
பிரான்சில் மீண்டும் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலைமையைக் கருத்திற்கொண்டு, வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 11 வரைக்குமான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – 2020 இரத்துச்செய்யப்படுகின்றது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் கல்வியாண்டில் வகுப்பேற்றம் செய்ய அனுமதிக்கப்படுவர். எனினும், பெற்றோர் விரும்பின் பிள்ளை மீண்டும் அதே வகுப்பிலேயே கல்விகற்க அனுமதி வழங்கப்படும். தேர்வு தொடர்பாகப் பெறப்பட்ட கட்டணங்கள் முழுமையாக மீளளிக்கப்படும். தமிழ்ச்சோலைகள் தாங்கள் செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எம்மிடம் மீளப்பெற்று மாணவர்களிடம் மீள ஒப்படைக்கலாம் அல்லது தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – 2021 இற்கான முற்பணமாக எம்மிடமிருக்க அனுமதிக்கலாம். இது தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை அந்தந்தத் தமிழ்ச்சோலை நிர்வாகிகளுக்குரியது. தனித்தேர்வராக விண்ணப்பித்த மாணவர்கள், தாங்கள் செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எமது பணியகத்தில் அதற்கான பற்றுச்சீட்டினை ஒப்படைத்து மீளப்பெற்றுக்கொள்ளலாம். அல்லது, அதனைத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021 இற்குப் பிரதியிடலாம். இதற்கு, அத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் வேளையில் பணம்செலுத்துவதற்குப் பதிலாக, இவ்வாண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான பற்றுச்சீட்டினை இணைக்கலாம். இது தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை அந்தந்த மாணவர்களின் பெற்றோர்களுக்குரியது. பற்றுச்சீட்டினைத் தவறவிட்டவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும். தேர்வுக் கட்டணத்தை மீளப்பெற எமது பணியகத்திற்கு வரமுன் எம்முடன் தொடர்பு கொண்டு முன்னனுமதி பெற்றுக்கொள்ளுதல் சிறந்தது.
வழமைக்கு மாறான சூழ்நிலையால் தேர்வினை இரத்துச் செய்யவேண்டி நேரிட்டமை தொடர்பாக மனம் வருந்துகிறோம். நிலைமையை விளங்கிக்கொண்டு எம் வாழ்வும் வளமுமான தமிழ்மொழியை எம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் மகத்தான பணியைத் தளர்வின்றித் தொடருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம். எனினும், வளர்தமிழ் 12 மாணவர்களின் நலன்கருதி, அவர்களுக்கான புலன்மொழிவளத் தேர்வும் எழுத்துத்தேர்வும் வழமைபோல் நடைபெறும். இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.