தமிழர் எம்மைக் கொன்று புதைக்க
எத்தனையோ காலம் முதல் புத்தரின் பெயரால்
எத்தனிப்புகள்….
தமிழர் எம்மைச்
அழித்தொழிக்க “திட்டங்கள்”எனும் பெயரால்
சிங்கள அரசின் திட்டமிட்டவல் வளைப்புகள்….
தமிழர் எம் வாழ்வைச் சிதைத்தழிக்க
பண்பாட்டைப்பிறள்வாக்கும்
பகட்டுச் செயல்கள்…
தமிழர் எம் இன மானம் இல்லாது போகவே
“கல்விச்சீர்திருத்தம்” என்று கூறி
தரப்படுத்தல்கள்…
தமிழர் எம் அடையாளம் மறைக்கப்படவே தமிழ்மொழியை விடுத்துச்
சிங்களமொழித்திணிப்புகள்…
தமிழரே இல்லை என்றெம்மைச் சிறுமை செய்ய
இழிவான
இனக்கலப்புச் செயற்பாடுகள்…
இத்தனையும் போதாதென்று வெள்ளைவான் கடத்தல்கள்
இனங்காணப்படாத கொலைகள்
இத்தோடு முடிந்ததா….
இராணுவத்தால் கைதுகள் இரக்கமற்ற வதைகள் பின்னர்
இற்றைவரை இருப்பறியா நிலைகள் ,படுகொலைகள்..
இவை எல்லாவற்றையும் கடந்து நடந்து
எதிரே சுடர்ந்து எழுந்த எம் தலைவன் வீரத்தை
திமிர்ந்து திரண்ட எம்தமிழர் தீரத்தை
எல்லையற்ற ஈகத்தை இறைமைக்கான விடுதலை யாகத்தைக் கண்டு
அஞ்சிவெலவலத்து செய்வதறியாது விழித்துப் பின் எம்மை முழுவதுமாய் அழித்தொழிக்க வல்லரசுநாடுகள்,வாய்த்த நாடுகள்
அனைத்தோடும் கூட்டமைத்து
தமிழினத்தைகொன்றொழிக்கவே பல கூட்டம் போட்டு
சதிகளும்,சக்திகளும் கைகோர்க்க
விலை போனோரும்,பச்சோந்திகளும் காட்டிக்கொடுக்க படிப்படியான கொலைநகர்வின் பின்னர்
விளைந்தது விபரிக்கவே முடியாத இனப்படுகொலை…
குண்டுமழை ,துப்பாக்கிச்சூடுகள் கணத்துக்கோர் சாவு சுடுகாடான சொந்தமண்ணில் சாவோலம் ,பயம் உறைந்த முகங்கள்,எண்ணந்தொலைத்த மனங்கள், ஒளிமறந்த விழிகள், வழிதொலைத்த கால்கள் ,
குண்டுதுளைத்த காயங்களின்
கோரத்தை
குழறலால் தீர்த்திட முடியாக் கொடுமை…
உணவு,உறக்கம்,குளிப்பு,கடன்கழிப்பு
உற்றது,உடையது எதற்கும்
உரிமையற்ற சாப்பொழுதுகளின் எக்காளம்..
கஞ்சிக்கு வரிசையில் நிற்க கலைத்துத்துரத்தும் எறிகணைகள்
இருந்தும் மீண்டும் கஞ்சியை வாங்கிக்குடிக்க
வந்து விழுந்த குண்டுகளால் அந்த இடமே குருதியாறாக
கஞ்சியும் இரத்தமும் கலந்து ஓட …
என்ன பிழைப்படா சாமி…
உலகின் மூத்தகுடியாம் தமிழர்குடி என்றால் இப்படி
உழலத்தான் வேண்டுமா….
இதென்ன
இன்னுமிருக்கு ஏராளம்..
காயம்பட்டு நகரமுடியா எம்மவரை பெருங்குழிதோண்டி அதில்ப் போட்டுப் புதைத்தபோது எங்கள் நெஞ்சக்குழியில் என்னதான் மிஞ்சியிருக்கும் நெருப்பைத்தவிர
எதைச்சொல்ல எப்படிச்சொல்ல ?
ஒன்றாகக்கூடி எம்மைக்கொன்ற
உலகின் முன்னே நாம்
மன்றாடி நீதிகேட்கிறோம்.
கிடைத்துவிடுமா என்ன
அதற்குமுன் இன்று எம்மண்ணில் நிகழும் ஏகப்பட்ட இன அழிப்புச்செயல்களை எப்படி நிறுத்தப்போகிறோம்?
திட்டமிட்டே எம்மை உறையச்செய்யும் ,இதயத்தைப் பிளந்துபோடும்
இளம்பிள்ளைக்கடத்தல்கள்,போதைப்பொருள்ப் பரப்பல்கள்,புலன் மாற்றச்செயல்கள் வன்புணர்வுகள் , வழிப்பறிப்புகள் ,நிலச்சுரண்டல்கள் போன்றவற்றை நிறுத்த என்னதான்வழி?
முள்ளிவாய்க்காலை நினைந்தென்ன ,முப்பாட்டன் வீரத்தை வியந்தென்ன
எல்லாமும் தாய்மண்ணுக்கேயென
இறையோரானவரைப் புகழ்ந்தென்ன
செயல்களின் துரிதமாற்றம் நிகழாவிடில்
எமது தாய்மடி
எமக்கில்லை…
நான்சரி,நீ பிழை,என்று நாம் அடிபட அடிபட
நமது மண்,நமது முதுசம்,எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும்
அதைக்காப்பாற்ற எப்படிக் கைகோர்க்கலாம் என்று பார்ப்பதே
எம்மினத்தை
எம்மண்ணைக்காக்க எஞ்சியிருக்கும் வழி..
முள்ளிவாய்க்காலை நினைப்பதோடு முடிந்ததா எம்பணி?
எம்மைக்கொன்றவனை வென்று
எம்நாட்டைக்காக்க
என்னவழி?
நெஞ்சக்குழிக்குள் நெருப்பாய்
இன்னும்
மூண்டெரிகிறது விடுதலைதாகம்…
அரியாத்தை
16.05.2023
