எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
19.09.2022 திங்கள் அன்று பிற்பகல் 14:15 மணியளவில் ஆரம்பமான இக் கவனயீர்ப்பு நிகழ்வில் சுமார் ஒருமணிநேரமாக தமிழ் உறவுகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு உரத்தகுரலில் தமது உரிமைக்குரல்களை எழுப்பிய வண்ணமிருந்தனர்.
ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்கள் ஆகுதியாகிய இடத்திலிருந்து தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் பதித்த பீடத்தினை உணர்வாளர்கள் கைகளில் தாங்கியவாறு முன்செல்ல, அதன் பின்னால் மக்கள் அணிவகுத்து மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற கோசத்துடன் ஈகைப்பேரொளி செந்தில்குமரன் ஆகுதியாகிய இடத்தில் அமைக்கப்பட்ட அரங்கினை நோக்கி எடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய ஒன்றுகூடலில் தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன், தியாக தீபம் லெப். கேணல் திலீபன், ஈகைப்பேரொளிகளுக்குரிய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்தலுடன் அகவணக்கம், மலர்வணக்கத்துடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
புலம்பெயர் நாடுகளில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்தாலும் தமது வேர்களைத் தேடி அதன் இருப்புக்காக உரத்துக் குரல்கொடுத்த தமிழ் இளையோர்களின் பங்கு இப்பேரணியில் சிறப்பாக அமைந்ததுடன் தமது வாழிட மொழிகளில் புலமைத்துவத்துடனும், ஆளுமையுடனும் அவர்களால் பேச்சுக்கள் வழங்கப்பட்டதுடன், இவ் ஒன்றுகூடலிற்கான பிரகடனமும் வாசிக்கப்பட்டது.
தமிழீழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும்;, தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்திய இவ் ஒன்றுகூடலில், நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து ஐ.நா நோக்கிப் பயணித்த மனிதநேய ஈருருளிப் பயணத்தை மேற்கொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்கள் தாம் பயணித்த நாடுகளில் சந்தித்த அரசியல் பிரமுகர்களிடம் வரலாறு தங்களுக்கு வழங்கிய கடமையின் நோக்கத்தை எடுத்துரைத்ததோடு, இன்றைய ஒன்றுகூடலின் போது ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் காரியாலயத்தில் அரசியற் சந்திப்பும் நடைபெற்றதுடன் எமது கோரிக்கைகள் அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது. இச் சந்திப்பில் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையும், இன்றும் தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திப் பேசப்பட்டது.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலினை அனைவரும் இணைந்துபாடியதோடு, தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவுபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு





























