சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகர் விவேக் நேற்று காலை 11 மணியளவில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். விவேக்கின் மனைவியும் மகளும் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவரது இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விவேக்கிற்கு மூச்சுத்திணறல் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு எக்மோ கருவி பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு விவேக் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மாலை 4 மணியளவில் விருகம்பாக்கத்தில் இருந்து, மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு அவரது உடல், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூகச் சேவையை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன், அவரது உடலை அரசு தகனம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

அதன்படி நடிகர் விவேக்கின் உடலுக்கு, 78 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் நடிகர் விவேக்கின் உடல், மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.