கார்த்திகை போர்த்திடக் கருமுகில்
நேர்த்தியாய்ப் பொழிந்திடும்
வேர்த்திடும் வேர்களில் வீரமும் சேர்ந்தே முளைவிடும்-புகை
போர்த்திய எரிமலைக்குளம்புகள்
ஆர்த்து வெடித்திடும்-மனக்
கூட்டினுள் வெப்பம் குமுறிக்
கொப்பளித்து வெளிவரும்
பாட்டுக்கள் ஆயிரம் மாவீரப் பண்களாய்ப் பிறக்கும்
ஆண்ட நம் தமிழீழத்திசைகள்
அமைதியாய்த்துடிக்கும்-கடல்
தாண்டியே தவிப்புடன் தமிழீழத்
தாகம் தகிக்கும்
மாண்டவர் கல்லறைக்கோவில்கள்
மலர்க்கதவு திறக்கும்
மலரட்டும் மண்மடி என்றே
மாவீரம் சிலிர்க்கும்-நல்
வாழ்வொன்றைக்காணத் தலைவனின்
வழிசென்ற வீரர்
சாதனை வென்று எழுதிய
சரித்திரக் காலமிது
நாளொரு கனவில் வந்து-அவர்
நன்றாய்ப்பேசுவர்
காலாற எம்முடன் நடந்து-தமிழீழக்
கனவினைக் கூறுவர்
சோறுடன் சுவையாக உணவுகள்
சேர்ந்தே உண்பர்
சீருடையோடு ஆயுதமேந்திச்
சிரித்தபடி நடப்பர்
சிரித்து முடித்து நாம் பார்க்கையில்
கனவென்று சொல்லும் இருள்
ஆரத்தழுவிடும் காற்றில் மூச்சாய்
ஆர்ப்பரிக்கும் தோழர்களே!
வானவெளியில் ஒளியாய்
வலம்வரும் தோழியரே!
மானத்தமிழுக்காய் உயிர் துறந்து
மனங்களில் உறைந்தவரே!
வஞ்சகம் வீழத் தலைமுறை
நெஞ்சை நிமிர்த்தும் நேரம்
வந்து பெரு வல்லமை தந்து
வென்றிட வழி காட்டுங்கள்
வெல்வது உறுதியென உங்கள்
கல்லறைகளில் சபதம் கொள்கின்றோம்
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்
கலைமகள்
27.11.2025
