விடுமுறை பாகம் 3

0 0
Read Time:6 Minute, 27 Second

போராளிகளின் கையில் யாழ்ப்பாணம் இருந்தபோது நிலைமை என்னவோ சுமாராகத்தான் இருந்தது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பணம், ஆயுதக் கொள்வனவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதுவும், ஓர் அரச இயந்திரத்திற்கு எதிராகச் சில ஆயிரம் புலம்பெயர் மக்களின் உதவியுடன் தொடர்ந்து பல ஆண்டுகள் போராடுவது என்பது மிகவும் கடினமாக இருந்தது.


தாயகத்தில் போராளிகளால் விதிக்கப்பட்ட வரி மூலமே அரசுக்குச் சமமாக ஒரு தமிழீழ அரசு இயங்கிக்கொண்டிருந்தது. அதிகச் சனத்தொகைகொண்ட பொருளாதார மையமாக இயங்கிய யாழ் மாவட்ட இழப்பு என்பது எல்லா வகையிலும் போராளிகளைப் பாதித்தது. அதன் தாக்கம் போராளிகளின் உணவிலும் எதிரொலித்தது. சமையலுக்காக மூன்று பேருக்கு ஒரு தேங்காய் என்று ஒரு கணக்கு இருந்தது. பின்னர் அது ஐந்து பேருக்கு ஒன்று என்றாகி, இறுதியில் பதினைந்து பேருக்கு ஒன்று என்ற கணக்கில் வந்து நின்றது. சுவைத்துப் சாப்பிடக் காலம் போய், பசிக்குச் சாப்பிடும் நிலை ஏற்பட்டது. போராளிகளுக்குத் தன்னால் நல்ல உணவு கொடுக்க முடியவில்லையே என்று ஒரு கூட்டத்தில் நிதிப் பொறுப்பாளர் ரஞ்சித் அப்பா அழுதேவிட்டார். அத்தகைய மிகவும் நெருக்கடியான காலம் அது. இந்நிலையில், குரு போன்ற ஒரு சில போராளிகள் நாவுக்குச் சுவையான உணவை உண்பதற்கான ஏக்கத்தை இலகுவில் கடந்து போய்விட முடியாது.

தவத்தின் தந்தை “ஏதாவது சாப்பிடக் கொண்டு வாரேன்” என்று எழுந்தவுடன் மாறன் ஏதோ கூற முயல, “இவன் காரியத்தைக் கெடுத்துவிடுவான் போலக் கிடக்கே” என்ற பயத்தில் மாறன் தொடையில் கிள்ளி அவனது வாயை அடைத்தான் குரு.

குரு மட்டுமல்ல, போராளிகள் யார் சென்றாலும் அந்த ஊர் மக்கள் அவர்களுக்குத் தங்களால் முடிந்த இராஜ விருந்தினை வழங்குவார்கள். இன்று வருபவர்கள் இன்னும் ஒரு முறை வருவார்கள் என்பதற்கு எந்தவோர் உத்தரவாதமும் இல்லை. அதனால், அவர்கள் வரும்போது தங்களால் முடிந்ததைச் செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

குடிசை வீட்டுக்கு பின்புறமாகப் பத்தி இறக்கிச் சிறிய சமையலறை அமைக்கப்பட்டிருந்தது. மண்ணெண்ணெய் பரல் தகரத்தில் ஒரு கதவு, நாலு ஐந்து மண்பானைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தட்டுமுட்டுச் சாமான்கள் அவ்வளவுதான். நள்ளிரவு கடந்து இருந்தது. தவத்தின் அம்மா விறகு அடுப்பை மூட்டுவதற்காகப் போராடிக்கொண்டிருந்தார். வெள்ளைப் புகை அந்தச் சமையலறை நிறைந்து நின்றது. அந்தப் புகைகளுக்கு ஊடாகத் தவத்தின் அப்பா “என்ன இருக்கு சாப்பிட?” என வினவினார். அவள் நேற்று வைத்த மீன் கறிப் பானையைத் திறந்து பார்த்தாள். “இரண்டு பேருக்குக் காணும்” என்று திருப்தி அடைந்தவளாய், “குழம்பு இருக்கு, புட்டு அவிக்கப்போகிறேன். நீங்கள் அவர்களுடன் கதைத்துக்கொண்டு இருங்கள்” என்று கூறி அவரை அங்கிருந்து விரட்டிவிட்டார் தவத்தின் அம்மா.

மகளைக் கூப்பிட்டு “அத்தையிடம் நாலு முட்டைகள் வாங்கி வா” என்று கூறினாள். அவள் இருட்டுக்குள் சென்று மறைந்து சில நிமிடங்களில் முட்டைகளுடன் வந்து அம்மாவுக்கு உதவி செய்தாள்.
சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி அதில் முட்டை பொரியும் மணம் குருவின் மூக்குத் துவாரத்தை ஊடறுத்து நாடி நரம்புகளெல்லாம் அந்த வாசனை பரவியது. எத்தனை நாள்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு வாசமான சமையலை முகர்ந்து! குருவின் மன ஓட்டத்தை மாறன் கலைத்தான். “அசடு வழியுது” என்று மெதுவாகக் கிண்டல் செய்தான்.

இரவு 3 மணி. சாப்பாடு தயார். தவத்தின் அம்மா “போதும், போதும்” என்று கூறும் அளவுக்கு உணவைப் பரிமாறினாள். குருவுக்குக் கண் கலங்கிவிட்டது. காரத்தினாலோ, உணர்ச்சிவசப்பட்டோ தெரியவில்லை. “என்ன தம்பி, உறைப்பு அதிகமாக இருக்கிறதோ?” என்று தவத்தின் அம்மா கேட்க, “இல்லை” என்று சொல்லிச் சமாளித்தான் குரு.

விடிய விடியப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
விடிந்த பின் அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு, முதல் நாள் இரவு மோட்டார் சைக்கிளை விட்ட இடத்திற்குப் புறப்பட்டனர். “மோட்டார் சைக்கிள் திருத்திய பிறகு உன்னைச் சித்தி வீட்டில் இறக்கிவிட்டு, நான் என் வீட்டுக்குப் போகிறேன்” என்றான் மாறன். அதற்கு குரு ‘ஆம்’ என்றும் சொல்லவில்லை, ‘இல்லை’ என்றும் சொல்லவில்லை. ஏதோ அவன் முகத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவியது.
தொடரும்….

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment