இராணுவத்தின் தடைகளை தாண்டி நந்திக்கடலில் சிவாஜிலிங்கம், பீற்றர் இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி இடம்பெறக் கூடாதென பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம். இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட தரப்பினர் இன்று காலை நந்திக்கடலில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் பிரதேசங்கள் முழுமையான இராணுவ வலயங்களாக்கப்பட்டு, பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.கே.சிவாஜிலிங்கம், பீற்றர் இளஞ்செழியன், நிஷாந்தன் சுவீகரன் உள்ளிட்டவர்கள் இன்றுகாலை 10 மணியளவில் அஞ்சலி செலுத்தினர்.

நந்திக்கடலோரத்தில் பதாதை கட்டப்பட்டு, விளக்கேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த பீற்றர் இளஞ்செழியன் இறந்தவர்களை அஞ்சலி செலுத்துவது எமது கடமை அதை யாரும் தடை செய்யமுடியாது. அந்த கடமையை நாம் நந்திகடல் ஓரத்தில் செய்துள்ளோம். எத் தடை வந்தாலும் அதை உடைத்தெறிவோம். இலங்கை அரசின் அடாவடிக்கு இது பதிலடியாக இருக்கட்டும் என்றார்.
நந்திக்கடலில் பதாதை கட்டப்பட்டு, விளக்கேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.



வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.




முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் தமிழாராய்ச்சி மண்டபத்திற்கு முன்பாகவுள்ள தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியபோதே பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் பொலிஸாருடனான கடும் வாக்குவாதத்தின் பின்னர் எச்சரிக்கையுடன் அவர் விடுதலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
