வெல்வது உறுதி

0 0
Read Time:3 Minute, 41 Second

விசும்பு விம்மி யூற்றும்
வெள்ளத்தின் காலம்
பசும் புல்லும்பற்றிக் கொள்ளும்
பாறைகளும் நெக்கு விடும்
அசையும் கணங்களெல்லாம்இசை முழங்கும் வீரம்
திசைகள்செம்மை தாங்கும்
விசை கொழிக்கும் நேரம்
அக்கினிக் கருவூலம் சூல்கொள்ளும்
ஆயிரம் எரிச்சிசுக்கள் முளை தள்ளும்- அவை
சத்திய வழியோடு மொழிசொல்லும்-இது
சாவை வென்றவர் சன்னதக்காலம் –அந்த
நித்திய தெய்வங்களில் நிறைந்து
வித்தென அவர் உணர்விற் கரைந்து
சொத்தென அவர் கனவைச் சுமந்து
சித்தத்தில் சபதம்செய்வோம் வெல்வது உறுதி

விளையாடும் வயதின் வேளை
களமாடிப் போனவர்கள்
இளங்காதல் உணர்வை அள்ளித்-தமிழ்
ஈழத்திற்கே பொழிந்தவர்கள்
தளராமற் பகை மீதில்
தணலூற்றத் துணிந்தவர்கள்
கனிவான தமிழீழம்
கனிந்திடத் தீயணிந்தவர்கள்

கனங்கொண்ட உளமதிலே
தினம் புலியாய்க் கனன்றவர்கள்
மொழியாகி எங்கள் மூச்சாகி-எம்முள்
முழுவதுமாய் முகிழ்ந்தவர்கள்
வழியெங்கும் அவர் முகமே –எம்
வாழ்வு என்றும் அவர் வரமே

தலைவர் சொல் மந்திரமே
தலை நிமிரும் நெஞ்சுரமே
பொழுது தோறும் பூசிப்போம்
புலர்வதற்காய் சுவாசிப்போம்
தொழுதெழுந்து தூய்மை கொண்டோம்
துடைத்தெறிவோம் துயர் வெல்வது உறுதி

ஈன்று மாவீரம் தந்து –தவம்
ஈந்து தமையே தந்து
தாய்களும் காவியமான
தாயகத் தாய்மடி பொங்கும்
தகித்திடும் நெருப்பாய் வெம்பும்
பேய்களின் பித்தலாட்சியில்
பிளந்திடும் மனங்கள் குமுறும்

கார்த்திகை பூக்கும் நேரம்
வேர்களில் வீரத்தின் ஈரம்
சேர்த்திடும் பலமும் திடமும்
கூர்த்திடும் மாவீரத் திடமும்

காற்றிலும் உறுதியின் வாசம்
கலந்திட உறுமும் தேசம்
செல்லென மெல்லத்தமிழ்
தின்றிடும் சிங்களம் மாள
வெல்லென வெல்லும் உத்தி
மெல்லெனச் சிறந்து நீளும் – தமிழ்
ஈழத்தின் எல்லை தாண்டி
எழுந்தே புயலாய் வீசும்
கொள்கையின் அறிவும் திறனும் –கை
கோர்த்திட இளம் பூக்கள் மூசும்
சில்லெனச் சிலிர்த்திடும் தாகம் – சின்ன
மழலைகள் குணமாய் மேவும்
கல்லறை கடந்தும் உயிர்ப்போர்
கனவுகள் வெளிச்சம் தூவும்
துல்லிய செயல்கள் ஓம்பும்
தூளாகும் எதிரிகள் வீம்பும்
சாதனை நிமிரும் எங்கும் – இது
சாதனை வென்றவர் யாகம்

வேகமாய்த் திரளும் உணர்வில்
விடுதலை வேதப்பண்ணெழ
கொடிதனில் புலியும் விண்ணெழ
மீண்டிடும் அழகும் வாழ்வும்
மீட்டிட உறுதி படைப்போம்

ஏற்றிய சுடர்கள் மீதில்
இலட்சியச் சபதம் எடுப்போம்
மாற்றியே விதியை அமைப்போம்
மலரும் தமிழீழம் வெல்வது உறுதி

கலைமகள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment