தாயக சுதந்திர போராட்ட வாழ்வில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தாயகத்தின் சுதந்திர போராட்ட வாழ்வில் காத்திரமான ஒரு பங்களிப்பை தனது அரசியல் ஆளுமையால் வழங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் மற்றும் தலைமை பேச்சாளர், தமிழர் போராட்டத்தின் நியாயங்களை சர்வதேச பரப்பில் எடுத்துச்சொன்ன ஒருவராக தாயக போராட்ட வரலாற்றில் அன்ரன் பாலசிங்கம்தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள முதன்மை பெறுகிறார்.

மட்டக்களப்பில் பிறந்த இவர் பிரித்தானிய பிரஜாவுரிமை கொண்ட ஈழத்தமிழரவார். ஆரம்ப காலத்தில் இலங்கையின் தமிழ் நாளிதழ் ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியதனால் பிரித்தானிய குடியுரிமை பெற்றுக்கொண்டார்.
1970களில் பாலசிங்கம் அவர்கள் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கொரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த தமிழீழ தேசியத் தலைவர், பாலசிங்கம் அவர்களுடன் தொடர்பு கொண்டதன் மூலம் இவருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்குமான தொடர்புகள் ஆரம்பமாகியது.
1985, திம்பு பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றிய இவர், காலப்போக்கில் விடுதலைப் புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் விளங்கினார்.
தொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த அன்ரன் பாலசிங்கம் 2006 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் தனது 68ஆவது வயதில் லண்டனில் காலமானார்.
மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு “தேசத்தின் குரல்” எனும் கௌரவத்தை தமிழீழ தேசியத் தலைவர் வழங்கியிருந்தார்.

தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு பாலாண்ணை. – தமிழீழ தேசியத் தலைவர்
தலைமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
2006-12-14
எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.
பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.
பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.
எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.
ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து
“தேசத்தின் குரல்”
என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
வே. பிரபாகரன்
தமிழீழ தேசியத் தலைவர்

