சுடரும் விழிகள் கொண்டான்-விரல்
சுட்டும் திசையில் வென்றான்
படரும் தமிழின் அழகில்-பல்
இடர்கள் பொடிபட நின்றான்
இடியும் மின்னலும் தாங்கும்
இதயம்படைத்த தீரன்-அண்ணன்
இலவம் பஞ்சும் தோற்கும்
இளகிய நெஞ்சுக்காரன்
தனக்கென ஒன்றையும் வேண்டிலன்
தமிழர்க்காய் வாழ்க்கையை வேண்டினன்
பலமுறை சதிகளைத் தாண்டினன்
தமிழரின் தலைமகன் ஆகினன்
அண்ணன் பெயர் எங்கள் மந்திரம்
அவர்வழி தொடரின் சுதந்திரம் நிரந்தரம்
அன்பு பண்புடை ஆளுமைத் தந்திரம்
அண்ணனின் வாழ்வியல் வழிகாட்டும் விசித்திரம்
அச்சத்தை துச்சம் செய்து அஞ்சச் செய்தவன்
வஞ்சப் பகையதற்கு அச்சம் விதைத்தவன்
ஆயிரம் போர்க்களம் அதிரடியில் ஆடி
வீரியம் புகட்டிடும் வேங்கைப்புலியிவன்
சிந்தனைச்சிறகிலே புதுமைகள் சேர்த்து
விந்தைகள் புரியும் வேகத்தின் வீச்சவன்
முந்தைச்சந்ததிக்கும் பிந்திய தலைமுறைக்கும்
முத்தமிழ்த்திரளான வேதத்தின் மூச்சவன்
முப்படை கொண்டொரு போர்ப்படைகண்டு
இத்தரையின் தனித்துவனாகச் சிறப்பவன்
வேளையறிந்து உடன் கட்டளை வழங்கிடும்
வேள்வித்தீயிடை காவியப்பிறப்பவன்
சுற்றிவளைத்துப் பகைவந்து சூழ
பற்றியெரிந்த ஆனந்தபுரத்திலே
சற்றும் சளைக்காது நேருக்கு நேர் நின்று
சமர்ப்படை நடத்திய தளபதி எம் தலைவன்
எதிர்ப்படை தகர்த்திடும் விடுதலைத்தீப்பொறி
எதிர்கொண்டாடிடும் தமிழ்ப்படைச் சரவெடி
தலைவனே தற்கொடைப் போராட்ட வடிவம்
கரும்புலி மாவீரம் காண்கின்ற இமயம்
சித்திரம் தீட்டிடும் பெண்களின் கையில்-சன்னம்
சீறிப்பாயும் துப்பாக்கி தந்தவன்
அத்தனை துணிவையும் அள்ளித்தந்து-தமிழ்
மங்கையர் வீரத்தை உலகறியச்செய்தவன்
காந்திய மண்ணுக்கே அகிம்சை சொன்னவன்-உளம்
ஏந்திய இலட்சிய உறுதியில் முன்னவன்
சாதனை சொல்லும் சரித்திரச் சான்றினன்-பெரும்
சமுத்திரம் போலவே வற்றாத ஊற்றவன்
தக்கதருணத்தில் தாதியாவான்-தலைவன்
நிர்க்கதியானோர்க்குத் தன்கை கொடுப்பான்
பாதிப்புற்றோர்க்கு நீதிதருவான்-தலைவன்
சாதிபேதம்கடந்த சோதியாவான்
பக்கபலமாகத் தோழமை செய்வான்
மக்கள் மனங்களைச் சேவையால் வெல்வான்
துக்கம் துடைத்திடும் அன்பினை நெய்வான்
நித்தம் அதிசயக்கோலங்கள் செய்வான்
விசும்பின் விசாலம்கொள் வெளிப்படைக்குணத்தவன்
விரிந்திடும் விளக்கமாய் வியாபிக்கும் குலமகன்
வேதனை முழுதும் சாதனையாக்குவான்
வீரப்புலிப்படை யார்த்திட்ட வேந்தனவன்
வல்வை மண்மடி வாய்த்த திருமகன்
வள்ளுவன் நெறிகளில் வாழும் குறள் மகன்
வாரிவழங்கிடும் வள்ளற்குணத்தவன்
யார்க்கும் உவமையிலா தெள்ளிய பெருமகன்
பிரபஞ்சம் காணாத பிறவியாய் நிமிர்ந்தவன்
பிரமிக்கும் வல்லமையால் பேருலகில் உயர்ந்தனன்
நிகரற்ற வீரத்தின் நிதர்சன நாயகன் -தமிழ்
நெஞ்சங்கள் வாழ்த்திடும் தமிழீழத்தாயகன்
சுயநலமில்லாப் பொதுநலம் பேணும்
சுத்தத் தமிழ்வீரன் தலைவன்
பிரபலம் விரும்பாப் பிரபலன்-அண்ணன்
வரமாகி வந்த பிரபாகரன்
உடல் பொருள் உயிர்துறக்க
உறுதிபூண்ட கரிகாலன்
உரிமைப்போர்த்தவமாய்ப் பெருகிப்பாய்ந்த நதிமூலன்
உற்றமனையாள் பெற்றமக்கள்
சுற்றம்சுகம் அனைத்தும்
பெற்றதாய்மண்ணுக்கென்றே
அர்ப்பணித்த அனலவன்
சொல்லுமுன் செயலாய்க்காணும்
வல்லவச்செயலாளன்-ஒரு
சொல்லிலே விளக்கிடமுடியாச்
சுடுகலக்கையாளன்
தலைவரைப்பற்றியுரைக்கா
வாய்களும் உளதோ இங்கே!
தலைவரைச்சுற்றிப்பறக்கா
மனங்களும் உளதோ இங்கே!
தலைவரைப்போற்றிப்பாடாத்
தமிழிசைக்கு ஏது சுதி!
தலைவரைச்சாற்றி எழுதா
இயற்றமிழாகுமோ கவி!
தாயெனக்கண்டோம் தலைவன்
தமிழ்ப்பற்றை ஊட்டும்போது
தந்தையாய்க்கொண்டோம் தலைவன்
தைரியத்தைக்கூட்டும்போது
அண்ணனாய்ப்பார்த்தோம் அவர்
தங்கையரைத் தாங்கிடும்போது
தனையனாய் ஏற்றோம் அவர்
தாய்மையைப் போற்றிடும்போது
தமிழனாய்புரிந்தோம் அண்ணன்
உயிர்கொடுக்கத்துணிந்தபோது
தலைவனாய் வியந்தோம் அவர்
தரணிக்கே சவாலானபோது
வரலாறு என்பது தலைவரின் வாழ்க்கை-தமிழர்
வாழ்க்கை என்பதோ தலைவரின் வழிகாட்டல்
தத்துவம் என்பது தலைவரின் செயல்கள்-தமிழரின் தனித்துவம் என்பதோ தலைவரின் சிந்தனைகள்
தலைவர் உதித்த அக்கணமே
தமிழர் விடியலின் பொற்கணமே
தமிழும் தலைநிமிர்ந்ததப்பொழுதே
தாய்நிலம் ஒளிர்ந்ததும் அப்பொழுதே
வாழ்க வாழ்க என்று அண்ணனை வாழ்த்த
வார்த்தைகள் மழையெனப்பொழியும்
வானமும் பெருமழை பொழியும்
பூமியில் பசுமையும் விளையும்
கார்த்திகை மாதமும் சிலிர்க்கும்
காந்தள்ப் பூக்களும் சிரக்கும்
சாத்தியமாகும் விடிவை ஓர்நாள்
சாத்தியமாக்கும் சரித்திரனைப்பாடும்
பூரணனாய்ப் பொலியும் எங்கள்
காரணனைக்கவிதை செய்யும்
புன்னகை பூத்தபுலியைப் போற்றி நின்று கூத்தாடும்
என்னோடு சேர்ந்துகொண்டு
இயற்கையே கொண்டாடும்
மன்னவன் அண்ணன் பிறந்த
மாரிப்பொழுதினைப் புகழ்ந்தாடும்
வாழ்க! வாழ்க! வாழ்க! அண்ணன்-தமிழை
ஆள்க! ஆள்க! ஆயிரம் காலங்கள்
நீள்க! நீள்க! இசையுடன் என்றென்றும்
வாழ்க! வாழ்க! திசையெங்கும் அவர்புகழ்
கலைமகள்