“இறுதி வணக்கம்”
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஐயா நினைவில் இனம்வாடி நிற்க
நவில்கின்றோம் உள்ளத்து இரங்கல்
இராயப்பு ஜோசப் ஆண்டகை
அன்பால் உலகை ஆண்ட ” கை “
இறைபணிக் கூடே மானுடக் கனவை
நிறைபணி யாக்கி நிமிர்ந்த கை
மறைவாழ் வுள்ளும் மனுநீதி வேண்டி
உறைவாள் போலவே உலவிய கை
இறைவ னிடத்திலும் இறைஞ்சி மன்றாடி
குறையிலா வாழ்விற்காய் குமுறிய கை
இறையாடைக் குள்ளும் இனவாடை வீச
அன்பால் உலகை ஆண்ட கை
இராயப்பு ஜோசப் ஆண்டகை
(அஞ்சலிப் பா: திரு. வேலணையூர் சுரேஷ்)
தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையினை உலகரங்கில் வலியுறித்தி பணிசெய்தவரும், ஈழத்தில் தமிழ்;த்தேசிய அரசியல் ஒருகூரையில் இணையத் தன் மெய்வருத்தி உழைத்த பெரும் பேராளுகையும், இறைபணி கடந்து, தமிழர் இறையாண்மைக்கு உரக்கக் குரல்கொடுத்து, அருந்தமிழ்ச் சமூகப்பணிகள் நிறையாற்றி, தமிழ்க்குடிகளின் நீதிக்கு துணையான, «மன்னார் மாவட்ட ஓய்வுநிலை ஆயர்» அருட்திரு. இராயப்பு யோசப் ஐயா அவர்களினது இழப்பு எம் இனத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.
எல்லாம்வல்ல இறைதிரு இணையில் இராயப்பு ஜோசப் ஐயா ஓய்வுகொள்ளவும், இவர்தம் இழப்பைத் தமிழ் உலகம் தாங்கிக்கொள்ளும் வலுவை ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கர் எம் இனத்திற்கு அளிக்கவும் வேண்டி இறைஞ்சி இறுதி வணக்கம் செலுத்துகின்றோம்.
சைவநெறிக்கூடம்
பேர்ன் – சுவிற்சர்லாந்து 01. 04. 2021
