சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 10.09.2022 சனிக்கிழமை, 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்களும் பேர்ண் மாநிலத்தின் புறுக்டோர்வ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், மத குருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், செயற்பாட்டாளர்கள் என அரங்கம் நிறைந்த மக்களுடன் இருநாள்களும் பெருவிழாவாக நடைபெற்றது.
2020 ஆம் ஆண்டு வெள்ளிவிழாவைக் கண்ட தமிழ்க் கல்விச்சேவை அக்காலப்பகுதியில் நிலவிய கொரோனா நோயத்தொற்றுக் காரணமாக அரங்க நிகழ்வாக நடாத்த முடியாமற்போனதால், முத்தமிழ் விழா 2022 நிகழ்வின் சிறப்பாக வெள்ளிவிழா நிறைவுப் பதிவாகவும் இவ்விழா அமைந்திருந்தது. வெள்ளிவிழா நிறைவுப் பதிவுகளும் மதிப்பளிப்பும் என்ற சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. அத்தோடு, வெள்ளிவிழாவையொட்டி நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரைப் போட்டிகளிலே பங்குபற்றி ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆக்கங்கள் அடங்கிய மலரும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் தமிழ்மொழியில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு நிறைவுசெய்த 1900 மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் தமிழ்க்கல்விப்பணியில் 30, 25, 20, 10 ஆண்டுகள் நிறைவுசெய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றன. 25 ஆண்டுகள் நிறைவு செய்த பள்ளிமுதல்வர்களுக்கு ‘தமிழ்ச்சுடர்’ என்ற உயரிய விருதும் 25 ஆண்டுகள் நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ‘தமிழ்மணி’ என்ற உயரிய விருதும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்கள்.
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்ட இலக்கியப் பட்டயக் கல்விக்கான பட்டயச் சான்றிதழும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது. இத்தாலி, டென்மார்க் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த ஆசிரியர்கள் இச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்கள்.
தமிழ்க்கல்விச்சேவையின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தமிழர் பண்பாட்டு ஆடையணிந்து கலந்துகொண்டமை அழகுக்கு அழகு சேர்த்தது. பெரியவர்கள், இளையவர்கள் என அனைவரதும் ஒருமித்த உழைப்பின் அறுவடையாக சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா 2022 எமது மொழி, கலை, பண்பாடு என்பவை அடுத்த தலைமுறையினரிடம் பக்குவமாகக் கடத்தப்படுகின்ற செய்தியையும், தொடர்ந்தும் ஆண்டு தோறும் இளையவர்கள் இவ்விழாவைச் சிறப்பாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் சுட்டி நின்றது.
























