பூதங்கள் ஐந்திலும் பொலிந்து நிறைந்த எங்கள் புனிதர்கள் கண்விழிக்கும் காந்தள்த்திருநாள் மாவீரர்நாள்.
உயிர்மூச்சில் கலந்த
உறவின் பெருவேகம்
ஓர்ம நெருப்பாக
எமை உலுக்கும் செயல்வீரம்
பொங்கித்தகித்தெழும்
புண்ணியநாள்
மாவீரர்நாள்.
தன்னினவிடியலுக்காய்த்
தமையீந்த மறவர்
சிந்தைக் கனவுகளை செப்பிடவே காத்திருக்கும் நன்னாள் மாவீரர்நாள்.
கனத்த விடுதலைதாகம் தகித்தபடியே செவிகுளிரும் அந்த
வெற்றிச்செய்திக்காய்த் தவித்திருக்கும் தமிழ்வீரர் திருநாள்மாவீரர்நாள். தாய்மடிப்புலர்வுக்காய்
ஓடியோடிப்பகை விரட்டி
உறுதிக்களமாடியவர்
உறங்கும்
உறுதியின்உறைவிடம்
உணர்வுபொங்க எழுச்சிகொள்ளும்பெருநாள் மாவீரர்நாள்
நாடிவரும் உறவுகள் தேடி அழும்போதில்
மெல்லுணர்வால் மேனிதொட்டு
வல்லமை கூட்டும்நாள்.
சொல்லாமல் அவர்கள் சொல்லும் கதைகளை எம்
நெஞ்சறைக்குள் நாம் நிறைத்து
எஞ்சிய காலத்தில் அவர் இலட்சியத்தை
எமதாக்கி உறுதிசொல்லும்நாள்மாவீரர்நாள்.
உண்மைத்தமிழர் ஒவ்வொருவரும் தன்னைச்சரிசெய்ய
உளச்சான்றுடனே உறுதிகொள்ளும்நாள் மாவீரர்நாள்.
மாவீரப்பேறே
மண்ணுலகில் எம்வாழ்வு-அதை
மறவாது வாழ்வதற்காய்
மனமேந்தும் கடவுளரை நேரெதிரில் கண்டு பூசிக்கும்
பொன்னாள்
மாவீரர் நாள்.
விளக்கேற்றித்தொழுது
வீரர் கழலொற்றி விழிநீரை விசையாக்கி
வெஞ்சபதம்
செய்வோம்.விடுதலை ஒன்றே இலக்கு. மாவீரமே எங்கள் மண்ணின் மகுடம்.
வெல்வது உறுதி.
கலைமகள்