தியாக தீபம் திலீபன் – முதலாம் நாள்

0 0
Read Time:12 Minute, 34 Second

1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி. இது திலீபனுடன் முதலாம் நாள்.

தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்.

காலை ஒன்பது மணியிருக்கும். பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார்.

அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான், வேறும் சிலர். வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்களும், பொதுமக்களும் கையசைத்து வழியனுப்புகிறார்கள். நல்லூர் கந்தசாமி கோவிலைச் சென்றடைந்தோம். வாகனம் நின்றது. திலீபன் உண்ணாவிரத மேடை நோக்கிச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம்.

தமிழீழத் தாயின் எதிர்பாராத ஆசியினைப் பெறுகின்றார். எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடந்தது. வயதான ஓர் அம்மா. தள்ளாத சிவந்த நிற மேனி. பழுத்த தலை. ஆனால் ஒளி தவளும் கண்களில் கண்ணீர் மல்க திலீபனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்சனைச் சரையில் இருந்து நடுங்கும் விரல்களால் திருநீற்றை எடுத்து திலீபனின் நெற்றியில் பூசுகிறார். சுற்றியிருந்த கமராக்கள் எல்லாம் அந்தக் காட்சியைக் கிளிக் செய்தன. வீரத்திலகம் இடுகிறார் அந்தத் தாய். தாயற்ற திலீபன் அந்தத் தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போனார்.

போராளி பிரசாத் இன் ஆரம்ப உரை. (மேஜர் பிரசாத்)

காலை 9.45 மணி. உண்ணாவிரத மேடையிலே நாற்காலியிலே திலீபனை அமர வைத்தோம். திலீபனின் அருகே நான், ராஜன், பிரசாத், சிறி ஆகியோர் அமர்ந்திருந்தோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அன்று பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத்தின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணாவிரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பதனைப் பற்றி விளக்கம் அளித்தார்கள். தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைப் பேணும் நோக்கமாக இந்திய மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட ஜந்து கோரிக்கைகளும் விளக்கப்பட்டன.

ஐந்து அம்ச கோரிக்கை.

1) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.

2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

4) வட கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பாடசாலைகளில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

பிரசாத் அவர்களால் மேற்படி ஜந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கையை இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய உயர் ஸ்தானிகரின் கையில் நேரடியாகக் கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 15 ஆம் திகதி வரையும் தூதுவரிடமிருந்து எந்தப் பதில்களும் கிடைக்காத காரணத்தினால் சாகும் வரை உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் நடத்துவது என தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி தான் இந்தத் தியாகச் செம்மலின் தியாகப் பயணம் ஆரம்பித்தது. பிற்பகல் 2.00 மணி இருக்கும். திலீபன் கம்பீரமாக வீற்றிருந்தார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் முடிந்துவிட்டன. இரண்டாவது மேடையிலே நடைபெற்றுக் கொண்டிருந்த உண்ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்து விட்டது. படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என என் காதில் குசுகுசுத்தார் திலீபன். நான் ராஜனிடம் சொன்னேன்.

15 நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வந்தன. விடுதலைப் போராட்டங்கள் பற்றி அறிவதற்கு திலீபனுக்கு ஆர்வங்கள் எப்போதும் உண்டு. பிடல் காஸ்ரோ, சேகுவேரா, கொஜுமின், யசிர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பார். பலஸ்தீன மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் படிப்பதென்றால் அவருக்குப் பலாச்சுளை மாதிரி. பலஸ்தீன கவிதை என்ற நூலை அவரிடம் கொடுத்தேன். அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். மாலை ஐந்து மணிக்கு, பக்கத்து மேடையில் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று. பாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத் தொடங்கினர். சுசிலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கவிதையை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார். “அண்ணா திலீபா, இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்திற்காக நீ தவமிருக்கும் கோலத்தைக் காணும் தாய்க்குலத்தின் கண்களில் வடிவது செந்நீர்.” சுசிலாவின் விம்மல் திலீபனின் கவனத்தைத் திருப்பியது.

கவிதைத்தொகுப்பை மூடி வைத்துவிட்டு கவிதை மழையில் நனையத் தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர்த் தேக்கத்தை ஒருகணம் என் கண்கள் காணத் தவறவில்லை. எத்தகைய இளகிய மனம் அவருக்கு. இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்கப் போகிறது. அகிம்சைப் போராட்டத்திற்கே ஆணிவேராகத் திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட, தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்..?

ஐரிஸ் போராட்ட வீரர் பொபிஸ் ஆன்ஸ் என்ன செய்தார்..? சிறைக்குள் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து உயிர் நீத்தார். இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலீபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல், இறுதியில் உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டால் அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்குக் கிடைக்கும் மாபெரும் வெற்றிதான்.

நல்லூர் ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்.

உலகின் புதிய அத்தியாயம் ஒன்றின் சிருஸ்டி கர்த்தா என்ற பெருமை அவனையே சாரும். ஆனால் அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா..? இறைவா, திலீபனைக் காப்பாற்றி விடு. கூடியிருந்த மக்கள் நல்லூர்க் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக் கொள்கிறார்கள். இதை நான் அவதானித்தேன். பழந்தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் இராசதானியிலே, தமிழ்க் கடவுளாகிய குமரனின் சந்நிதியில் ஓர் இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடந்தது. ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்துவிடும். எனக்குள் இப்படி எண்ணிக்கொண்டேன். திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான். இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீழம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லையே..? இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்தே ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித்தான் சாகும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார்.

இந்தக் காரணத்தாலாவது இந்திய அரசு இதை நிறைவேற்றத் தவறுமானால், திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம். திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும். ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதைத்தான் என்னால் கூற முடியும். அவரின் பேச்சு முடிந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் அப்பேச்சை வரவேற்பது போல் கைகளைத் தட்டி ஆரவாரித்தனர். அந்த ஒலி அடங்க வெகுநேரம் பிடித்தது. அன்று இரவு 11.00 மணியளவில் தலைவர் அவர்கள் திலீபனைப் பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார்.

அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், ஜொனி இப்படிப் பலரும் வருகின்றனர். வெகுநேரம் வரை தலைவருடன் உரையாடிக் கொண்டிருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று போகும்போது என்னிடம் கூறிவிட்டுச்சென்றார் தலைவர்….. முதல் நாள் நிறைவுற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment