என் ஆசை தவறு என்றால் யாரும் ஆதரவு தர வேண்டாம்’ – சாந்தனின் உருக்கமான மடல்

0 0
Read Time:6 Minute, 30 Second

என்னைப் போன்ற வெளிநாட்டவர்களுக்கு இந்தியாவில் ரத்த உறவுகள் எப்படி இருக்கும்?’ என சாந்தன் உருக்கம்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த 7 பேரும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். முதலில் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து சிறையிலிருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் நளினி, ரவிச்சந்திரனை தவிர முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். சிறையிலிந்து விடுதலையான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நால்வர் காவல்துறையினர் பாதுகாப்புடன் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

6 மாதங்களுக்கு மேலாகியும் இவர்கள் 4 பேரும் திருச்சியில் சிறப்பு முகாமில் ஏன் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனக் கேள்வி எழுப்புகின்றனர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டாலும் இவர்கள் வெளிநாட்டினர் என்பதால் தற்போது வரை திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்களை விடுதலை செய்யுமாறு சாந்தன் எழுதிய மடல் இது. ’’சிறையில் இருந்தல்ல அறையில் இருந்து விடுதலை கேட்கும் ஒருவனின் மடல் இது. தமிழ்ச் சமூகம் என்னை ஓரளவேனும் அறியும் என்று நம்புகிறேன். உலகப் பிரபலம் ஓருவரின் கொலைச்சதியில் சம்பந்தப்பட்டதாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட நிரபராதியான எனது குரல் ஓரம் கட்டப்பட்டு தண்டனையும் அறிவிக்கப்பட்டது.

செங்கொடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான தமிழ்நாட்டின் பெரும்பாலான தலைவர்களினதும், மக்களினதும் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டங்களினால் விடுதலையும் அறிவிக்கப்பட்டு விட்டது.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இருக்கும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருக்கிறேன். முன்று குழந்தைகள் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களில் 90 ற்கும் மேற்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். சிங்களவர், தமிழர், முஸ்லீம் என்ற வேறுபாடெல்லாம் இங்கு இல்லை. சட்டவிரோதக் குடியேறிகள் அவ்வளவுதான்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நாங்கள் நான்கு பேரும் முகாமின் பிரதான பகுதியில் இல்லாமல் அதற்கும், வாசலுக்கும் இடையில் தகரத்தால் ஜன்னல்கள் அடைக்கப்பட்ட இரண்டு அறைகளுக்குள் முடக்கப் பட்டிருக்கிறோம். ரொபட் பயஸ், ஜெயக்குமார் இருவரும் ஒர் அறையில், நானும் முருகன் இன்னொரு அறையில். இந்த அறைகளும் அருகருகே இல்லை. சந்தித்து கதைக்க முடியாதவாறு கட்டுப்பாடுகள்.

சதிகாரக் கைதியாக சிறையில் விலங்கிடப்பட்டு இருந்தபோது ஏக்கர் கணக்கான சிறையில் நடமாட அனுமதிக்கப்பட்டு இருந்தேன். இப்போது சூரிய வெளிச்சம் உடலில் பட முடியாதவாறு ஒரு அறை மட்டுமே உலகமாக்கப்பட்டு விட்டது. இங்கு தொலைபேசி வசதி கிடையாது. ரத்த உறவுகளை மட்டுமே சந்திக்க முடியும். என்னைப் போன்ற வெளிநாட்டவர்களுக்கு இந்தியாவில் ரத்த உறவுகள் எப்படி இருக்கும்? அறைகளுக்குள் அடைத்து விட்டு நூற்று எழுபத்து ஐந்து ரூபாயினை ஒரு நாள் செலவுக்கு அனுமதித்ததுடன் அரசின் வேலை முடிந்து விட்டது.

எனது சொந்த நாட்டுக்கு அனுப்புமாறு பிரதமர், உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சர்களுக்கு மனு அனுப்பினேன். அடையாள அட்டை, கடவுச் சீட்டு, புதுப்பிப்பது சம்பந்தமாகவும் இலங்கைத் துணை தூதருக்கு அழைத்து செல்லுமாறு மனு கொடுத்தேன். பதில் இல்லை. இனிமேலாவது ஈழத் தமிழ் சமூகமும் , வெளிநாடு வாழ் தமிழர்களும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டுகிறேன். உங்களின் நீண்ட மவுனம் தவறான தகவல்களையே எங்களை மேலும் மேலும் ஒடுக்க நினைப்பவர்களுக்கு தருகிறது.

முப்பத்து இரண்டு ஆண்ட்களாக அம்மாவை பார்க்கவில்லை. அப்பாவின் கடைசி காலத்தில் அவரின் அருகில் இருந்து கடமைகளை செய்ய முடியவில்லை என்ற உறுத்தல் என்னை உருக்குலைக்கிறது. வயடதான அம்மாவுடன் வாழ வேண்டும் என்ற என் ஆசை தவறு என்றால் யாரும் ஆதரவு தர வேண்டாம்’’ என அந்தக் மடலில் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி.

குமுதம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment