கொழும்பு மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் இளைஞர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது.
பொலிஸ் அதிகாரியால் கடுமையாக தாக்கப்பட்ட இளைஞர் அப்புத்தளையை சேர்ந்த 24 வயதான க.பிரவின் எனும் மலையக தமிழர் என தெரிய வருகிறது.
இவர் பண்டாரவளையில் இருந்து மரக்கறி வகைகளை லொறியில் ஏற்றி கொண்டு நேற்று (29) கொழும்பு வந்துள்ளார்.
மஹரகம நகர் வரும் போது இவரது கண் அசதியாக ஒரு கணம் மூடப்பட்டுள்ளது. இதனால் அவரது லொறி நிலை தடுமாறி பாதையை விட்டு விலகிய போது அங்கே வீதி போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது லொறி கண்ணாடி மெதுவாக உரசி இருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சாரதியை வாகனத்தில் இருந்து இழுத்து இறக்கி இருக்கிறார். அந்நேரம் அங்கு நின்ற ஆட்டோ சாரதி உடனடியான லொறி சாரதியை தாக்க பின்னர் பொலிஸ் உத்தியோஸ்தர் தாக்கி இருக்கிறார்.
தற்போது தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளார்.
ஆனால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் தற்போது மஹரகம பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு தலை மற்றும் வயிறு வலிப்பதாக இவரை பார்க்க சென்ற அவரது நிறுவன பணிப்பாளரிடம் கூறியுள்ளார். எனினும் அவருக்கு இதுவரை மருத்துவ சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என அவர் தொழில் புரியும் அப்பே ஹார்த்திகேய நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிறுவனம் யூனி பிரதர்ஸ் நிறுவனத்தின் சகோதர நிறுவனமாகும். இளைஞரின் நிலைமை குறித்து தாங்கள் கவலைப்படுவதாக தெரிவித்த அவர்கள் இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை செய்ய இருப்பதாக சொன்னார்கள்.
தாக்கிய குறித்த அதிகாரி பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
“நடந்தது என்ன? நடப்பது என்ன?” என சற்று முன் நான் வினவியபோது “இதுதான் நடந்தது, நடக்கின்றது ஐயா” என மஹரகமை பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) பிரதம ஆய்வாளர் (Chief Inspector) ஜனகாந்த எனக்கு சொன்னார்>
மஹரகமை நகர வீதியில் லொறியை ஓட்டி வந்த ஹப்புதளையை சேர்ந்த கலைமகன் பிரவீன், அவ்வீதியில் பணியில் இருந்த மஹரகமை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் ஆய்வாளர் (IP) மைத்திரிபாலவின் மீது மோதி உள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த அங்கே பணியில் இருந்த இன்னொரு போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் ரிபைடீன், லொறி சாரதி கலைமகன் பிரவீனை சராமாரியாக தாக்கியுள்ளார்.
அந்த காணொளிதான் உலகம் முழுக்க (Viral) தெறிக்கிறது.
லொறி மோதலில் காயமடைந்த IP மைத்திரிபால இப்போது களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் ரிபைடீனும், பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்திய கலைமகன் பிரவீனும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் மஹரகமை பொலிசாரினால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள்.
இந்த சம்பவத்தை நாம் சரியாக புரிந்துக்கொண்டு இந்த பிரச்சினையை தேவையற்ற இடத்துக்கு கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும்.
இத்தகைய பொலிஸ் அத்துமீறல் சம்பவங்களில், பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படல் அவசியம் என்பது ஒரு சர்வதேச நியதி. அதுதான் அவர்களை அடையாளத்துடன் பொறுப்பு கூற வைக்கும்.
இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பொலிஸ் என்று கிடையாது. ஒரே இலங்கை பொலிஸ்தான் உள்ளது. ஒருவேளை பணியில் ஒரு தமிழ் பொலிஸ்காரர் இருந்திருந்தாலும் இப்படிதான் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இலங்கை பொலிஸ் சீருடையை அணிந்தாலே எல்லோருக்கும் இந்த அத்துமீறல் போக்கு ஏற்படுகிறது. அவரது வார்த்தை பிரயோகமும் பிழை.
தங்களது பெரும்பான்மை இன பொலிஸ் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க சிறுபான்மை இன இலங்கை போலீசார், “ஓவராக” நடந்துக்கொள்வதை இதுபோன்ற பல இடங்களில் தமிழ் பேசும் மக்கள் பார்த்துள்ளோம்.
இனி என்ன நடக்கும் என கண்காணிக்க வேண்டும்.
Mano Ganesan