ஸ்ரீலங்காவின் 74 ஆவது சுதந்திர நாளான இன்று 04.02.2022 வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதியினை சர்வதேசத்திடம் வலியுறுத்தியும் ஸ்ரீலங்காவின் சுதந்திரதினம் தமிழர் தேசத்தின் கரிநாள் என்ற கோசத்தோடு முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இன அழிப்பின் நினைவுச்சின்னமாக காணப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அணிதிரண்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள்,மக்கள் பிரதிநிதிகள் முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்த மக்களின் நினைவாக சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தி விட்டு கவனயீர்ப்பு பேரணியினை தொடங்கி நடைபயணமாக முல்லைத்தீவு நோக்கி புறப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் வட்டுவாகல் கோட்டபாய கடற்டை தளத்தின் முன்னால் நின்று தங்கள் கவனயீர்பினை உரக்க வெளிப்படுத்தினார்கள்.

அதனைத்தொடர்ந்து வட்டுவாகல் பாலத்தில் தீ பந்தங்கைள ஏந்தியாவாறு 2009 ஆம் ஆண்டு இந்த பாலம் ஊடாகவே தங்கள் உறவுகளை ,கணவன்மார்களை இராணுவத்தினரிடம் கையளித்துவிட்டு அனைத்தினையும் இழந்து இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்ற இறுதி இடமான பாலத்தில் நின்று சிறிதுநேரம் தீ பந்தம் ஏந்தியும் கறுப்புகொடிகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் முல்லைத்தீவு செல்வவுரம் வரை கோசங்களை எழுப்பியவாறு சென்று செல்வபுரம் புனித யூதா தேவாலயம் வரை சென்றடைந்து பேரணி நிறைவுபெற்றது.

இந்த கவனயீர்ப்பு பேரணியின் போது முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு நிலமீட்பு போராட்ட குழுவினர் , கடந்தவருடம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் , அரசியல் கைதிகளுக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் ,யாழ் பல்கலை கழக மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் நாடாளுமனர் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் , சிவாஜிலிங்கம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொணடு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் தொடங்கிய இடம் தொடக்கம் நிறைவடைந்த இடம்வரை சிவில் உடை தரித்த புலனாய்வாளர்களின் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலர் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒளிப்படங்கள் எடுத்துள்ளார்கள்.





