விடுமுறை(சிறு கதை)

1 0
Read Time:5 Minute, 2 Second

“டேய், இன்னும் பலமாகத் தள்ளடா!” என்றான் மாறன்.
குருவுக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. “முடியலடா! மூன்று கிலோமீட்டர் தள்ளியாச்சு. ஸ்டாற் வருகிற மாதிரி இல்லையடா!” என்று சலித்துக் கொண்டான்.

“இன்னும் ஒரு முறை ட்ரை பண்ணுடா ” என்றான் மாறன்.
மீண்டும் தன் பலத்தை எல்லாம் ஒன்றுதிரட்டித் தள்ளினான் குரு. மோட்டார் சைக்கிள் ‘குபு குபு’ சத்தத்துடன் வெள்ளை புகையைக் கக்கியது, ஆனாலும் இயங்க மறுத்தது.

அது பழைய C70 மோட்டார் சைக்கிள். ஜப்பான் நாட்டவன் அதைப் பெட்ரோல் ஊற்றி ஓடத்தான் கண்டுபிடித்தான். ஆனால், எங்கட பெடியள் ‘சிங்கர்’ குப்பியில் பெட்ரோலை அதன் மூக்கில் வாசனைக்காக மட்டும் காட்டி ஏமாற்றிவிட்டு, டேங்க் நிறைய மண்ணெண்ணெய் நிரப்பிப் பயன்படுத்தினர். அதனால் அது அடிக்கடி தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இயங்க மறுத்தது.

குரு நல்ல வாட்டசாட்டமான உடல் அமைப்பைக் கொண்டவன். 24 மணி நேரமும் அவனுக்குப் பசிக்கும். “இவனுக்குச் சாப்பாடு போட முடியாததால்தான் இவனது பெற்றோர் இவனை இயக்கத்தில் சேர்த்து விட்டனர்” என்று சகப் போராளிகள் கிண்டல் செய்வார்கள்.

காலையில் வண்டு அரித்த கௌப்பிக் கடலை அல்லது கொண்டைக் கடலை. மத்தியானம் தேசிய உணவு – சோறும், சோயா பீன்ஸும், பருப்பும். இரவு புட்டும் பருப்பும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாட்டு இறைச்சி கறி. இதுதான் நிரந்தர மெனு (உணவுப் பட்டியல்). காலையில் ஒரு பிளேன் டீ, மாலையில் ஒரு பிளேன் டீ. இதற்கு நடுவில் வேறு எதுவும் கிடையாது.

ஆனால் குரு எந்நேரமும் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டு இருப்பான். சமையல் களஞ்சியப் பொறுப்பாளர் இல்லாத சமயமாய்ப் பார்த்து, களஞ்சியத்துக்குள் புகுந்து இரண்டு கால்சட்டைப் பை முழுவதும் சோயா பீன்ஸை நிரப்பிக் கொண்டு வருவான். அதை நாள் முழுவதும் கொரித்துக் கொண்டு திரிவான். இது களஞ்சியப் பொறுப்பாளருக்கும் தெரியும். ஆனால், அவர் கண்டும் காணாமல் விட்டு விடுவார். சில நேரம் அவனை அதட்டி விரட்டி விடுவார்.

களஞ்சியப் பொறுப்பாளர் பெரும் நெருக்கடியில் இருந்தார். “இத்தனை பேருக்கு இவ்வளவு” என்றுதான் வழங்கல் (பொருட்கள்) வரும். அடுத்த வழங்கல் வரும் வரை உள்ளதை வைத்துதான் சமாளிக்க வேண்டும். இவனையே தினமும் சோயா பீன்ஸைத் தின்ன விட்டால், வார இறுதியில் தட்டுப்பாடு ஏற்படும்.

அந்தக் காட்டில் பலாப்பழம் தவிர வேறு எதுவும் கிடையாது. அதுவும் அந்தந்தப் பருவத்தில்தான் கிடைக்கும். “எப்படியாவது இந்தக் காட்டை விட்டு ஊருக்குப் போய் நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும்” என்று அவனது மனம் உந்தியது.

ஆனால் அவனுக்குச் சொந்த பந்தம் என்று யாரும் வன்னியில் இல்லை. அவனது பெற்றோர்கள் வெளிநாட்டில் இருந்தனர். தூரத்து முறைச் சித்தி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் இருப்பதாகக் கேள்விப்பட்டான். பொறுப்பாளரிடம் தன் சொந்தங்களைப் பார்க்க வேண்டும் என்று ஏதேதோ காரணங்கள் கூறி ஐந்து நாள் விடுமுறை வாங்கி விட்டான். மாறனும் விடுமுறையில் செல்ல இருந்ததால், அவனுடன் ஒட்டிக் கொண்டான்.

ஆனால் இந்த மோட்டார் சைக்கிள் அவர்களைப் படாதபாடு படுத்தியது. இப்போது அவர்களது பயணம் நடுத் தெருவில் நின்றது. நன்றாக இருட்டி விட்டது “ஏதோ சர சர என்று கேட்கிறது! யானை!” என்று கத்தினான் மாறன்.

தொடரும்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment