வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 15 ஆவது ஆண்டு நினைவு நாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 10 வது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு பஸ்ரில் பகுதியில் இன்று 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்16.00 மணிக்கு கோவிட் 19 சட்டதிட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை மாவீீீீரர் கப்டன் பரா மற்றும் மாவீீீரர் லெப்.பக்கி ஆகியோரின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
மலர் வணக்கத்தை மாவீரர் ஜெகன் அவர்களின் சகோதரன் செலுத்தினார். அகவணக்கத்தை தொடர்ந்து பொதுமக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலான நினைவுரைகள் இடம்பெற்றன. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இளையோர் அமைப்பு உறுப்பினர் திவாகர், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை உறுப்பினர் திரு. போல், பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் உறுப்பினர் திருமதி ஜெகனி ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் உறுப்பினர் திருமதி ஜெகனி அவர்களின் செஞ்சோலைப் படுகொலை நினைவு சுமந்த கவிதையும் சிறப்பாக அமைந்திருந்தது. வழமை போன்று
வெளிநாட்டவர்கள் பலரும் எமது நினைவேந்தலுக்கான காரணத்தைக் கேட்டு தமது ஆறுதல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு)


























