சாதனைகளையும்…
சரித்திரங்களையும்…
துன்பங்களையும்…
துயரங்களையும்…
தாங்கிக்கொண்ட
ஒரு மண்ணின் பெயர் —
ஆனந்தபுரம்.
அன்று,
ஸ்ரீலங்கா இராணுவத்தோடு
உலக வல்லரசுகளும் கைகோர்த்து நின்றன.
அறத்தையும்
போர்மரபையும்
குழி தோண்டிப் புதைத்தன.
சர்வதேச போர் விதிகளை
முற்றாக மீறி,
மனித குலத்தின்
அடிப்படை நெறிகளையே
மிதித்தெறிந்தன.
தடைசெய்யப்பட்ட
இரசாயன ஆயுதங்கள்…
நச்சு வாயுக்கள்…
எம் இனத்தின் மீது
அரக்கத் தனமாக
வீசப்பட்டன.
ஆனால் —
“விடுதலை அல்லது வீரச்சாவு”
என்ற உயரிய எண்ணத்தோடு
ஆனந்தபுரம் மண்ணில்
ஆக்ரோசமாக எழுந்தார்கள்
எங்கள் விடுதலை வேங்கைகள்.
பல்லாயிரக்கணக்கான எதிரிகளை
மண்ணில் விழ்த்தியபடி,
கொண்ட கொள்கைக்காக
இறுதி மூச்சு இருக்கும் வரை
போராடினர்.
அன்று
எம்முடைய தளபதிகளும்
நூற்றுக்கணக்கான போராளிகளும்
தங்களை அர்ப்பணித்த போது —
ஒரு கணம்
எங்கள் மூச்சே
நின்றுபோனது.
ஒன்றா…?
இரண்டா…?
எமது இனத்தின்
தூண்களாக நின்ற
அத்தனை தளபதிகளையும்
ஒரே நாளில்
இழந்து நின்றோம்…
நம்பிக்கை நாயகர்கள்…
போர்க்கள வித்தகர்கள்…
பெரும் போர்களை
வழிநடத்திய மலைகள்…
எம் இனத்தின்
வெளித்தெரியாத வேர்கள்…
அத்தனை பேரும்
அன்று
ஆனந்தபுர மண்ணில்
விழுந்தபோது —
இரத்த வெள்ளத்தில்
அந்த மண்
சிவந்தது.
எம்மவர்கள் புரிந்த
தர்மயுத்தத்தை
கண்டும் காணாதது போல்
அதர்மத்துக்கு துணைநின்ற
உலக வல்லரசுகளை நோக்கி
நாங்கள் கதறினோம்…
“எந்தத் தவறும் இழைக்காத
ஒரு இனம்
திட்டமிட்டு அழிக்கப்படுகிறதே —
திரும்பிப் பார்க்க மாட்டீர்களா?”
என்று
ஓலமிட்டு கத்தினோம்…
கண்களுக்குள் வைத்து
காத்திட வேண்டிய
பச்சைக் குழந்தைகளையும்
பலியெடுத்த
அந்த அரசிடம்
நியாயம் கேட்டு நின்றோம்…
ஆனால் —
பதில் இல்லை.
அதனால் தான்
இன்று மீண்டும் சொல்கிறோம் —
மறக்க மாட்டோம்…
மறக்க மாட்டோம்…
எம் உன்னதங்களை இழந்து
தவியாய் தவித்த
அந்த நாட்களை
நாங்கள்
ஒருபோதும்
மறக்க மாட்டோம்.
பார் போற்றும்
ஒப்பற்ற வீரர்களை
இழந்த
இந்த நாளில் —
அவர்களின் நினைவுகளில்
நனைந்தபடி
அன்றைய நாளை
மீண்டும் நினைக்கிறது இதயம்…
ஓசையின்றி
அழுகிறது…
மாவீரர்களே…
மானமறவர்களே…
உங்கள் கனவு
ஒருநாள்
நிச்சயமாக
நனவாகும்.
அதுவரை —
நாங்கள்
உங்கள் நினைவுகளோடு…
-கலைவிழி-
04.04.2026
