தமிழர் விடுதலைப் போராட்டம் அறவழியிலும், பின்னர் ஆயுதவழியிலும் பெருநீட்சி கண்டு, தமிழீழ நிழலரசு உருவானது. உலகப் பந்தில் வெளி – உள் அரசியல் நகர்வுகளில் உலக நாடுகளின் மூலோபாயங்கள் தமது நலனை அடிப்படையாக்கிக்கொண்டு, பழிவாங்கல் உட்பட இணைந்து சிறுநிலப்பரப்பில் சொற்களால் எடுத்துரைக்கமுடியாத பேரிடராக வன்கொலைகள் நடந்தேறி ஈழத்தமிழர் ஆயுதப் போராட்டம் மே 18ல் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.
தமிழர்களின் தொன்மைக் கலைவடிவமான கூத்தினை ஒருகருவியாக்கி மேதகு எனும் திரைப்படம் பல்தமிழர்களின் கூட்டு முயற்சியால் நிமிர்வுடன் எம்தமிழர் வரலாற்றின் ஒருபொறியைப் பதிவுசெய்துள்ளது.
தமிழர்களின் அடையாளமாக மாறிவிட்ட அரும்பொருளான தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் நாயகனை திரையில் கொண்டுவருவது எளிதானதொருபணியல்ல. ஒரு திரைப்படத்திற்குள் மட்டும் «மேதகு» அவர்களை உள்ளடக்க முடியாது. கலைவடிவத்தில் உண்மையை உண்மையுடன் உரக்கச் சொன்ன பணியினை இத்திரைப்படக்குழு ஆற்றியுள்ளது. கிடைக்கப்பெற்ற வளத்திற்குள் பெரும் கலைஞர்கள் கூட்டுமுயற்சியில் திரையில் ஒரு அறப்போர்க் கலையாக இத்திரைப்படத்தினை படைத்தளித்துள்ளனர். தமிழீழத் தேசிய இனத்தின் விடுதலைப்போர்முகமான «மேதகு» வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தலைமகன் ஒளிமுகத்தை திரையில் ஒளிரவைத்த «மேதகு» படக்குழுவினரை சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் சைவநெறிக்கூடத்தில் அமைந்துள்ள “தமிழர் களறி – நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம்” உளமார வாழ்த்தி மதிப்பளிக்கும் நிகழ்வினை தமிழர்களறி அரங்கில் 07. 08. 2021 சனிக்கிழமை மாலை 15.30 மணிமுதல் ஏற்பாடு செய்திருந்தது.
தமிழர் களறி மண்டபத்தில் மதிப்பளிப்பு
விழா மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கப்பெற்றது. மங்கல விளக்கினை திரு. திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் இணையர், திரு. நசீர், செல்வி சம்யுக்தா சசிக்குமார், திரு. செ. குலம் ஆகியோர் ஏற்றிவைத்தனர். மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையரும், சைவநெறிக்கூட இணைப்பாளருமான சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் நல்லாசி உரையினை வழங்கியிருந்தார். தமிழர்கள் வரலாறு முழுமையாகப் பதியப்பட்டு அடுத்த இளந்தமிழ் தலைமுறைக்கு புரியும்படி கையளிக்கப்பட வேண்டும் என்பது சைவநெறிக்கூடத்தின் வேண்டுகை எனவும் தன்கருத்தை முன்வைத்தார். இளந்தமிழ்ச் சமூகத்திற்கு புரியும் வகையில் இதுபோன்ற படைப்புக்கள் வெளிவரவேண்டும். இக்குழுவில் பணியாற்றிய நற்றமிழ்ப்படைப்பாளிகள் நம்தமிழ் வரலாற்றை, வலிகளை தொடர்ந்து உண்மையுடன் ஆவணப்படுத்த வேண்டும் எனும் வேண்டுகையினை தமிழர் களறி அமைப்பும் இந்நிகழ்வில் பங்கெடுத்த தமிழ்ச் சான்றோர்களும் முன்வைத்திருந்தனர்.
இயங்கலையில் நிகழ்வு
அயர்லாந்து, டென்மார்க், தமிழகத்தில் இருந்தபடி திரைப்படப் படைப்பாளிகள் இந்நிகழ்வில் இணையவழியில் பங்கெடுத்து மதிப்பளிப்பினை ஏற்று, சிறப்புரை ஆற்றி, இயங்கலையில் நிகழ்வில் முழுமையாகப் பேர்ன் தமிழர்களறி மண்டபத்தில் கூடியிருந்தனர். சுவிஸ் பேர்ன் வாழ் தமிழ்மக்கள் பலரும் நல்லுணர்வுடன் மேதகு திரைப்பட நிறைகளை நேரில் வாழ்த்தி நிறைந்திருந்தனர்.
«மேதகு» திரைப்படத்தில் பணியாற்றிய இயக்குனர் தி. கிட்டு, தயாரிப்புத் தலைமை செ. குமார், நடிகர் குட்டிமணி, படத்தொகுப்பாளர் சி.மு. இளங்கோவன், ஒளிப்பதிவாளர் ரியாஸ், இசையமைப்பாளர் ஆ. பிரவின் குமார், கலை இயக்குனர் முஜிபூர் ரகுமான், தயாரிப்புத் தலைமை சுமேஸ்குமார் ஆகியோருக்கு தமிழர் களறியின் பெயரால் விருதுகள் வழங்கப்பட்டு, ஒருலட்சம் ரூபாய் மேதகு படக்குழு நிதியத்திற்கு கொடையும் வழங்கப்பட்டது.
இம்மேடையில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு 10 ஆயிரம் சுவிஸ் பிராங்குளை தாம் இப்படக்குழுவிற்கு கொடையளிக்கவுள்ள நற்செய்தியினையும் பகிர்ந்துகொண்டனர்.
இயக்குனர் கிட்டு தெரிவிக்கையில் இது விதைதான், இன்னும் பல் படைப்புக்கள் பல இளம் இயக்குனர்களால் படைக்கப்பட வேண்டும் எனும் நற்கருத்தினையும் முன்வைத்தார்.
தலைவராக தோன்றியிருந்த நடிகர் குட்டிமணி அவர்கள், இப்பாத்திரம் ஏற்ற நான் தனிமனிதனாக மிகுந்த ஒழுக்கத்துடனும் இப்பெருமனிதன் நற்குணத்தை ஒழுகி வாழ விரும்புவதாக தன் பட்டறிவைப் பகிர்ந்திருந்தார்.
தயாரிப்புத் தலைமையாளர் திரு. சுமேஸ்குமார் அவர்கள் தமது படைப்புக்கள் உண்மையுடன் தொடரும் என்பதை மொழிந்திருந்தார்.
படக்குழு இணைப்பாளர் திருக்குமரன் இப்படம் உருவாக இப்படக்குழு கடுமையாக உழைத்த உழைப்பினை அனைவருக்கும் புரியும்படி எடுத்துரைத்தார்.
நிறைவாக அனைத்துக் கலைஞர்களும் «மேதகு» படக்குழு பெற்றுக்கொள்ளும் முதலாவது விருதாக «தமிழர் களறி» அளிக்கும் விருது அமைந்திருப்பது தமக்கு மகிழ்ச்சியினை அளிப்பதாக தெரிவித்தனர்.
விருதில் இவ்வாறு மதிப்பளிப்பு பொறிக்கப்பட்டிருந்தது:
“ஈழப்போரியலின் வரலாற்றை திரைமொழியால் செழுமைசெய்து, «மேதகு» எனும் வரலாற்று ஆவணமாக்கி, இந்த உலகிற்கும் எம் இளையதலைமுறைக்கும் கையளித்திருக்கும் கலைஞர்களாகிய உங்களுக்கு எம் உளம் உவந்த வாழ்த்துகள். தொடரும் உங்கள் பணி சிறக்கட்டும்”
பணிசிறக்க வாழ்த்தி நிகழ்வு நிறைவடைந்தது.
தொகுப்பு: சிவமகிழி





























