தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்திய கவிதைப்போட்டி கடந்த 05.11.2023 ஞாயிறன்று சூரிச் நகரில் மிக எழுச்சியாக நடைபெற்றது. சுவிஸ் நாடுதழுவிய வகையில் நடைபெற்ற இப்போட்டியில் கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளிலும் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

காலை 10.30 மணிக்குப் பொதுச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்தைத் தொடர்ந்து 12.00 மணிவரை கவிதை எழுதுதல் போட்டி நடைபெற்றது. தாய்மொழி, தமிழீழம், தமிழீழத் தேசியத்தலைவர், தமிழீழத் தேசியச்சின்னங்கள், மாவீரர் போன்ற விடயப்பரப்புகளில் ஒவ்வொரு பிரிவினருக்குமான விடயப்பரப்புகளுள் 4 தலைப்புகள் கொடுக்கப்படும். அவற்றுள் ஒரு தலைப்பினைத் தெரிவுசெய்து, பிரிவுகளுக்குரிய வரிகளின் எண்ணிக்கையில் கவிதை எழுதுதல் வேண்டும்.



பிற்பகல் 13.00 மணிமுதல் போட்டியாளர்கள் தாம் எழுதிய கவிதையைப் பாடும் போட்டி நடைபெற்றது. கவிதை எழுதுதல், கவிதை பாடுதல் இரண்டுக்கும் நடுவர்களால் புள்ளிகள் வழங்கப்பெற்று, வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு போட்டியின் நிறைவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.

நான்கு பிரிவுகளிலும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கு நினைவுப் பரிசிலும் பங்குபற்றியமைக்கான சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. இவ்வாண்டிற்கான எழுச்சிக்கவி விருதினை செல்வி நிதுர்ஷனா ரவீந்திரன் அவர்கள் தனதாக்கிக் கொண்டார். வெற்றியாளர்களுக்கான பரிசில் 27.11.2023 அன்று பாசல் நகரில் நடைபெறும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வழங்கப்படும்.









கவிதைப்போட்டியில் ஆர்வத்துடன் பங்குபற்றிய போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அவர்களை உற்சாகப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்த பெற்றோர், ஆசிரியர்களுக்கு எமது பாராட்டுகள். பிரித்தானியா நாட்டிலிருந்து வருகை தந்து நடுவராகப் பணியாற்றிய மதிப்புக்குரிய தமிழின உணர்வாளரும் கவிஞருமான கந்தையா இராஜமனோகரன் அவர்களுக்கும் சுவிஸ் நாட்டிலிருந்து கலந்துகொண்ட தாயகப் படைப்பாளர்களான திருமதி வசந்தபிறேமினி அற்புதராஜா, மிதயா கானவி ஆகியோருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.



அடுத்த ஆண்டு பத்தாவது ஆண்டாக நடைபெறவுள்ள தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டியில் கூடுதலான போட்டியாளர்கள் பங்குபற்றி உங்கள் கவிபாடும் திறனை வளர்த்துக்கொள்வதோடு தாயகப் பற்றையும் மாவீரர் தியாகங்களையும் நெஞ்சிருத்தி, உங்கள் ஆளுமைகளை வளர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.



தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்