சுவிற்சர்லாந்து – இலங்கை 70 ஆண்டு தூதரக உறவுகள் கொண்டாடும்வேளை
நீதி, பொறுப்புணர்வு மற்றும் நிலையான அரசியல் தீர்விற்காக சுவிற்சர்லாந்து கூட்டாட்சி அரசிடம் சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் வேண்டுகை (மனு) 03. 03. 2026 செவ்வாய்க்கிழமை அன்று 16.30 மணிக்கு கூட்டாச்சி அரசசெயலகத்தில் கையளிக்கப்பட்டது.
சுவிற்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான தூதரக உறவுகள் 1956ஆம் ஆண்டு தொடங்கி 2026ஆம் ஆண்டில் 70 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. இந்த வரலாற்றுப் பின்னணியில், சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினரும் சுவிஸ் குடிமக்களும் இணைந்து, நீதி, பன்னாட்டு பொறுப்புணர்வு மற்றும் நிலையான அரசியல் தீர்வை வலியுறுத்தும் விரிவான வேண்டுகை (மனு) ஒன்றை கூட்டாட்சி அரசிடம் கையளித்துள்ளனர்.
வேண்டுகைக்குழு சார்பாளர்களாக: திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் (இணைப்பாளர், சைவநெறிக்கூடம்), திருநிறை. பொன்னம்பலம் முருகவேள் (முதல்வர், பேர்ன் வள்ளுவன் பள்ளி), திருமதி. சயந்தினி கருணாகரன் (சைவநெறிக்கூடம், நொய்யென்பூர்க்), திருநிறை. சோமசுந்தரம் சந்துரு (பேர்ன் நகரசபை உறுப்பினர்) மற்றும் தில்லையம்பலம் சிவகீர்த்தி (சைவநெறிக்கூடம்) ஆகியோர் நேரில் சென்றிருந்தனர்.
இதன்படி 2026 மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள இலங்கைப் பயணத்தின் போது, இலங்கை நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கும் மாண்புமிகு கூட்டாட்சி அமைச்சர் திருநிறை. காசிஸ் (Bundesrat Ignazio Cassis) அவர்கள் செல்ல வேண்டும் என இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த சுவிற்சர்லாந்திலுள்ள தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் வேண்டுகின்றனர். பெரும்போர் கலாத்திலும் போர் மௌனிக்கப்பட்ட பின்னரும் இப்பகுதிகளே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாக உள்ளன. இன்றுவரை இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு உரிய விசாரணையும், நீதியும் கிடைக்கவில்லை. தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை கோரி தமிழர்கள் உயிர் நேரிடரை (அபாயத்தை) எதிர்கொண்டு இன்றுவரை அறவழியில் போராடி வருகின்றனர்.
வேண்டுகையில் ஒப்பமிட்ட மக்கள் முன்வைத்திருந்த வேண்டுகோள்கள் இவை ஆகும்:
- வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கான பயணத்தினை சுவிற்சர்லாந்து நடுவனரசு அமைச்சர் மேற்கொள்ள வேண்டும். தமிழ்மக்கள் நேர்வாழ்ந்த (அனுபவித்த) துன்பத்தை (வேதனையை) வெளிப்படையாக அறிந்தேற்றுவதுடன் (அங்கீகரிப்பதுடன்) பாதிக்கப்பட்ட தமிழர்கள், குடிமக்கள் அமைப்புக்களுடன் நேரடியாக உரையாடல்களை சுவிற்சர்லாந்து மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
- இலங்கை அரசை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அல்லது பன்னாட்டு நீதிமன்றங்கள் போன்ற அமைப்புகள் மூலம், சார்பற்ற பன்னாட்டு விசாரணைகளுக்கும், போர் குற்றங்களின் வெளிப்படையான செயலாக்க ஆய்வுக்கும் ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்த வேண்டும். சுவிற்சர்லாந்து சார்பற்ற பன்னாட்டு விசாரணை அமைப்புகள் அனுமதிக்கப்படுவதற்கும் இலங்கை தற்போதுள்ள ஐ.நா. செயல்முறைகளுடன் கட்டுமானமான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் செயலில் ஈடுபடச்செய்ய உந்துதல் அளிக்க வேண்டும்.
- இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான உண்மை கண்டறிதல், செயலாக்க ஆய்வு மற்றும் நீதிக்கான செயல்முறைகளுக்கு நல்லாதரவளிக்கும் வகையில் சுவிற்சர்லாந்திலுள்ள தமிழ்ப் புலம்பெயர் சமூகத்தை கட்டமைப்பு முறையில் இணைத்துக்கொள்ள வேண்டும். இப் பின்னணியில் வரவிருக்கும் இலங்கைப் பயணத்தை பன்னாட்டுச் சட்டம், மனித உரிமைகள் மற்றும் நிலையான அமைதி மேம்பாட்டின் கொள்கைகளை உறுதியாக முன்வைக்க பயன்படுத்துமாறு கையெழுத்திட்டுள்ளோர் சுவிற்சர்லாந்து கூட்டாட்சி அரசிடம் மரியாதையுடன் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
70 ஆண்டுகள்: ஒத்துழைப்பு, மனிதாபிமான பாரம்பரியம் மற்றும் சவால்கள்
சுவிற்சர்லாந்து–இலங்கை உறவுகள் கடந்த ஏழு தசாப்தங்களில் அபிவிருத்தி ஒத்துழைப்பு, அமைதி மேம்பாடு, மனித உரிமைகள், நல்லிணக்கம், குடியாட்சி போன்ற துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளன. 2016ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்ட அகதிகளின் மீள்வருகை மற்றும் சட்டவிரோத இடப்பெயர்வை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இடப்பெயர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.
1983ஆம் ஆண்டு இலங்கையில் ஆயுதப்போர் தீவிரமடைந்தபோது, மனிதாபிமான மரபைக் கொண்ட சுவிற்சர்லாந்து ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகளை ஏற்றுக்கொண்டது. இன்று சுமார் 80 000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் சுவிற்சர்லாந்தில் வாழ்கின்றனர்; மூன்றாம் தலைமுறையையும் உள்ளடக்கிய சுவிஸ் வாழ் ஈழத்தமிழினம் கல்வி, தொழில், அரசியல், பண்பாட்டு மற்றும் சமூகத் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கி வருகிறது.
70 ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் „70 ஆண்டுகள் 70 முகங்கள் (70 Years – 70 Faces) “ என்ற நிகழ்ச்சியின் மூலம் இரு நாடுகளுக்கிடையே பாலமாகச் செயற்பட்ட ஆட்களை மதிப்பளித்துள்ளது. இதை மனுவில் ஒரு நேர்மையான அறிகுறியாக குறிப்பிடுகின்றபோதிலும், உண்மையான நல்லிணக்கம் நீதி மற்றும் பொறுப்புணர்வு இன்றி வாய்ப்பில்லை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
போர்க் கால குற்றச்சாட்டுகள்: நீதி இன்னும் எட்டப்படாதது
இலங்கை விடுதலை அடைந்தது முதல் அறப்போராக தமிழர் விடுதலைப் போராட்டம் தொடக்கம் பெற்று, 1983 – 2009 காலப்பகுதியில் உச்சம் பெற்ற ஆயுதப்போராக தொடர்ந்தது. மே 2009இல் இறுதிக் கட்டப்போரில் சில சதுர நிலத்தில் பல நூறு ஆயிரம் தமிழ்மக்கள் கொத்தாக கொல்லப்பட்டனர். பல பன்னாட்டு அறிக்கைகள் இதனை உறுதிசெய்து சுட்டிக்காட்டுகின்றன. ஐ.நா நிபுணர் குழு 31 மார்ச் 2011 வெளியிட்ட அறிக்கையில், குறைந்தது 70 000 தமிழ் பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது.
மருத்துவமனைகள், பள்ளிகள், அகதி முகாம்கள் தாக்குதலுக்குள்ளானதாகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், தன்னிச்சை கைது, பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரமை மன்றத்தின் (United Nations Human Rights Council) தீர்மானங்களுக்கு சுவிற்சர்லாந்து துணை வழங்கியுள்ள நிலையில், இலங்கை அரசு இதுவரை முழுமையான சார்பற்ற பன்னாட்டு விசாரணைக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்பதும் கவலைக்குரியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய மனித உரிமை நிலைமை – சட்ட மற்றும் அரசியல் சிக்கல்கள்:
போர் மௌனிக்கப்பட்டு 17 ஆண்டுகள் கடந்தபோதிலும் வடக்கு–கிழக்கில் இராணுவ வல்லிருப்பு நீடிப்பதும், நில உரிமை பிரச்சனைகள் மற்றும் மக்கள் தொகை மாற்ற குற்றச்சாட்டுகளும் தொடர்கின்றன.
சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் „Prevention of Terrorism Act (PTA)“ கீழ் குற்றச்சாட்டு அல்லது நீதிமன்ற விசாரணை இன்றி நீண்டகால தடுத்து வைப்பு நடைமுறைகள் தொடர்வதாக மனித உரிமை அமைப்புகளும் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள «பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்ட வரைவு Protection of the State from Terrorism Act (PSTA)» இதுவும் அரசின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு கண்மூடித்தனமாக விரிவான அதிகாரங்களை வழங்கும் அபாயம் கொண்டதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சட்டச் சூழலில், குடி ஆட்சியுரிமைகள் மற்றும் குடிமக்கள் விடுதலை பாதிக்கப்படலாம் என வேண்டுகை (மனுவில்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்து வெளியுறவு அமைச்சர் திருநிறை. காசிஸ் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்…
வேண்டுகையில் (மனுவில்) கையெழுத்திட்டுள்ள மக்கள், சுவிஸ் கூட்டாட்சி அரசிடம் பின்வரும் நடவடிக்கைகளை வலியுறுத்துகின்றனர்:
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்குச் சென்று நேரடி பார்வை – அமைச்சர் இக்னாசியோ காசிஸ் அவர்கள் இலங்கைப் பயணத்தின் போது போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்தித்து அவர்களின் அனுபவங்களை நேரடியாகக் கேட்க வேண்டும்.
சார்பற்ற பன்னாட்டு விசாரணைக்கு ஆதரவு – இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றங்கள் அல்லது ஐ.நா. அமைப்புகள் வழியாக விசாரணைக்கு ஒத்துழைக்க வலியுறுத்த வேண்டும்.
உண்மை கண்டறிதல் மற்றும் முறைக்கான (நீதிக்கான) உறுதி – மாந்தர் (மனித) உரிமை மீறல்கள் தொடர்பான சான்று (ஆதாரம்) சேகரிப்பு மற்றும் எதிர்கால நீதிமுறை செயல்முறைகளுக்கு சுவிற்சர்லாந்து உறுதியான அரசியல் துணை (ஆதரவு) வழங்க வேண்டும்.
தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் கட்டமைக்கப்பட்ட உரையாடல் – உண்மை மற்றும் நல்லிணக்க செயல்முறைகளில் சுவிற்சர்லாந்திலுள்ள தமிழ் சமூகத்தை இணைத்துக்கொள்ள வேண்டும்.
25 ஒக்ரோபர் 2025 அன்று சமூக ஜனநாயகக் கட்சி (SP Schweiz) இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணையை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமையும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனிதாபிமான பாரம்பரியம் மற்றும் எதிர்காலப் பொறுப்பு
சுவிற்சர்லாந்தின் வெளிநாட்டு கொள்கை மனித உரிமைகள், பன்னாட்டு சட்டம் மற்றும் மனிதாபிமான மதிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே 70 ஆண்டு தூதரக உறவுகள் கொண்டாட்டம், கடந்த காலத்தை நினைவுகூரும் கொண்டாட்ட விழாவாக மட்டுமல்லாது, ஆறாத வடுவுடன் இடர் ஏந்தி வாழும் வலிசுமந்த தமிழ்மக்களுக்கு நீதி பெறும் வழிகளை பெற்றுக்கொடுக்க சுவிற்சர்லாந்து முன்னிற்க வேண்டியும், மற்றும் அறத்தை முறைமையை பொறுப்புணர்வுடன் நிறுவ சுவிற்சர்லாந்து அரசு உறுதிகொள்ள வேண்டும் எனும் வேண்டுகையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சுவிற்சர்லாந்து வாழ் சுவிஸ் தமிழ்மக்களின் உணர்விற்கு மதிப்பளிபத்து தாயகத் தமிழ்மக்களின் இடர்போக்கி அவர்களின் போர் வலியினை சுவிஸ் அரசு ஏற்று அறியவேண்டும் எனவும் வேண்டுகைக்குழு வலியுறுத்தியுள்ளது.
புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தொடர்ச்சியான மற்றும் திறந்த உரையாடலுக்குத் தாங்கள் எப்போதும் தயாராக உள்ளதாகவும், மனித உரிமைகள் துறையில் சுவிற்சர்லாந்து மேற்கொண்ட பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்தும் மனு நிறைவடைந்துள்ளது.
“சுவிற்சர்லாந்து – இலங்கை 70 ஆண்டு தூதரக உறவுகள்: நீதி மற்றும் அரசியல் தீர்விற்காக கூட்டாட்சி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த விரிவான வேண்டுகை இருதரப்பு உறவுகளின் அடுத்த கட்டத்தை மனித உரிமை, பொறுப்புணர்வு மற்றும் நிலையான அமைதியின் அடிப்படையில் அமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.





