நேற்று சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தின் புகையிரத நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று அக்கினிப் பறவைகள் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டது .
மாலை 17.00 மணிக்குத் தொடங்கி மாலை 19.00 மணிக்கு இப்போராட்டம் முடிவுக்கு வந்தது. புலம்பெயர் தேசங்களில் ஏற்பட்ட எழுச்சிக்கு ஆதரவாகவும் மற்றும் தாயகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாகவும் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. சுவிஸ் நாட்டின் கொரோனா சட்டங்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட தொகையினைவிட கூடுதலான மக்கள் கலந்துகொண்டு, தமிழர்களின் எழுச்சிக்கு வழுச்சேர்த்தனர். குழப்பகரமான சூழ்நிலையில் தமிழர்களின் உண்மையான மற்றும் பிரயோசனமான கோரிக்கைகள் அவ்விடத்தில் முன்வைக்கப்பட்டன.
கோரிக்கை 1
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், கைதுசெய்யப்பட்டிருக்கும் தமிழ் அரசியற்கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்.
கோரிக்கை 2
தமிழீழத்தில், சிங்கள குடியேற்றங்கள் அமைப்பது நிறுத்தப்படவேண்டும்.
கோரிக்கை 3
சுவிஸ் அரசாங்கம், இலங்கையுடனான, “இடப்பெயர்வு தொடர்பான கூட்டாண்மையிலிருந்து”, விலகவேண்டும்.
கோரிக்கை 4
சுவிஸ் அரசாங்கம் ஈழத்தமிழர்களின் தேசியத்தையும் மற்றும் ஈழத்தமிழர்களின் தாயகமான தமிழீழத்தையும், அங்கீகரிக்க வேண்டும்.
கோரிக்கை 5
தமிழீழத்திற்கும் இலங்கைக்குமிடையிலான போர்களின்போது காணாமற்போன, மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான, ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும். அந்த விசாரணையில், இலங்கை அரசாங்கத்தின் முறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் மீது முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டும்.
கோரிக்கை 6
அபகரிக்கப்பட்ட தமிழீழ நிலப்பரப்புகளை விடுவிக்க, இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். அத்துடன், நில அபகரிப்புக்கு எதிராக இராணுவ முகாம்களின் முன் போராட்டம் செய்யும் மக்களை சர்வதேசச் சமூகத்தின் பிரதிநிதிகள் சந்திக்க வேண்டும்.
கோரிக்கை 7
தமிழீழப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இலங்கை இராணுவத்தினர் ஓர் அக்கிரமிப்புப்படை என்பதை சர்வதேசச் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கோரிக்கை 8
ஈழத்தமிழர்களுக்கும் மற்றும் இலங்கை அரசுக்குமிடையிலான பிரச்சனைகள் தொடர்பான ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும். அந்த விசாரணையின் முக்கிய அம்சமாக தமிழினவழிப்பு இருத்தல் வேண்டும். அத்தோடு, அந்த விசாரணையில் பிரித்தானிய காலனியத்துவவாதிகளின் நடவடிக்கைகளும், நோக்கங்களும், மகாவம்சச் சித்தாந்தமும், இலங்கைத்தீவின் பூகோள முக்கியத்துவமும் மற்றும் முள்ளிவாய்க்காற் படுகொலையில்; அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, சீனா போன்ற நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பும் விசாரிக்கப்படவேண்டும்.
கோரிக்கை 9
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையைக்கொண்ட, தமிழீழம் தொடர்பான சர்வதேச வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும். அவ்வாக்கெடுப்பின் விதிமுறையை தமிழீழத்தில் வாழும் ஈழத்தமிழர்களும், உலம்பெயர்ந்து வேறுநாடுகளில் குடியுரிமை பெற்றும், குடியுரிமை பெறாமலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களும், உள்ளடக்கப்படவேண்டும்.