அதி வணக்கத்துக்குரியவரும்,
மக்கள் மனங்களில் நீங்காது நிலைத்தவரும்,
இறைமீது நம்பிக்கை கொண்டு
இன்னல் பட்ட மக்களின் இதயத் துடிப்பாய்
இயங்குநிலை பேராயர் காலத்திலும்,
உடல் தளர்ந்தும்
உறுதி தளராத ஓய்வுநிலை வேளையிலும்
நேரில் கண்ட இறை தூதனாக
நம்பிக்கையின் சாட்சியாக
தமிழ்பேசும் இனத்துக்கு விடிவெள்ளியாக
எம் தாயகத்தில் இருந்து ஒளிர்ந்த சுடரே…..
இன்று(01.04.2021)
சமூக வலைத்தளத்துள் நுழைகையில்
பரந்து விரிந்து பலரும் இரங்கல் பகிர்கையில்
இடியாய் வீழ்ந்தது உங்கள் பேரிழப்பின் செய்தி எமக்கு……
இனத்துக்குள்ளேயே விலைபோகும் துரோகத்துள்
நின்று நிலைத்து
பலவகை நெருக்கடிகளையும்,சவால்களையும்
நெஞ்சுறுதி கொண்டு தகர்த்து……
இறுதிவரை உறுதி தளராது பயணித்த
தாயகத்தின் மன்னார் முன்னைநாள் மறைமாவட்ட பேராயர் மேன்னை மிகு இ்ராயப்பு யோசப்
ஆண்டகை அவர்களின்
பாதம் தழுவிய எமது இறுதி
மரியாதையுடனான வணக்கம்….
இருக்க வேண்டியவர்கள் இருந்திருந்தால்
இன்று
புகழ்மாலை சூடி,
தோள் சுந்து,வீர மரியாதை தாங்கி
விடைகொடுத்து வழியனுப்பி வைத்திருப்பர்…..
பேரன்பின் பேராயரே……
நீங்கள் வயது முதிர்வால் இறைபாதம் சென்றாலும்
எம் விழிகலங்குகிறது வாழ் நாளில் எமக்கு நம்பிக்கையாய் இருந்தீர்கள்….
ஈழ மக்களுக்கு
இன்னும் தீரவில்லை துயரம்…
வழிநெடுக சோகம்
நீங்கள் எதிர்பார்த்த சாந்தியும்,சமாதானமும் இன்னமும் கிடைக்கவில்லை எம்மினத்துக்கு…..
ஆதலால் உங்கள் ஆத்மா
ஏக்கத்தோடு போகும் என்பதே உண்மை.
இருந்தாலும்
உங்கள் அயராத உழைப்புக்கு
நிச்சயம் நீதி கிடைக்கும்
அதில் உங்கள் கருணையும் இணைந்திருக்கும்….
அதுவரை விண்ணுலகில்
உங்கள் விருப்பத்துக்குரிய செல்வங்களோடு அமைதியில் ஈளைப்பாற பிரார்த்தித்து..
சிரம் தாழ்த்தி நினைவுகளால் அர்ச்சிக்கிறோம்….
து.திலக்(கிரி),
01.04.2021,
10:04.
