மெக்கானிக் கடையில் மோட்டார் சைக்கிளைத் திருத்தக் கொடுத்துவிட்டு, இருவரும் ஆளுக்கொரு திசையில் நேர் எதிராக அமர்ந்தனர். குரு ஒரு பழைய செய்தித்தாள் ஒன்றைத் தொட்டுப் புரட்டிக்கொண்டு இருந்தான்.
குருவின் செயல்கள் மாறனுக்கு அப்போதைக்கப்போது சில சங்கடங்கள் கொடுத்தாலும், அவனுடைய குணாதிசயங்களை எண்ணி அவன் உள்ளுக்குள் ரசித்துக் கொண்டான். ‘இவன் எப்படி இயக்கத்திற்கு வந்தான்? இவனது இயல்புக்கும் இயக்கத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கும் இருக்கும் இடைவெளி மிக மிக அதிகம். இவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், இவனால் ஒரு குழந்தை போலச் சுதந்திரமாக எப்படி இருக்க முடிகிறது? நாளையைப் பற்றிய கவலை அவனுக்குச் சிறிதும் இல்லை. போர்க்களத்தில் மூர்க்கத்தனமாகச் சண்டையிடுவான்; முகாமுக்குத் திரும்பியவுடன் தன் சேட்டைகளை ஆரம்பித்துவிடுவான். சகப் போராளிகளுக்கு ஆளுக்கொரு பட்டப்பெயர் வைத்துத்தான் கூப்பிடுவான்.’யாருமே இவனை கோபித்துக் கொள்வதில்லை. அவன் இருக்கும் இடம் எப்போதுமே கலகலப்பாக இருந்தது.
மாவீரர்களில் பெரும்பாலானோர் இளமை காலத்திலேயே மரணித்துப்போனார்கள். நேற்று தோளோடு தோள் நின்று போராடிய சக போராளிகள் இன்று இல்லை. ‘நேற்று நீ, நாளை நான்’ என்ற குறுகிய வாழ்க்கைக்குள், குரு போலச் சில அதிசய மனிதர்கள் மிகவும் இயல்பாகவும் ஜாலியாகவும் வாழ முடியும் என்று நிரூபித்துக்கொண்டு இருந்தார்கள்.
“தம்பி, மோட்டார் சைக்கிள் ரெடி,” என்ற குரல் கேட்டதும், ஆழ்ந்த சிந்தனையில் இருந்த மாறன் மெக்கானிக்கைப் பார்த்து, “என்ன பிழை அண்ணா?” என்று கேட்டான். “அது ஒன்றுமில்லை, பிளக்கில் கார்பன் அதிகமாகச் சேர்ந்துவிட்டது. பெட்ரோலால் சுத்தம் செய்து போட்டுள்ளேன்,” என்றார். மெக்கானிக்குக்குப் பணம் கொடுக்க, அவர் “வேண்டாம்,” என்று அறவே மறுத்துவிட்டார். “தம்பி, இது சின்னப் பிரச்சினை. அடுத்த முறை பார்ப்போம்,” என்றார்.
“குரு, வா போகலாம்,” என்றான் மாறன். “எங்கே?” என்று கேட்டான் குரு. “உன் சித்தி வீட்டுக்குத்தான்,” என்றான் மாறன். “எனக்கு ஏது சித்தி?” என்றான் குரு. “நீ உன் சித்தி வீட்டுக்குப் போவதாகச் சொல்லி விடுமுறை எடுத்தாய்,” என்ற கேள்வியை எழுப்பினான் மாறன். “எனக்கு இங்கு சித்தியும் இல்லை, மாமியும் இல்லை. ஒரு ஐந்து நாள்கள் ஜாலியாக வெளியில் சுற்றிவிட்டு வரலாம் என்று சின்னப் பொய் சொன்னேன்,” என்று கூறிச் சிரித்தான் குரு. “அடுத்து உன்னுடைய திட்டம் என்ன?” என்று கேட்டான் மாறன். “அதுதான் உன் வீடு இருக்கிறதே, வா போகலாம்,” என்று அழைத்தான் குரு. மாறன் இவனது இயல்பான குறும்புத்தனத்தை எண்ணிச் சிரித்தவாறே, “வா போகலாம்,” என்றான்.
மாறனின் வீட்டில் ஐந்து நாள்களும் திருவிழாதான். மாறனின் அம்மா இருவரையும் பார்த்துப் பார்த்துக் கவனித்தார். மாறனின் தாயின் அரவணைப்பில் குரு மிகவும் நெகிழ்ந்துபோனான். ஐந்தாம் நாள் விடுமுறை முடிந்து முகாம் திரும்பும் நேரம் வந்தது. புறப்படும் நேரத்தில் குருவின் கண்கள் கலங்கி இருந்தன. தன் தாய் தந்தையின் நினைவு வர, அதை மறைக்க முயல, அத்துக்கம் கண்ணீராக மாறி அவனைக் காட்டிக்கொடுத்தது. குருவின் ஏக்கத்தைப் புரிந்துகொண்டவளாய் மாறனின் தாய், “நீயும் என் பிள்ளைதான் தம்பி. நீ என்னை அம்மாவாக நினைத்துக்கொண்டு எப்ப வேண்டும்னாலும் நீ இங்கே வா,” என்று கைப் பிடித்து அவனைத் தேற்றினாள். குரு, மாறனின் அம்மாவைக் கட்டி அணைத்துத் தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, இருவரும் முகாம் நோக்கிச் சென்றனர்.
தன் பிள்ளைகள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையில், வீட்டு வாசலில் நின்றுகொண்டு, அவர்கள் மறைந்து போகும் வரை கனமான இதயத்துடன் கையசைத்துக்கொண்டே இருந்தாள் மாறனின் தாய்.
முற்றும்….
என் கதையைப் படித்த அனைவருக்கும் நன்றி.
“குரு” என்ற கதாபாத்திரம் ஒரு போராளியின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. சுவாரஸ்யத்திற்காகக் கதையில் சில புனைவுகளைச் சேர்த்திருந்தாலும், அந்தக் காலத்தின் முக்கிய செய்திகளைச் சுமந்துவரும் கதை ஓட்டமாகவே இதை நான் அமைத்திருந்தேன்.
பின்பு, குருவுக்குத் திருமணமாகி ஒரு மகன் பிறந்தான். 2009 ஆம் ஆண்டின் இறுதிப் போரில் அவன் வீர மரணம் அடைந்து விட்டான்
