மே 18 மௌனிக்கப்பட்ட எம் விடுதலைப் போராட்டம் இறுதி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த நாட்களில், எம் தேசம் மீது இலங்கை அரசு செய்திருந்த பொருளாதார, மருத்துவத் தடைகள் வலுப்பெற்றன. நிவாரணப் பொருட்களின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டது. ஒருகட்டத்தில் நான் நினைக்கிறேன் உடையார்கட்டு என்று. அதற்குப் பின்பான காலங்கள் இன்னும் மோசமடைந்தது. இவ்வாறான தடைகளை எதிர் கொள்ள முடியாது ஏற்பட இருந்த பட்டினிச் சாவை முறியடித்து எம் மக்களை உயிர்காக்கும் செயற்பாட்டைச் செய்ய வேண்டும் என்ற நிலை எழுந்தது.
அப்போது விடுதலைப்புலிகளின் மனிதநலச் செயற்பாட்டு பிரிவுகள் இதைச் செய்ய வேண்டிய அத்தியாவசியத் தேவை எழுந்த போது, தமிழீழ தேசியத்தலைவரது கட்டளைக்கேற்ப தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறையின் நிர்வாக சேவைப் பிரிவும், அனைத்துலக அரசசார்பற்ற நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் இணைந்து செயற்படுத்திய திட்டம் “கஞ்சித் திட்டம்”.

கிட்டத்தட்ட 15 இற்கும் மேற்பட்ட நிலையங்கள் இரணைப்பாலைப் பகுதியில் ஆரம்பித்து புதுமாத்தளன் பகுதியில் விரிவாக்கம் அடைந்து முள்ளிவாய்க்கால் உண்டியல் சந்தி வரை இயக்கப்பட்டன. ஒவ்வொரு நிலையங்களுக்கும் புனர்வாழ்வுக்கழக மற்றும் நிர்வாகசேவைப் பணியாளர்கள் பொறுப்பாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கான உதவியாளர்கள் கொடுக்கப்பட்டு கஞ்சி சமைக்கும் திட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்டது.

இறுதி வரை சேமிக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களின் களஞ்சியங்களில் இருந்தும் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்களிடம் இருந்த குறுகிய அளவிலான அரிசியிலும் இத்திட்டத்தை கஞ்சித்திட்ட பொறுப்பானவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள்.

கஞ்சிக்குப் பயன்படுத்துவதற்கு உப்பு தாராளமாக இறுதிவரை களஞ்சியங்களில் இருந்தது. அரிசிக்குத் தான் தட்டுப்பாடு வந்தது ஆனாலும் கஞ்சித்திட்டம் இறுதியாக உண்டியல்சந்தி வரை இடைநிறுத்தாமல் வழங்கப்பட்டது.

இரணைப்பாலையில் நடைமுறைப்படுத்த ஆரம்பித்த போது நீரில் அரிசியும் உப்பும் தேங்காய்ப்பாலும் சேர்த்து சமைக்கப்பட்ட கஞ்சியை உணவாக வழங்கிய போதும் பின்நாட்களில் தேங்காய்த் தட்டுப்பாடு காரணமாக அங்கர் பால்மாவை கரைத்து சேர்த்த கஞ்சி வழங்கப்பட்டது. தொடர்ந்த நாட்களில் அங்கர் பால்மாவின் இருப்பும் குறைந்த போது தனித்து உப்பு மட்டும் சேர்த்த கஞ்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. இதையே எம் மக்கள் உண்டு பசியாறினார்கள். இதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

கஞ்சி எங்களின் அடையாளமாக மாறிப் போனது.
சிங்கள இனவெறிப்படையின் இனவழிப்பின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் எவ்வாறு நிமிர்ந்து நிற்கின்றதோ அவ்வாறே கஞ்சியும் எங்களின் வாழ்வியல் அடையாளமாக்கப்பட்டது.

✅ இது எங்களின் அடையாளம்
✅இதை அடுத்த தலைமுறைக்கு சரியான தகவல்களுடன் கொண்டு சேர்ப்போம்
✅ மே 18 ஆம் நாள் அன்றாவது எம் இல்லங்களில் கஞ்சியை உணவாக்குவோம்.
✅ எங்களின் பல்லின நண்பர்களுக்குக் கஞ்சியை பரிமாறி எங்கள் மீது சிங்கள வெறியர்கள் செய்த இனவழிப்பை அவர்களுக்கு எடுத்துரைப்போம்.
✅ உப்புக் கஞ்சியின் ஊடாக எங்கள் பிள்ளைகளுக்கு முள்ளிவாய்க்காலின் வலிகளை உணர்த்துவோம்.
கஞ்சி குடித்து வாழ்ந்தவர்களில் ஒருவனான …
இ.இ. கவிமகன்
14.05.2021
நன்றி
இ.இ. கவிமகன்