தமிழினவழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி ஸ்ராஸ்பூர்க் நகரிலிருந்து பரிஸ் நகர் வரை மனிதநேய ஈருருளிப் பயணம்

0 0
Read Time:7 Minute, 50 Second

எதிர்வரும் 46 ஆவது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு ஐரோப்பிய நாடுகளை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்க வைப்பது காலத்தின் தேவையாகும்.


தமிழ் இனவழிப்பிற்கான அனைத்துலக சுயாதீன விசாரணையையும், தமிழர்களுக்குத் தமிழீழமே தீர்வு என்பதனையும் வலியுறுத்தி மனித நேய ஈருருளிப்பயணம் நடைபெறவுள்ளது. பிரான்சு நாட்டையும்  ஐரோப்பிய  நாடுகளையும் ஊக்குவிக்கும் முகமாக நடைபெறவுள்ள இந்த ஈருருளிப் பயணம், எதிர்வரும் 04.01.2021 திங்கள் அன்று ஐரோப்பியத் தலைநகரமாகிய ஸ்ராஸ்பூர்க் (Strasbourg) மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பியப் பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஆலோசனை அவையின் முன்பாக ஆரம்பித்து,  08.01.2021  வெள்ளிக்கிழமை அன்று பிரான்சின்  தலைநகர் பாரிசில் அமைந்துள்ள பாராளுமன்றம் வரை செல்லவுள்ளது.
உறவுகளே !
2009 ம் ஆண்டு சிறீலங்காவின் பௌத்த பேரினவாத அரசு எம் மக்கள் மீது மனிதநேயமின்றி பெரும் நச்சுக்குண்டு வீச்சுக்களாலும் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களாலும்  மற்றும் உயிர் காக்கும் உணவு மற்றும் மருந்துகளை தடை செய்தும் திட்டமிட்ட முறையில் தமிழினப்படுகொலையை  மேற்கொண்டது. போர் மௌனிக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த நிலையில், தொடர்ந்தும் தாயகத்தில் எம்மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பினைச் சிறீலங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசு திட்டமிட்டு முன்னெடுத்து வருகிறது. 
எமது மக்களின் தொடர்போராட்டங்களின் விளைவாக ஐக்கிய நாடுகள் அவை மட்டத்தில் முதல் கதவு திறக்கப்பட்டு படிப்படியான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உண்மைகள் ஒருபோதும் அழிவதில்லை என்பது போல தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு செய்த போர்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும்  தமிழினப்படுகொலை பற்றி நீதி விசாரணை தொடர்பான தீர்மானங்களும் கடந்த ஆண்டுகளில் வெளிவரத்  தொடங்கியுள்ளன.
மறுபக்கத்தில் சிறீ லங்கா அரசு தான் நடாத்திய தமிழினப்படுகொலை, போர்க்குற்றம், மனித நேயத்திற்கெதிரான குற்றங்கள், சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சில அரசியல் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்கள், தனிப்பட்ட சில சுயநலவாதிகள், சில புலம்பெயர்தேசக் கைக்கூலிகள், சந்தர்ப்பவாதிகளைப் பயன்படுத்தியே ஐக்கிய நாடுகள் அவையின் குற்றச்சாட்டு மற்றும் அனைத்துலக விசாரணைகளிலிருந்து சிறீ லங்கா அரசு தப்பிக்க முனைவதும் இங்கு கவனிக்கத்தக்கது. 
இருந்தபோதும் 2009 ம் ஆண்டின் பின்னான காலப்பகுதியில் புலம்பெயர் தேசத்தில் மக்கள் முன்னெடுத்த அறவழிப்போராட்டங்கள், அரசியல் சந்திப்புகள், கருத்தரங்குகள், போன்ற செயற்பாடுகளால் இன்று நாம் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். அது மட்டுமல்லாமல் எமக்கு நீதி கிடைப்பதற்கான கதவும் திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையாளர்களின் அறிக்கைகளைப் படித்த அனைவருக்கும்  இவ்விடயங்களின் ஆழம் தெரிந்திருக்கும். 
இந்த நகர்வின் அடுத்தகட்ட முடிவினை எடுப்பதற்கு இன்னும் ஐம்பது நாட்களே உள்ளன. இந்நிலையில் எமது பட்டறிவுகளின் அடிப்படையில் போராட்டங்களைத் தொடர்ந்தும் நடாத்தி சிறீலங்கா அரசின் அரசியல் நாடகத்தையும் கபடத்தனத்தையும் தமிழினப்படுகொலையை முன்னெடுக்கும் வெறியையும் உலகறியச்செய்து, தமிழீழ விடுதலைக்கான ஆதரவைத் திரட்டும் வேலைகளைத் துரிதப்படுத்தல் அவசியமாகின்றது. இன்றுள்ள பூகோள நலன் சார்ந்த அரசியலில் எமது முயற்சிகள் மாத்திரமே எமக்கான விடுதலையைப் பெற்றுத்தரும். இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதையும் தமது தலைவிதியினை  நிர்ணயிக்கும் பெரும் சக்தியாக தமிழ் மக்களே இருக்கின்றார்கள் என்பதையும் சர்வதேசம் விளங்கியுள்ளது. இந்த நிலையில் நீதிக்கான நாட்களை எண்ணி எமது வேலைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பினைக் கொண்டவர்களாக உள்ள நாம் மக்கள் சக்தியாகத் திரண்டு, திறக்கின்ற சர்வதேசத்தின் கதவுகளின் வழியாக, சிறீ லங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசினை  அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திற்குக் கொண்டு செல்லும்  வகையில் எமது போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும். 
«காலத்திற்கேற்ப வரலாற்று கட்டாயத்திற்கமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை» மற்றும் «நீதியின் அடிப்படையில், மனித தர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள்» என்ற தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கூற்றுக்களுக்கமைய  இலட்சியத்தில் உறுதி கொண்டு தேசியத்தலைவரின் வழிகாட்டலில் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி அறவழிப்போராட்டங்களில் பங்கெடுப்போம். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment