கேணல் ராயு
மறவனே
உன் சாதனையுள்
எதை விடுத்து எதை உரைப்போம்
அள்ள அள்ள குறையவில்லை
அத்தனையும் சரித்திரங்கள்
உனக்கு நிகர் நீ என்றால்
எவர் மறுப்பார் ?
எவர் கறுப்பார்?
எவரேனும் வாருங்கள்
கொஞ்சம் இவன்
அகராதி பாருங்கள்
அதிகாரம் என்றாலே
அணியாக பலவேளை
ஆங்காங்கே ஒட்டிவிடும்
ஆடம்பரத்தை _இவன்
எங்கேதான் ஒளித்துவைத்தான் ??
மூலைமுடுக்கெல்லாம்
மூஞ்சூறாய் தேடிவிட்டோம்
கண்ணில் அது படவில்லை
ஒருவேளை
ஆளுமையும் அர்ப்பணிப்பும்
அமைதியும் நற்பண்புகளும்
பின்னிப் பிணைந்துவிடின்
ஆடம்பரம் அங்கே
அணிகலனாய் வாராதோ?
அப்படித்தான் இருக்குமென
எம் ஆராய்ச்சி சொல்கிறது
காற்றுக்கு ஓய்வேது…?
அவன் காற்று..!
பெருவீரன் சுமை குறைய
பலவீரர் பலம்கொள்ள
ஓய்வுறக்கம் அறியாது
ஓடிக்கொண்டே இருப்பான்
போரியலோ அறிவியலோ
கடலியலோ வானியலோ
அண்ணனது ஆணை வரின்
அங்கிருப்பான் தடை தகர்ப்பான்
சுவையாய் பழுத்த கனி
தன் வேர் தன்னை அறியாது
வேரானான் பலருக்கு
கூர் ஆனான் எதிரிக்கு
அகல விரிந்தவிழி
அதற்கேற்ப பணி செய்யும்
கட்டெறும்பு அசைந்தாலும்
கண்டுவிடும் அந்தநொடி
சுற்றிச் சுழன்றபடி
அத்தனையும் பதிவாக்கும்
அதிராத அவன் நடையும்
அழகான புன்சிரிப்பும்
கரகரப்பு ஏதுமற்ற
கணீர் என்ற அவன் குரலும்
கணந்தோறும் சிந்தனையுள்
அமிழ்ந்திருக்கும் அவன் முகமும்
கண்ணுக்குள் அல்ல
எம் நெஞ்சுக்குள் நிறைந்திருக்கு
சில பல வரம்புக்களால் அவனை
வரைந்துவிட முடியாது
ஏனெனில் அவன்
சரித்திர நாயகன் இல்லை
பல சரித்திரங்களின் நாயகன்
அவன் மலர்ந்த இந்நாளில்
ஈன்றவரை வணங்குகிறோம்
அவனுள் புதைந்திருந்த
அத்தனையும் வெளிக்கொணர்ந்த
தலைமகனை வணங்குகிறோம்
எமக்கென்றும் அவன் வரமே
விடுதலைக்கு பெரும் உரமே..!
ஏனெனில்
அவன் சரித்திர நாயகன் இல்லை
பற்பல சரித்திரங்களின் நாயகன்..!
_ அவன் நிழலில் தவழ்ந்த மகள்