விடுமுறை பாகம் 2

1 0
Read Time:8 Minute, 37 Second

தமிழீழத்தில் போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு மிகவும் உன்னதமானது. அங்கே சாதி, மதங்களுக்கு இடமே கிடையாது. எல்லோரையும் உறவு முறை வைத்துத்தான் அழைப்பார்கள். தாய் வயது ஒத்தவர்களை ‘அம்மா’ என்று அழைப்பார்கள். அதேபோல், ‘அப்பா,’ ‘தங்கச்சி,’ ‘அண்ணா,’ ‘ஐயா,’ ‘பாட்டி’ என்று அனைவரையும் சொந்தம் கொண்டாடுவார்கள்.

பெண் போராளிகளை ‘பிள்ளைகள்’ என்றுதான் ஆண் போராளிகள் குறிப்பிடுவார்கள். அதேபோல், ஆண் போராளிகளை ‘அண்ணாக்கள்’ என்று பெண் போராளிகள் குறிப்பிடுவார்கள். ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் போல, ஒருவருக்கொருவர் துணையாக இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்தனர். தலைவன் என்னும் பாசக் கயிற்றினால் அனைவரும் கட்டுண்டிருந்தனர். இந்த உணர்வு, அங்கு வாழ்ந்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். வெறும் வார்த்தைகளால் அவற்றை வடித்துவிட முடியாது.

இப் பாசப் பிணைப்பின் உந்துதலினாலேயே, உரிமையுடன் போய், தவத்தின் அம்மாவின் வீட்டில் படலை அடியில் நின்று, “அம்மா” என்று அழைத்தான் குரு.
“அம்மா” என்று அழைத்தவுடன், தவத்தின் வீட்டின் நாய் தான் முதலில் அவர்களை வரவேற்றது. வாலை ஆட்டிக்கொண்டு, அவர்களின் காலின் கீழ் விழுந்து, நெளிந்து மரியாதை செய்தது. ‘ஊ’ என்று சத்தமெழுப்பி, மகிழ்ச்சியில் கொஞ்சிக் குலாவியது. தவத்துடன் குரு பல தடவைகள் அங்கு போயிருக்கிறான். அதனால், நாய் அவனைக் கண்டவுடன் அடையாளம் கண்டுகொண்டது.
“யாரு?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் தவத்தின் அம்மா.
“நான் தான் அம்மா, குரு,” என்றான். அதற்குள், தவத்தின் அம்மா தீப்பெட்டி எடுத்து அரிக்கன் விளக்கை ஏற்றி வைத்தாள்.

தவத்தின் வீட்டில் சுகவீனமுற்ற அப்பா, பத்தாம் வகுப்பு படிக்கும் தங்கை மற்றும் தவத்தின் அம்மா. இவர்கள் மூவரும் மட்டுமே அந்தக் குடிசை வீட்டில்.
இருபதுக்கு இருபது அடி குடிசை வீடு. குடிசை வீடு என்றாலும், மாட்டுச் சாணம் போட்டு மெழுகி, மிகவும் நேர்த்தியாக இருந்தது.

தவத்தின் அம்மா விளக்கை எடுத்துக்கொண்டு படலை அடிக்கு எழுந்து வர, தவத்தின் தங்கையும் பின்தொடர்ந்தாள். விளக்கை உயர்த்தி யார் என்று பார்த்தாள். குரு. அவளது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. “வா வா உள்ளே வா, ஏன் அங்கேயே நிற்கிறாய்?” என்று அவசர அவசரமாக உள்ளே அழைத்தாள். மாறனும் பின்னால் தொடர்ந்தான். குடிசைக்கு வெளியில் இருந்த மரக் கட்டிலில் அவர்களை இருக்கச் சொல்லிவிட்டு, விளக்குத் திரியை மேலும் தூண்டிவிட்டு, அவர்களின் முகத்தைப் பார்த்தாள் தவத்தின் அம்மா.

அவளது முகம் மகிழ்ச்சியில் பொங்கியது. இருந்தாலும், கவலை ரேகை ஒன்று அவளது முகத்தில் படர்வதை மாறன் அவதானித்தான். அவன் புரிந்துகொண்டவனாய், “அம்மா, இன்று மாலைதான் தவத்தைப் பார்த்துப் பேசினேன். அவன் நன்றாக இருக்கிறான்” என்ற விடயத்தைத், தாயின் உணர்வைப் புரிந்துகொண்டவனாய், அவள் கேட்காமலேயே இவன் சொல்லி முடித்தான். தாய் பெருமூச்சு விட்டாள். மீண்டும் அவளது கண்கள் மகிழ்ச்சி பொங்கியது.

திடீரென்று நள்ளிரவில் போனதால், அவள் சிறு கலக்கம் அடைந்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. தமிழீழத்தில் ஏதோ ஒரு மூலையில், தினம் தினம் சண்டைகளும் வீரச்சாவுகளும் நடந்துகொண்டுதான் இருந்தன. ‘புலிகளின் குரலில்’ வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள் வாசிக்கப்படும்போது, “யார் பெத்த பிள்ளைகளோ” என்று தனக்குள் புலம்பிக்கொள்வாள். அவளுக்கு அரசியல் ஒன்றும் தெரியாது. ஆனால், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால், எதிரியிடமிருந்து மண்ணை மீட்க வேண்டும் என்ற அளவில் தெரிந்து வைத்திருந்தாள். நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக, அவர்கள் களத்தில் தினந்தோறும் தங்கள் உயிரைத் துச்சமாக எண்ணிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவள் புரியாமலும் இல்லை.
ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் தியாகத்தில், தன் மகன் மட்டும் சுக வாழ்வு வாழ வேண்டும் என்று சுயநலமாகச் சிந்திப்பவளும் இல்லை. தன் மகன் நாட்டுக்காகத் தன் பங்கைக் வகிக்க வேண்டிய அவசியத்தையும் அவள் அறியாதவள் அல்ல. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், தாயின் பரிதவிப்பைத் தாயால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். என்ன தினமும் என்ன செய்தி வருமோ என்று தெரியாது, நாளும் பொழுதும் அதே எண்ணத்தில் வாழ்வது என்பது நரக வேதனைக்குச் சமமானது. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். இவர்களைக் கண்டவுடன், ஒரு கணம் அவள் எண்ண அலைகள் எல்லாம் எங்கெங்கோ ஓடி, அவள் முகத்தில் கவலை ஏற்படுத்தியது.
பாசப் போராட்டத்தில் அவள் கண்களில் நீர் முட்டித் ததும்பியது.

தவத்தின் தந்தைக்கு அரசியல் நன்றாக தெரியும். அவர் பழைய கால மனிதர். தமிழரசுக் கட்சி தலைவர் செல்வநாயகத்தின் காலத்தில் பல அகிம்சை போராட்டதிற்கு சென்று அரச காடையர்களால் அடிபட்டு இரத்தம் சிந்தியவர். விடுதலை போராட்டத்தின் அவசியத்தை நன்கு உணர்ந்து இருந்தார்.
வரலாற்றில் ஒரு இனத்துக்கு ஆபத்து வரும்போது, அந்த இனத்தைக் காப்பாற்றும் பொறுப்பு ஒரு சில தலைமுறைகளுக்கே வழங்கப்படுகிறது. அந்தப் பொறுப்பு தனக்கு வந்திருக்கலாம் என்று அவர் தன்னையை தானே நொந்து கொண்டார். அப்படி நடந்து இருந்தால், தன் பிள்ளையும் நீங்களும் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம் எனக் கூறினார்.

காலங்கள் எத்தனை வருடங்கள்! இளைஞர்களாக போராடச் சென்றவர்கள், இன்று பெற்றோர்களாகி விட்டனர். ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு விடுதலைத் தீ பரவிச் செல்கிறது. “இன்னும் எத்தனை வருடங்களுக்கு இது செல்லும்?” என்று கூறி பெருமூச்சு விட்டார் தவத்தின் தந்தை.

“பிள்ளைகள், பொறுங்கள்! ஏதாவது சாப்பிடக் கொண்டு வாரேன்,” என்று சமையல் அறையை நோக்கிச் சென்றார்.
மாறனும் குருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மாறன் ஏதோ சொல்ல எத்தனிக்க, குரு அவனது தொடையில் கிள்ளி அடக்கினான்.

தொடரும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment