக்கான
அவசியமும் சர்வதேச அரசியலின் வாசல் திறந்துவைக்கும்.
முன்னால்
தலைமன்னார் பிரதான வீதியை, சத்தமில்லாமல் குறுக்காக கடக்கவேண்டும்.
தார்வீதியில்
சேறு ஒட்டிய
கால்களால் ஓங்கிய ஓரிரு தட்டுகள்….
யார்ரா அது?
சத்தமில்லாமல் வரும்படி இடையில் ஒரு அதட்டல்
அடுத்து மக்கள் குடியிருப்பு
முன்னால் மன்னார் பொது விளையாட்டு மைதான மதிற்சுவர் பின் கரையோர ஒழுங்கை ஊடாக அணி நகர்கின்றது.
தூரத் தூர வீதியில் அமைக்கப் பட்டிருந்த மின்சார கம்பங்களிலிருந்து
மின்விளக்குகள்
மங்கலான வெளிச்சம்
நடுக்கத்தில்
ஆடி ஆடி கிடந்தன.
அணிகள் மெல்ல ஊருகின்றன.
வலதுபுறம் அமைந்திருந்த வீட்டு முற்றத்தில்
T V பெட்டி வெளிச்சம் தெரிகிறது.
அதற்கு முன்னால்
சனங்கள்
சப்பாணி கட்டி இருந்து கொண்டு சினிமாப் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெட்டி வெட்டி வெளிச்சம் வருகிறது,
கதைவசனம் காதில் தொர்கிறது.
கமல் – சிறீதேவி படம் போல இருக்கே?
மக்கள் எல்லோரும் மெய்மறந்து
T V க்குள் கண்களை செருகிக் கொண்டிருந்தன.
எவருக்கும் எதுவும் தெரியாது.
நடுச்சாமம் 12 மணி தாண்டிவிட்டது.
புலிப்படை அணிகளின் நகர்விற்கு இடையூறில்லாமல் போனது நல்ல வாய்ப்பாக இருந்தது.
நகரும் அணியில், முன்னும் பின்னும் வருபவர்கள்மீது மெல்லிய வெளிச்சம் பட்டு தெறித்தது.
உள்ளூர ஒரு மிடுக்கு,
பச்சை சீருடையுடன்
ஒன்றை வரிசையில்
தளபதி விக்டரின்
வீர வாசனை
நாசியில் பட்டு தெறிக்க,
நெஞ்சை நிமிர்தித் தரும் அவனது வீரநடை ,
அணிகளைப் பின் தொடர வைக்கிறது.
பொது விளையாட்டு மைதானத்தின் பின் பக்கமிருந்து
அடுத்த திருப்பம்
இடதுபக்கம் மதில்கரை ,
வலதுபுறம் வீடுகள்.
தென்னமர ஓலைகளின் அமைதியான தலைவருடல் இதமாக்கி வழி அனுப்புகிறது.
நிசப்தம்…
நள்ளிரவு சற்று தாண்டுகிறது.
சிலநிமிட வேக நடை,
வைத்தியசாலை பிராதான வீதியில் ஏறி
வலது பக்கமாக ஆஸ்பத்திரி நோக்கி
வீதியின் கரைபிடித்து நடை தொடர்கிறது.
கடல் நீரில் நனைந்த இராணுவ சீருடைகள்
நடக்கும்போது
சொர சொரப்பு
உரசல் சத்தம் மட்டும் இரகசியமாய்
துணை சேருகின்றன.
மன்னார் பொலீஸ் நிலையத்தினுள் இன்னும் சில நிமிட நேரங்களில் பொங்கல் திருவிழா நடைபெறப் போகிறது.
பயணத்தில் நிறைய தோள்ச் சுமை.
சற்றுமுன்னர்…
ஊசிமுந்தல் சேற்று நீரேரி கடந்து வெளியேறி…
அனைவரும் அடுத்தடுத்து
ஒற்றைப்பட வரிசையில் நிறுத்தப்படுகின்றனர்.
தளபதி விக்டர் தனியாக…
அனைவரும் விக்டரை முகம் பார்த்தபடி
ஆயுதங்களை நிமிர்த்தியபடி நிற்க..
ஒவ்வொரு வீரருக்கும்
முன்னால் கிட்ட நெருங்கி ,
தனி தனியாக
கட்டளை வருகிறது…
லோட்,
டிக் டிக்..
சேவ்ரி..
டிக். ஓகே
லோட்…
சேவ்ரி…
விக்டரின் கம்பீர குரல் ஆணையில்,அனைத்து ஆயுதங்களும் ரவை ஏற்றம் செய்பட்டுவிட்டது.
பரீட்சை பார்த்தலுக்கான விக்டரின் வீரநடை
நள்ளிரவில் மென் இருட்டில்
சர்வதேச புகழ்
கிளின்ற் ஈஸ்ற்வூட்டை
நினைவு படுத்தியது.
அது திரை.
இது நிஜம்.
விக்டரின் மெய்காப்பாளராக நிழல்போல் காத்துநின்ற..
பின்னாளில் களங்களில் முள்ளிவாய்க்கால் வரை பிரகாசித்த சாதனைத் தளபதி
பிரிகேடியர் பானுவும்
விக்டரால் புடம் போடப்பட்டவர் என்பதும்
இன்னுமொரு தேடற்கினிய வரலாறாய் நீள்கிறது.
ஆகவே வரலாறு இன்னும் வளரும்.
இப்போ
அணிகள் தயார்..
ஆயுதங்கள், வெடிமருந்துகளின்
சுமையோடு
மன்னார் ஆஸ்பத்திரி – தலைமன்னார் வீதியின் வலதுகரை பக்கமாக அணிகள் நகர்ந்த வண்ணம் இருக்கின்றன..
.வெறிச்சொடிக் கிடந்தது அந்ததெரு.
வீடுகள் சனங்களின்
பேரமைதியானது
நகர்விற்கான
அருமையான தருணமாக
வாய்ப்பு தந்தது.
வாழ்க மக்கள்…
பக்கத்தில் வந்த நண்பவன் சொல்லிமுடித்தான்.
சத்தமில்லா சிரிப்பு
கன்னத்தை கிள்ளியது.
சில மீற்றர் தூரத்தில்
சென் சேவியர்ஸ் பெண்கள் கல்லூரியின்
சற்று முன்னால்
சடுதியாக பிரதான வீதியை குறுக்காக கடந்து,
உப்புத் தரவையில் இறங்கி,
சிறிய மைதானம்,
கல்விக் கந்தோர் மற்றும்
ஒரு சில வீடுகள்.
பதட்பமில்லாத சின்ன சின்ன மின்வெளிச்சம்.
சேவல்களுக்கான நேரம் இன்னும் புலரவில்லை.
சேவல் கூவுவதற்கான
எந்த வாய்புமில்லை.
நேரமோ விரைகிறது .
முன்னால் நமது
பியூஸ்லஸ்
தளபதி குமரப்பா வுடன் கிசுகிசுத்துக் கொண்டு நடப்பதும் தெரிகிறது.
சூட்டி,அசோக் ,
முத்து ,கிளி இதே பயணத்தில் தான்.
இப்போது
இன்னுமொரு பிரதானவீதி கடக்கும் தருணம்.நகர்பகுதி, ஆலையப் பகுதி
இருகரையும் நன்றாக அவதானிக்கப் படுகிறது.
சோழகக் காற்றின் அனுங்கல்மட்டும் மோதிச்செல்ல
புனித செஸ்ரியார் பேராலயத்தின் ஒருபக்க மதில்கரை மறுபக்கம் வீடுகள் இடையேயான குச்சொழுங்கையில்
இருட்டில் புலிகள் இறங்கிவிட்டனர்
பூவரசு மரங்கள் அமைதியாக,
மிக மரியாதையாக அணிவகுத்து நிற்க …
புலிகளின் அணி
நம் தெருவின் நாயகன் விக்டரோடு
தளபதிகள் ராதா, பிரபா, சாஜகன், ஜனனன், குமரப்பா அணிகளோடு செல்வதை ஆசையோடு அவதானித்தன.
விழித்திருந்த சில அணில்கள்,
நிலத்தில் விழுந்த இலைச் சருகளின் கலைவு ஓசையை எழுப்பவிடமால் மட்டுப்படுதுமாறு
புனித செபஸ்ரியாரை கையேடுத்து கும்பிட்டன.
அணி நகர்ந்து…
பின்வீதிக்கு ஏறிவிட்டது.
அது பனங்கட்டிகொட்டு வீதி
தண்ணீர் பைப் அடி…
உவர்கசியும் நிலம்..
இது
பியூஸ் நடந்த வீதி….
அதோ
நம்ப பிள்ளை போறான்
அந்த வீதிக்கு தனது
மகனின் கால்தடத்தின அதிர்வு புரியாமலா இருந்திருக்கும்.
அப்புகாமியும்,
லொகு பண்டாவும்
சொந்தம் கொண்டாடக்கூடிய
நிலமா இது.
கிட்டண்ணின் ரகீமும் ஹென்றியும்
அத்துடன்
மேஜர் நரேன்,
தினேஷ் என்னும் சில தோழர்கள் சேர்ந்து
புகுந்து விளையாடச் செல்லும்
வீதியாக பெருமைப் பட்டுக்கொண்டது.
இதோ
உன் ஆக்கிரமிப்பு கோட்டையை
உருத்தெரியாமல் அழிக்க
நம்ம ஊரவனே வருகிறான்
இருடா மகன…
அந்த உவர் நிலத்தின் பேச்சுத் தமிழுக்கு எத்தனை அழகு,
அதன் வாழ்த்துதலுக்கு எத்தனை சக்தி.
அணிகள் முன்னே நகரந்து வருகின்றன.
இடது மூலையில்..
Station Road அருகில்…
தென்னைமர சூழலில்
ஓர் வீடு.
வீரயூக நாயகன்
புகழ் வென்ற தபளதி
விக்டரின் வீடு அது.
அம்மா அப்பாவோடு
சகோதர சகோதரரிகள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நேரம்
ஊர்மக்களின் சாதாரண
இரவுப் பொழுதசைவில் விக்டரின் குடும்பமும்.
யாருக்குத்தெரியும்..
எத்தனை ஆயிரம் சின்ன சின்ன இனிய நினைவுகளால் மனம் சல்லடை போடப் பட்டிருக்கும்.
இந்த ஆச்சரியத்தை
வரலாற்று அபூர்வத்தை
எத்தகை வரலாற்றில்
காணக்கிடைக்கும்.
எட்டித் தொடும் தொலைவில் இருக்கும் சிறிலங்கா போலீஸ் நிலையத்தைத், தகர்த்து எறிய தலைமை தாங்கும்
தமிழ் போர்த் தளபதி
இங்குதான் பிறப்பெடுப்பான் என்று யாரும் வழிகாட்டவில்லை.
The Old man and the Sea
(கடலும் கிழவனும் )
— புகழ்
நவீன
சாண்டியாகோ
எங்கள் ஊரிலும்
மருசலீன் பியூஸ்வடிவில்..
புலிப்படை தளபதியாக
மீண்டும் பிறப்பெடுப்பான் என்பதை வரலாறு நன்றாக அறிந்தே வைத்திருக்கிறது.
உலகம் தழுவிய
இளைய தலைமுறை
இதனை கரிசனையோடு பரிசீலிக்கும்.
தனது வீட்டின் முன்னால் நீண்டு செல்லும்
பிரதான புகையிரத வீதியை
மின்னல் வேகத்தில் கடந்து செல்ல கட்டடளையிட்ட விக்டர்,
குமரன் தியேட்டர் ,
மீன் மார்கட் போகும்
மண் வீதியின்.
ஓர் மூலையில் அணிகளைக் குவியச் செய்கிறார்.
நிமிடங்கள் நெருங்கு கின்றன….
வெளிச்சம் வீடியுமுன் ,
தாக்கிவிட்டு
படகு ஏறவேண்டும்…
முன்கூட்டியே ஒத்திகை பார்த்தபடி அணிகளாக பிரிகின்றனர்..
ஐடியா வாசு
(கப்டன் வாசு)
அணி
தள்ளாடியிலிருந்து வரும் அணியை தடுத்து நிறத்தவேண்டும்..
விரைவாக கரையோரமாக நகரத்தொடங்கியது.
மருத்துவர் விஜனும் இணைந்து கொள்கிறார்.
போலீஸ் நிலைய முன் அரங்கு,
தளபதி ராதா
தளபதி பிரபா அணி கவனத்தில் விடுபடுகிறது.,
பக்கவாட்டில்
தளபதி சாஜகான்
தளபதி குமரப்பா
தளபதி ஜனனன் அணியினர்.
அணிகள் ஒவ்வொன்றாக சத்தம், ஆர்பாட்டமின்றி
தாக்குதல் நிலைகளுக்கு நகர்ந்து நிலையெடுத்துக் கொள்கின்றன.
ஸ்ராட் எனும்
தளபதி விக்டரின்
கட்டளைக் குரலுக்கான காத்திருப்பு நேரம்.
வாசு வாசு.. ஓகேயா?
ஓகே ஓகே…
சாஜகான் சாஜாகன்…
ஓகே .ஓகே
ராதா
பிரபா.
ஓகே ….
கடைசி மணித்துளிகள் மீதி.
குமரன்
ஜனனன்…
ஓகே ஓகே…
சகலரது ஆயுதங்களினதும்
சேவ்ரி லிவர் விடுபடுகிறது.
சுடும் நிலைக்கு துப்பாகிகள் தயாராகின.
காத்திருப்பு…
அமைதி…
அதுவரையும்
- குரல் நாண் அதிராத
காதோடு காது வைத்தபடி கிசு கிசு என
மிக மிக மென்மையான,
உறுதியான குரலாகவும்
தளபதி விக்டரின் குரல் அத்தனை நிதானமாக கட்டளைபிறப்பித்துக்கொண்டிருந்து.
காற்றின் ஒத்துழைப்பு
நாவில் குடியேறி
ஷ் ஷ் ஷ் என்றே கதையாடல்கள் நெளிந்தன.
இருள் விழுங்கப்போகும்
கணநேரம் வந்துவிட்டது.
மின்சாரத் துண்டிப்பிற்கான கட்டளையும்
OFF/OFF… என இருமுறை விக்டர் உச்சரிக்க
போலீஸ் நிலையத்தை இருள் கவ்வ
நொடியில்…
பிரபா ஸ்ராட்
சாஜகான் ஸ்ராட்
RPG உந்துகணைகள்
சீறிவெடித்து தொடக்கி வைக்கின்றன.
அடுத்தடுத்து..
ராதா ஸ்ராட் …ராதா ஸ்ராட்..
குமரன் குமரன் …
(லெப் கேணல் குமரப்பா)
Start …Start…
ஜன்னன்.. ஸ்ராட்
அணித் தலைவர்களின் பெயர்கள் தனித்தனியாகவும் துல்லியமாகவும்
உச்சரிக்கப் படுகின்றன.
சமநேரத்தில்
அணிகளைளின் துப்பாக்கிகள் பக்கபலமாகி இடியும் முழக்கமுமாக
சிங்கள பொலீஸ் நிலையம் பொடிப் பொடியானது,
தப்பி பிழைப்பு…
சரணடைவு…
ஒரு பாடவேளை போல முடிவுக்கு வருகிறது.
ஆயுதங்கள் அள்ளி சேர்கப்படுகிறது.
தரித்து நின்ற
போலீஸ் வாகனங்கள்
தகர்த்து எரிக்கப்படுகின்றன
இவற்றை
கடல்வழியாக கொண்டு சேர்க்கும் சாதகம் இல்லாத
கடல்வழி நகர்வாக அமைந்ததே இதற்குக் காரணம்
சகல கட்டிடங்கள் தகர்த்து சிதைக்கப்டுகின்றன.
தகர கொட்டகைகள்
கிழிந்து சின்னா பின்னமாகின.
கடல், ஏரி, சேறு,
சுமை, பயிற்சியின் கடுமை, அர்ப்பணிப்பு, வீரம், துல்லியம், துணிவு….. கலந்து
நடாத்திய பொங்கல்
பொங்கிவழிந்து ஓடியது.
இதுவரை நம்மவரில்
எந்த சேதமும் இல்லை..
நேரம் விடிகிறது.
தள்ளாடி படைத்தளம் விழித்துக் கொள்கிறது.
ஆட்டிலறி எறிகணைகள் வரத்தொடங்கின.
பரிபூரண வெற்றி
பின்வாங்கும்
கட்டளை பிறக்கிறது
மன்னார் ஸ்ரேடியம்
தண்ணீர் தாங்கியடியில்
மீளவும் இணைவு,
அள்ளிய ஆயுதங்கள்
சரணடைந்த போலீஸார் இருவர்,
இ .போ. ச பஸ்வண்டி
சபேசனால் எடுத்து வரப்படுகிறது.
அணிகள் ஏறிக்கொள்கின்றன.
கடற்கரைப்பகுதி
வற்றிப்போய் உள் இழுத்துக் கிடந்தது…
இருப்பினும்
வரும்போது இருந்த எந்த சிரமும் இருக்கவில்லை.
ஒருவர் முகங்களை
ஒருவர் பார்த்து புன்னகைக்கும் விடியலும் எழுந்தது.
தள்ளாடியிலிருந்து
கரை நோக்கி ஏவப்பட்ட எறிகணைகள்
நெருங்கி வீழ்ந்து வெடித்து சிதறின.
சேதமும் இல்லை
சேறு எதுவும் எம்மை
அப்பிக்கொள்ளவுமில்லை
படகுகள் தயாராகி நின்றன.
எல்லோரும் ஏறிக்கொள்ள..
இலுப்பைக்கடவை படகு துறைநோக்கி
வெற்றிகரமான
பின்வாங்கல்.
திரும்பி பார்க்கும் தருணம்
புகை எழந்தவண்ணம் இருந்தன
தோழன் அப்பி – சபேசன் மட்டும்
தவறவிடப்பட்டுவிட்டன் கனத்த இதயத்துடனும்
கரையை அண்மிக்கிறோம்.
கரையை நெருங்கும்
கண்ணுக்கு எட்டிய தொலைவில்
எங்கள் சனங்கள் குவிந்து
காத்திருப்பது மனதுக்குள் சிலிர்ப்பை தந்தது.
கரைசேர்ந்த எம்மை மக்கள்
அள்ளி அணைத்துக் கொண்டனர்.
எங்கே எங்கள்
வீரயுக நாயகன் விக்டர்?
அவரை
அன்பால் மொய்த்து
மகிழ்சியில் நிறைந்தனர் மக்கள்.
தளபதி விக்டரின்
நாற்பதாவது ஆண்டு
நினைவில் நனைந்த சுமையின்
ஒரு சிறு பொழுது இது.
நினைவுச் சுமையில்
அ. சுரேஷ் (மன்னார்)
12.10.202
