அன்பார்ந்த சிறியோரே
அறிவார்ந்த பெரியோரே
ஈழ மண்ணுக்காய்
மடிந்துவிட்ட மறவர்களை
மன்னர்களை மனதிருத்தி
உங்களை நான்
மன்றாடிக் கேட்கின்றேன்
மானமதே பெரிதென்று
மாண்டுபோன மைந்தர்களின்
மங்காத பெயராலே
உங்களை நான்
மண்டியிட்டு கேட்கின்றேன்
ஆண்டாண்டு காலமதாய்
ஆண்ட இனம் வாழ்வதற்காய்
ஆவிதனை அர்ப்பணித்த
அன்பர்களின் பெயராலே
உங்களை நான்
அடிதொழுது கேட்கின்றேன்
கைக்கெட்டும் தூரத்தில்
தமிழீழம் தெரிகிறது
அதனை
வாய்க்கெட்ட வொண்ணாமல்
வழிகளினை அடைக்காதீர்🙏
வந்ததுவே லாபமென
சில்லறையால் பை நிரப்பி
கல்லறைவாழ் தெய்வங்களை
கனலில் இட்டு நடக்காதீர்
ஆளுக்கு பங்கிட்டு
கூறிட்டு… தாய் மண்ணை
கூவி விக்காதீர் – தமிழ்
குலமழித்து போகாதீர்
நாம் தொழுத கடவுளர்கள்
கல்லாகி போனதனால்
நாம் அழுத நீர்த்துளிகள்
கடலாகிக் கிடக்கிறது
அதில்
நீந்தி விளையாட
நீசர்களை விட்டுவிட்டு
நீதிமகள் கண்கட்டை
நீக்கும் வழி தனை மறந்து
ஆங்காங்கே தம்மிடையே
மேதை தமிழர் பலர்
மோதி அழிகின்றார்
விலையை கொடுத்தவர் நாம்
பொருளை
விற்பது முறையல்ல
வாங்குதற்கன்றோ
வகை தொகையாய்
தலைகொடுத்தோம்
ஆமாம்
ஈழமதை கையில் பெற
நாங்கள்
கொடுத்த விலைக் கீடில்லை
விலையை கொடுத்தவர் நாமே
பொருளை
விற்பது முறையல்ல
பற்றோடு பயணிக்க
தலைப்பட்டோர் தமக்குள்ளே
எட்டாத தொலைவாகி
எங்கெங்கோ முகம் நோக்க
வல்லூறும் நரி யாவும்
வந்தாங்கே குடிபுகுந்து
வில்லோடு நின்றவரை
விழுங்கியதில் வியப்பில்லை
இமயம் தாங்குமென
இப்போதும் சொல்பவரே
உங்கள்
இதயத்தை தொட்டு
ஒருவார்த்தை கேளுங்கள்
எம் உதயமதை தடுப்பவனே
இமயமதை ஆள்கின்ற
வரலாற்றை அது சொல்லும்
சத்தியமாய் முடியவில்லை
செத்தவர்கள் புண்ணியர்கள்
இந்தநிலை பாராது
இங்கிதமாய் தூங்குகிறார்
வெண்ணை திரள்கையிலே
தாழியினை உடைப்பதற்கு
தன்னை கொடுப்பவரே
தயவுசெய்து நில்லுங்கள்
அரசியல்… தந்திரம்…
அது இது என்று
வஞ்சகரை பின்னிறுத்தி
முன்னகர்ந்து பிழைக்காதீர்
இன்தமிழாள் இனிமையுடன்
இந்நிலத்தில் வாழ்வதற்கு
தக்க நீதிதனை
தக்கவைக்க தோள்கொடுங்கள்
அன்றேல் அகலுங்கள்
‘இவர்கள்’ அதைச் செய்வார்கள்
ஈழம் எம் அடையாளம்
ஈழநிலம் எம் தேசம்
இளைய தலைமுறையே
இனி எங்கள் வருங்காலம் !
- ஈழத்தீ
