2009ம் ஆண்டு இலங்கை அரசால் நடத்தப்பட்ட போரில் தமிழீழ மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது, குறித்த படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்து தன்னுயிர் ஈந்த ஈகைப்போராளி கொளத்தூர் முத்துகுமாரின் தந்தை குமரேசன் ஐயா உடல் நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.
அன்னாரது இறுதி சடங்கு சென்னை கொளத்தூர் சிவசக்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (20.5.2021) வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர்தழல் ஈகி அன்புத்தம்பி வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களைப் பெற்றெடுத்த தந்தையார் அப்பா குமரேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் என்றும் சொல்லும் அவர்,

நாம் தமிழர் கட்சி அரசியல் பேரியக்கமாக உருவெடுத்த இன எழுச்சி மாநாட்டிற்கு வருகை தந்த அவர், நடைப்பெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் களத்திலும் எம்மை ஆதரித்து, நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டுமென துணைநின்று வலுசேர்த்தவர் அப்பா குமரேசன் அவர்கள். அப்பா குமரேசன் அவர்களது மறைவு தனிப்பட்ட முறையில் என்னுள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி, ஈடுசெய்ய இயலாப் பேரிழப்பாக மாறியிருக்கிறது. இனத்திற்காக உயிரையே கொடையாகத் தந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனை ஈன்றெடுத்த அப்பா குமரேசன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! என்று தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

அவரது மறைவு குறித்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ‘’தன் மகனை இனத்திற்கு ஒப்படைத்தவர். எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் போராட்டத்தில் பங்கெடுப்பவர். உடல்நலம் குன்றிய காலத்திலும் தனது பங்களிப்பை நிறுத்தாதவர். எங்களது ஈழப்போராட்டங்களில் பங்கெடுத்து உற்சாகமூட்டுபவர். மாவீரன்.முத்துக்குமாரின் தந்தை மறைந்தார். ஐயாவிற்கு புகழ்வணக்கம்’’என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.