விடுமுறை (பாகம் 1)

0 0
Read Time:6 Minute, 55 Second

கொக்குத்தொடுவாயில் இருந்து புறப்பட்டபோது மாலை 6 மணி ஆகிவிட்டது. “கவனம், யானைக் காடுகளைத் தாண்டிப் போக வேண்டும். இரவு இங்கேயே தங்கிவிட்டு, காலையில் போங்கள்,” என்று பொறுப்பாளர் சொல்லிவிட்டுப் போனது மாறனின் நினைவுக்கு வந்தது. இவனது நண்பன் குருதான், “காலையில் கிளம்பினால் ஒரு நாள் வீணாகிவிடும், இரவோடு இரவாகக் கிளம்புவோம்,” என்று யோசனை சொன்னவன்.

கொக்குத்தொடுவாயில் இருந்து கிளம்பி, செம்மலை, அலம்பில் ஊடாக முள்ளியவளை வந்தபோது, “ஏதாவது சாப்பிட்டுப் போகலாம்,” என்றான் குரு. “8 மணிக்கு புதுக்குடியிருப்புப் போய்விடலாம். அங்கே போய் ஏதாவது சாப்பிடலாம்,” என்று யோசனை சொன்னான் மாறன். குரு அதற்கு அரைகுறையாகத் தலை அசைத்துச் சம்மதம் தெரிவித்தான்.

மோட்டார் சைக்கிள் வற்றாப்பளையைக் கடந்து தேக்கங்காட்டை அடைந்தபோது மக்கர் பண்ணத் தொடங்கியது. ஒருவாறு இரண்டு மூன்று தடவை தள்ளி, ஸ்டார்ட் பண்ணி, பேராறு பாலத்தைத் தாண்டிப் போய் சில மீட்டர்கள் கடந்த நிலையில், முற்றிலும் நின்றுபோனது. எவ்வளவு முயற்சி செய்தும் மோட்டார் சைக்கிளை இயக்க முடியவில்லை.
யாராவது இயக்கப் போராளிகள் அங்கே வந்தால் உதவி கேட்கலாம் என்று காத்திருந்தனர். வானம் மிகவும் தெளிவாக இருந்தது. நட்சத்திரங்கள் மட்டுமே ஒளியைப் பரப்பிக்கொண்டு இருந்தன. மற்றவை எல்லாமே கறுப்பாக இருந்தன. ‘ஒருவேளை ஒளி என்ற ஒரு சக்தி இல்லாமல் போனால், இவை எல்லாம் நிரந்தரமாகக் கறுப்பாக இருக்கும்’ என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று காட்டுக்குள் ‘சர சர’வென சத்தம் கேட்டு மாறனின் சிந்தனை கலைந்தது. , “யானை யானை!” என்று அலறினான் மாறன். இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளைக் கீழே போட்டுவிட்டு, ஆளுக்கு ஒரு திசையில் ஓடினர்.

மாறன் அருகில் இருந்த மரத்தின்மீது தாவி ஏறிக்கொண்டான். குரு தலை தெறிக்க வெட்டவெளியில் தடுமாறி விழுந்து எழுந்து ஓடினான். ஒரு சில வினாடிகளில், தெருவைக் குறுக்கறுத்துக்கொண்டு காட்டுப் பன்றிக் கூட்டம் ஓடியது. மரத்தில் இருந்த மாறனின் கண்களுக்கு அவை பட்டன. “டேய் குரு! யானை இல்லை, பன்றியடா!” என்று கத்தினான். தலைதெறிக்க ஓடிக்கொண்டு இருந்த குருவின் காதில் எதுவும் விழவில்லை. “டேய் குரு! குரு!” என்று பலமாகக் கத்தினான். குரு தன் நண்பனின் குரல் கேட்டு, திசை திரும்பிப் பார்த்தான். “டேய் குரு! வாடா! அது யானை இல்லை, பன்றியடா!” என்று பலத்த குரலில் கத்தினான்.

குரு தலை தெறிக்க ஓடியதைப் பார்த்து மாறனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. குரு, கோபமும் வெட்கமும் தாங்காமல், சிரித்துக்கொண்டு இருந்த மாறனைத் திட்டித் தீர்த்தான். “நீதான்டா முதலில் யானை என்று கத்தினாய். அதனால்தான் ஓடினேன். நான் என்ன யானையிடம் அடிபட்டுச் சாகவோ இயக்கத்தில் சேர்ந்தேன்? செத்தால், நெஞ்சில் வெடிபட்டுச் சாகணும். இப்படி நடுத் தெருவில் யானை மிதிபட்டு உயிரை விட நான் தயார் இல்லை,” என்றான் குரு. இருவரும் நடந்த சம்பவத்தை நினைத்து விழுந்து விழுந்து சிரித்தனர்.

இனியும் இங்கே நிற்பது சரியல்ல என்று அவர்களுக்குத் தோன்றவே, இருவரும் மோட்டார் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு புதுக்குடியிருப்பு நோக்கி நடந்தனர்.

புதுக்குடியிருப்பை அடைந்தபோது இரவு 11 மணி ஆகிவிட்டது. அனைத்துக் கடைகளும் மூடிவிட்டன. சாப்பிடுவதாக இருந்தாலும் சரி, மோட்டார் சைக்கிள் திருத்துவதாக இருந்தாலும் சரி, இனி காலையில்தான்.

ஆனாலும் குரு விடவில்லை. “யாருடைய வீட்டுக்குப் போகலாமா?” என்று கேட்டான். மாறனுக்குக் கோபம் கோபமாக வந்தது. “இந்த நடு இராத்திரியில் யார் வீட்டுக்குப் போவது? உன்னால் ஒரு நேரம் பசியை அடக்க முடியாதா?” என்று திட்டித் தீர்த்தான்.

அவன், குருவைத் திட்டினாலும், அவனது முகத்தைப் பார்க்க அவனுக்குப் பாவமாக இருந்தது. அவன் அருகில் வந்து, ” டேய் இந்த நேரம் எங்கடா போவது?” என்று கெஞ்சலாக கேட்டான். உடனே குரு உற்சாகம் வந்தவனாய், “எங்கட தவத்தின் அம்மா இங்கேதானே இருக்கிறார், அங்கே போவோம்!” என்றான்.

“டேய்! நல்லாய் நேரம் போய்விட்டதடா. இந்த நேரம் போய் அவர்களை எழுப்புவது சரியில்லை,” என்றான் மாறன். மீண்டும் குரு தன் முகத்தைத் தொங்கப் போடவே, “சரி, வா போய் பார்க்கலாம்,” என்றான்.
ஒரு குறுகிய மணல் பாதையால் நடந்து, தவத்தின் அம்மாவின் வீட்டை அடைந்தனர். வீட்டுக்கு முன் இருந்த படலை, மரத்தடிகளால் குறுக்கே போட்டு அடைக்கப்பட்டிருந்தது.

குரு படலை அடியில் நின்று, “அம்மா……!” என்று அழைத்தான். ஆனால் மாறனுக்கு, அது ஏதோ இராப் பிச்சைக்காரன் ‘அம்மா…..’ என்று அழைத்ததுபோல அவன் காதில் விழுந்தது.

தொடரும்….

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment