பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (18.05.2021) செவ்வாய்க்கிழமை மழைக்கு மத்தியில் உணர்வோடு இடம்பெற்றது.
பிற்பகல் 15.00 மணியளவில் பாரிஸ் நகரின் Place de la Bastille பகுதியில் ஆரம்பமான இந்நிகழ்வில்
பொதுச் சுடரினை பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் பிரதிநிதி செல்வி டிலானி அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை முள்ளிவாய்க்கால் மண்ணில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழன்பன் அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் கோவிட் 19 விதிகளுக்கு அமைவாக அணிவகுத்து ஒவ்வொருவராக மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பொண்டி நகரபிதா Stephen Hervé, பிரான்சு பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்குரிய ஆதரவு குழுவின் தலைவர், Seine saint denis பாராளுமன்ற உறுப்பினர் Marie George Buffet, Seine saint denis பாராளுமன்ற உறுப்பினர Stéphane Peu,
பொண்டி மாநகர முன்னாள் பிரதி நகரபிதா Sylvine Thomassin
சாவினி சுர் ஓர்ஜ் மாநகர சபை உறுப்பினர் David Fabre
குர்திஸ்தான் விடுதலை அமைப்பின் பெண்கள் அமைப்புப் பிரதிநிதி Beirvan Firat
நுவாசி லு செக் நகர பிதா Elhadj Mahmoud BA
ஆகியோர் கலந்துகொண்டு உணர்வுபொங்கத் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இவர்கள் தமது உரைகளில் எமது போராட்டங்களுக்கு தமது ஆதரவை உணர்வு பொங்கத் தெரிவித்திருந்தனர்.

பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த சர்விகா அவர்களின் கவிதை, தமிழ் இளையோர் அமைப்புப் பிரதிநிதி செல்வன் கௌதம்,பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் பிரதிநிதி செல்வி டிலானி, தமிழ் இளையோர் அமைப்புப் பிரதிநிதி செல்வன் சஞ்ஜித் ஆகியோரின் பிரெஞ்சுமொழியிலான பேச்சு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு அரசியல் இணைப்பாளர் திரு.பாலகுமாரன் அவர்களின் பேச்சு, தமிழர் மனித உரிமை மையப் பொதுச் செயலாளர் திரு.கிருபாகரன் அவர்களின் ஆங்கில உரை, செயற்பாட்டாளர் திரு.மகிந்தன் அவர்களின் பிரெஞ்சுமொழி உரை ஆகியவற்றோடு தமிழீழ மக்கள் பேரவையின் ஊடகப்பேச்சாளர் திரு.மோகனதாஸ் அவர்கள் பல வெளிநாட்டவர்களின் உரைகளையும் எடுத்துக்காட்டாக முன்வைத்து உணர்வுபொங்க அவரது சிறப்புரை தொடர்ந்திருந்தது.

பொண்டி தமிழ்ச்சோலை மாணவியரின் முள்ளிவாய்க்கால் எழுச்சி நடனம் அனைவரையும் கவர்ந்திருந்தது.
பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தின் பாடகர்களின் எழுச்சி கானங்களும் இடம்பெற்றிருந்தன.
கடும் மழைக்கு மத்தியிலும் இம்முறையும் எமது கோரிக்கைகள் பற்றிய வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டமை வெளிநாட்டவர்கள் பலரையும் சிந்திக்கவைத்தது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)



































