மனம்வெந்து கரைந்துருகி,
கண்ணிருந்து வழிந்தோடும்
கண்ணீர்த் திவலைகளும்
மூச்சிருந்து புறப்பட்ட
தீச்சுவாச வெப்பத்தில்
காணாமல்ப் போகின்றன….
காணாமல்ப் போனோரைத் தேடிக் காணத்துடிப்பதில் காலத்தின் கரைதலுக்குள் நாமும் காணாமல்ப் போய்விடுவோமோ என்று கலங்கித்
தவிக்கிறது மனம்…
எங்கள் மண்ணைக்
கொள்ளையடிப்பதில்
கௌதம புத்தருக்கும்தான்
எத்தனை கொள்ளைப் பிரியம்…
அஸ்கிரிய. மல்வத்து பீடங்களுக்களுக்கிடையில்
மடிந்தேபோனது போதி தர்மம்….
அரச மரங்களே! உங்களை எம்
ஆடுகள்கூட உரசிச் செல்லத்
தயங்கிக் கிடக்கின்றன…
நீங்கள் இருக்குமிடமெல்லாம்
குருதி குடிக்கும் புத்தரின் இருப்பிடம்
என்று யாரோ சாகவாசமாய் அவற்றிடம்
சொல்லி விட்டார் போலும்…
எங்கள் வேரும், வேரடி மண்ணும் கரைந்தோடிப் போவதற்குள்,
எங்கள் ஊரும், உரிமைகளும்
காணாமற் போவதற்குள்…
எங்கள் வாழ்வும், வளமும்
வடிவிழந்து போவதற்குள்
யாரேனும் மீட்பர்தான்
இங்கு வருவாரோ? எம்மை மீண்டும்
ஒருமுறைதான் மீட்டெடுப்பாரோ….!
-காந்தள்-