கலையை உயிருக்கு மேலாக நேசித்து, வில்லிசைக் கலையை வாழ்வாகக் கொண்டதோடு, சினிமா, நாடகம், இலக்கியம், பாடல் எழுதுதல், புத்தகப் படைப்புகள் என பல்துறைகளிலும் ஆளுமை மிக்க கலைஞராகத் திகழ்ந்த நாச்சிமார் கோயிலடி ராஜன் அவர்களின் நினைவினை போற்றும் வகையில், பாரிஸ் லாச்சப்பல் சோதியா மண்டபத்தில் ஒரு சிறப்புமிக்க நினைவுப் பகிர்வு நிகழ்வு இன்று 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வை ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் (LIFT) மற்றும் அவதாரம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வில் எண்பதிற்கு மேற்பட்ட கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், உறவினர், நண்பர்கள் கலந்துகொண்டு ராஜன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவரது வாழ்க்கை, கலைப் பயணம் மற்றும் சமூகப் பங்களிப்புகளை பிரதிபலிக்கும் நிழற்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், நினைவுரைகள், இசைத் தருணங்கள் மற்றும் ஆவணப்படக் காட்சியும் இடம்பெற்றன.
மேலும், அவரது சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் கலைக்கு அளித்த அர்ப்பணிப்பு குறித்து பலரும் உரையாற்றியிருந்தனர்.
நிகழ்வின் இறுதியில், ராஜன் அவர்களின் நினைவாக வரையப்பட்ட உருவப்படம் அனைவரின் கையெழுத்துக்களையும் தாங்கி குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது. அந்த தருணம் அனைவரையும் நெகிழ வைத்தது. இந்நிகழ்வு ஒரு கலைஞரின் நினைவாக மட்டுமல்ல, வில்லிசை உள்ளிட்ட பாரம்பரிய கலைகளின் தொடர்ச்சிக்கான ஒரு உறுதிமொழியாகவும் அமைந்தது.
இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு எம்மோடு துணை நின்று ஆதரவு வழங்கிய அனைத்து ஊடகவியலாளர்களுக்கும், ஒலி, இசை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மனமார்ந்து வழங்கிய அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகள். மேலும், இந்நிகழ்வை நடத்துவதற்காக தமது மண்டபத்தை எமக்கு வழங்கிய சோதியா கலைக்கல்லூரி நிர்வாகத்திற்கும் எமது ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கலைப் பயணத்தில் இந்த ஆண்டில் எமது சிறந்த பணிகளுக்கிடையே, ஆண்டின் நிறைவில் இத்தகைய ஓர் ஆத்மார்த்தமான நினைவுப் பகிர்வு நிகழ்வை நடத்த இயைந்தது எமக்கு பெரும் மனநிறைவை அளிக்கிறது.
கலை மறையாது; கலைஞர்கள் நினைவாக வாழ்வார்கள்.
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


























