“ரகு இல்லையெண்டதால வாறதை நிப்பாட்டியிடாதீங்க; எங்கட வீட்டுக்குத்தான் முதல் முதல் வந்தனீங்கள். தொடர்ந்து வராமல் விட்டிடாதீங்க” – வீரச்சாவடைந்த ஒரு மாவீரரின் வீட்டுக்குப் போனபோது அவனது தாயார் பூரணலட்சுமி அழுகையினோடே ஒரு போராளியிடம் விடுத்த வேண்டுகோள் இது.
அந்தப் போராளியிடம் “இந்தாங்க இவன் ரகுவை இயக்கத்துக்கு கூட்டிக்கொண்டுபோங்கோ என்று மகனின் கையைப்பிடித்து ஒப்படைத்தவர் அவர். குடும்பத்தின் ஒரேயொரு ஆண்மகன் ரகு. அவனுக்கு இரு அக்காமார் இருந்தனர். இருவருக்கும் திருமணமாகவில்லை. எனினும் தன்மகனைக் குடும்பத்துக்காக உழைக்காமல் இனத்துக்காக அனுப்பி வைக்கிறாரே என்று அந்தப்போராளி வியந்தார். ஓரிரு நாட்களில் ரகு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டான். அவனுக்கு பிரதிஸ் எனப்பெயர் சூட்டப்பட்டது.
பயிற்சி முகாமில் ஒருவருக்கு சுகவீனம். அந்தக்காலத்தில் இயக்கத்திற்கு மருத்துவப்பிரிவு என ஒன்றிருக்கவில்லை. எந்த நோய் வந்தாலும் அரச மருத்துவ மனையிலேயே சிகிச்சைபெறவேண்டும். சுகவீனமுற்றவனைக் கூட்டிக்கொண்டு 09.09.1985அன்று ரகு மட்டக்களப்புக்கு வந்தான். அந்தக்கால கட்டத்தில் குறிப்பிட்ட வயது இளைஞர்களைக் கண்டாலே படையினருக்கு கைது செய்ய வேண்டும் போலிருக்கும். அதேநடைமுறையை இவர்களிலும் செயற்படுத்த முயன்றனர். தப்ப முடியாத நிலையில் இவர்கள் இருவரும் சயனைட் உட்கொண்டனர். இவர்களின் சடலங்களைப் படையினரே தீ மூட்டி எரித்தனர். ஓரிரு தினங்களின் பின்னரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பிரதிஸ் (சின்னத்துரை ரகு ) பிரியன் (தம்பிப்பிள்ளை நவரட்னராஜா) என அறிய வந்தது. இருவரின் வீட்டிலும் மரணஓலம் , ஆரையம்பதிக் கிராமத்தில் கணிசமானோர் இருவரின்வீட்டிலும் குழுமியிருந்தனர்.
எப்படியும் இவர்களின் வீட்டுக்குப் போகத்தான் வேண்டும். அதுவும் தனது கையில் ரகுவைப்பிடித்துக் கையளித்த அன்ரி என்றழைக்கப்படும் திருமதி பூரணலட்சுமியைச் சந்திக்க வேண்டும். இவ்வாறு தீர்மானித்த அந்தப் போராளி மாலையாகும்வரை காத்திருந்து விட்டு அங்கு சென்றார். “உங்கட கையிலதானே அவனைப் பிடிச்சுத்தந்தன்; துலைச்சுப்போட்டு வாறீங்களே”எனக் கேட்பாரே அன்ரி என நினைத்தவாறேதான் அந்த வளவுக்குள் அவர் காலடி எடுத்து வைத்தார். அவ் வேளையிலேயே தொடர்ந்தும் தங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தார் அன்ரி. அதிர்ந்துதான் போனார் அப்போராளி . சாதாரணமாக ஒரு அன்னையின் வாயிலிருந்து வரவேண்டிய அழுகையும் சோகமும் வேறுவிதமான வேண்டுகோளுடன் ஒலிக்கிறதே என வியந்தார். அந்தப் பயிற்சி முகாமுக்கு அனுப்பப்பட்டோரில் இருவரும் பயிற்சியை முழுமையாக பெற்றும் களம் காணாமல் போய்ச் சேர்ந்தனர்.
உள்ளுணர்வுகள் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். முல்லைத்தீவு கேப்பாபுலவுப் பகுதியில் ஒரு போராளியின் குடும்பத்தினர் தங்கள் வீதியூடாக வீரச்சா வெய்தியோரின் வித்துடல்கள் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்துக்குக் கொண்டு செல்கையில் மலர்தூவி வணக்கம் செலுத்துவது வழமை. ஒரு நாள் வித்துடல் தாங்கிய வாகனம் இவர்களின் வீட்டருகில் வரும்போது பழுதடைந்து விட்டது. யாருடைய பிள்ளையென்றாலும் தங்கள் குடும்ப உறுப்பினராக நினைத்து கண்ணீர் மல்க உணர்பூர்வமாக வழியனுப்பி வைப்பதை களத்தில் நின்று பார்த்தவர்களுக்குத்தான் புரியும். இந்த வாகனம் திருத்தப்பட்டு வித்துடல் கொண்டு செல்லப்படும்வரை இக் குடும்பத்தினர் அங்கேயே நின்றனர். பின்னர் துயிலுமில்லத்தில் விதைத்தாயிற்று வித்துடல் . அந்த மாவீரர் யாரென இனங்காணமுடியாத நிலையிலேயே துயிலுமில்லத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
மும்முரமாக யுத்தம் நடைபெறும் சமயங்களில் காயமடைந்தோர் களத்திலிருந்து அகற்றப்படுவர். அவர்கள் சிகிச்சைபெறும்போதும் வீரச்சாவு அடைவதுண்டு. களத்தில் வீரச்சாவடைவோர் சிலர் அடையாளம் காணமுடியாத அளவுக்கு இருப்பர். அதனால் உறுதிப்படுத்த தாமதமாகும். சரியாக உறுதிப்படுத்தத் தாமதமாகுமெனில் (நாட்கணக்கில்) வித்துடல்கள் பழுதாகக்கூடும் . எனவே சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுக்க நேரும். ஒரு நாள் காயமடைந்த, வீரச்சாவு வடைந்த சிலரின் இலக்கத்தகடுகள் இணைத்த நூல்களை ஒருவர் தனது கழுத்தில் போட்டுக்கொண்டு வந்த போது நிகழ்ந்த தாக்குதலில் வீரச்சாவடைந்துவிட்டார். கழுத்தில் அவரதும் இலக்கத்தகடும் தொங்கியது. இவரது இலக்கமென்ன? யார்யார் காயமடைந்தனர்.?வீரச்சாவு அடைந்தனர் ? என ஆராய்ந்து முடிப்பதற்கு சம்பந்தப்படடோர் பட்ட பாடு கொஞ்சநஞ்ச மல்ல. அதைப்போலவேதான் கேப்பாபுலவில் பழுதடைந்த வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டவரின் வித்துடல் அங்கு மலர் வணக்கம் செலுத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அவர்களுக்குப் பின்னரே தெரியவந்தது. “எங்கட பூவையும் கண்ணீரையும் பாக்க வேணுமெண்டுதானோ அவன்ர ஆன்மா வாகனத்தைப் பழுதாக்கினது“என்று அந்த மாவீரரின் குடும்பத்தினர் இந்த ஏற்பாடுகளைச் செய்தவரிடம் கேட்ட போது அவர் அதிர்ந்து தான் போனார்.
அது போலத்தான் அன்ரி ரகுவின் சம்பவம் நடந்த நாள் மட்டக்களப்பு நகரில்த்தான் நின்றார். வாகனத்தில் இருவரது உடல்களும் கொண்டு செல்லப்பட்ட போது தூர நின்று பார்த்தார்.”ஒரு புள்ள பச்சைச் சாறன் உடுத்திருந்தது. ஆர் பெத்த பிள்ளைகளோ?“ என்று அன்று முழுவதும் அங்கலாய்த்த படி இருந்தார். அந்தச் பச்சைச் சாரம் உடுத்த மகன் அவர் பெற்ற பிள்ளை என்று தெரியாமல் போயிற்று. அமிர்தகழியில் கொண்டுபோய் எரித்தார்கள் என்ற தகவல்தான் அவருக்கு மேலதிகமாகக் கிடைத்தது.
ரகு மறைவதற்கு முதல்நாள் அவனது சகோதரி ஒருவர் “அவனைப் பாக்கவேணும்போல கிடக்கு; எங்கே யெண்டு சொல்லுங்கோ; நான் அங்க போய்ப் பாக்கிறன்” என்று கேட்டார். “பயிற்சி முடியாமல் அவனை அனுப்பேலாது. முடிஞ்ச பிறகு வருவான்”என்று தான் அவனை அழைத்துச் சென்ற போராளியால் சொல்லமுடிந்தது. எனினும் ஆளே முடிந்த பின்னும் அவனைப் பார்க்க முடியாமல் போய்விட்டது அந்தச் சகோதரிக்கு . எப்படியோ நம்புபவர்கள் அது உள்ளுணர்வுதான் என்பர்.
போராளிகளை உபசரிப்பது முதலான பணிகளைச் செய்து வந்த அன்ரி மகனின் இழப்புடன் சோர்ந்து போகவில்லை. அதன் பின்னர் மேலும் வீ ச்சுடன் தனது பணிகளைத் தொடர்ந்தார். குறிப்பாக அன்னை பூபதியின் உண்ணாவிரத காலத்தில் அவர் முழு மூச்சுடன் செயல்பட்டார். இந்திய இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்களை அணிதிரட்டும் பணியில் தீவிரமாகக் பணியாற்றினார்.இந்திய இராணுவத்தால் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டிருந்தோரைப் பார்வையிட்டதுடன் அவர்களின் நலனுக்காக இயன்றவரைஉழைத்தார். இதனைச் சகிப்பார்களா ஒட்டுக்குழுவினர். மட்டக்களப்பை விட்டு ஓடுவதற்கு சில நாட்களுக்கு முன் இவரைப்பிடித்து பழுக்கக் காய்ச்சிய கம்பியால் கையில் சுட்டனர் . அந்தக் காயம் ஆறமுன்னரே இந்தியப்படையுடன் இணைந்து செயற்பட்டோர் மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட்டனர். தடுப்பிலிருந்த போராளிகள் விடுதலையாகினர். அவர்களின் விடுதலைக்காக திருக்கேதீஸ்வரத்துக்கு நேர்த்தி வைத்த அன்ரி. அதனை நிறைவேற்ற அங்கு சென்றார். கம்பியால் சூடு வைக்கப்பட்ட கையில் பிரசாதத்தைப் ஏந்தியபடி யாழ்பாணத்திலிருந்த போராளிகளையும் சந்திக்கச் சென்றார். மட்டக்களப்பில் புலிகளிடம் கைதாகியிருந்த ஏனைய இயக்கத்தவரை விடுவிக்குமாறு வேண்டினார். தாய்மை என்பது எல்லாப்பிள்ளைகளையும் ஒரேமாதிரித்தானே பார்க்கும்.” இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்ற குறளுக்கு இலக்கணமாக அவரது வேண்டுகோள் இருந்தது. ஆனால் அவர்கள் திருந்தினார்களா ?

1990ல் இரண்டாம் கட்ட ஈழப் போர் தொடங்கியதும் அந்த ஆயுதக்குழுக்கள் இன்னும் மோசமான நடவடிக்கைகளில் இறங்கின. பல்வேறு சுற்றிவளைப்புக்கள், விசாரணைகளில் படையினருக்கு உதவின. இக்காலகட்டத்தில் வடக்கிலிருந்து ஒரு அணி மட்டக்களப்பு நிலைமைகளைப் பார்வையிடப் பெரும்பாலும் நடையிலேயே போய்ச்சேர்ந்தது. இதனைச் கேள்வியுற்றதும் அவர்களைச் சந்திக்க அன்ரி விரும்பினார். அக்காலகட்டத்தில் ஆரையம்பதியிலிருந்து படுவான்கரைக்கு தோணியில் எவரும் போகமுடியாதென டெலோ தடை விதித்திருந்தது. அந்தத்தடையை அன்ரி பொருப்படுத்தவில்லை. ஒரு தோணிக்காரரும் அன்ரிக் கு உதவினார். எனினும் முதல் நாளே வடக்கிலிருந்து வந்த அணி திரும்பிச் சென்றுவிட்டதும் “ஆனால் என்ன நீங்களும் எங்கள் பிள்ளைகள் தானே?“ என்று கூறி அங்கிருந்த போராளிகளிடம் தான் கொண்டுவந்த பலகாரங்களைக் கையளித்துவிட்டு புறப்பட்டார்அன்ரி . இறுதியில் அந்தப் பயணமே அன்ரி யின் வாழ்நாளை முடிக்கும் வகையில் அமைந்திருந்தது. டெலோவின் அன்றைய மட்டக்களப்புப் பொறுப்பாளர் ஜனா (கோவிந்தன் கருணாகரன்) தமது தடையை மீறியமைக்காக அன்ரிக்கு மரணதண்டனை விதித்தார் . அதனை நிறைவேற்ற 22.10.1990 அன்று கிழவி ரவி ,வெள்ளை , ராபட் ஆகியோர் அன்ரி யின் வீட்டுக்கு வந்தனர். தன்னை இழுத்த டெலோவினருடன் இழுபறிப்பட்டார் அன்ரி. கைகளால் தாக்கினார். எனினும் தமது தளபதி ஜனாவின் கட்டளையை நிறைவேற்றினர் டெலோ உறுப்பினர்கள்.
மேலும் பலர் அந்தக் காலத்தில் ஆரையம்பதியில் கொல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வணிகரான தம்பிராஜா , அவரது மகனான வங்கிப் பணியாளர் குருகுலசிங்கம், மகளான திருமதி மலர் ஆகியோரைக் கொன்று தீர்த்தது டெலோ. கர்ப்பிணிப்பெண்ணான மலரைச் சுடும்போது “வயித்துக்குள்ள என்ன புலிக்குட்டியா இருக்கு ?“ எனக் கேட்டுவிட்டே சுட்டார் ஜனாவின் தம்பி. டெலோ மாமா என்றழைக்கப்படும் கோவிந்தன் கருணாநிதி.
கலா (பொன்னம்பலம் சதானந்தரத்தினம்) என்ற போராளியை 19.04.1988 அன்று செட்டிபாளையத்தில் வைத்து வெட்டிக் கொன்றார் ஜனா. உச்சக் கட்டமாக விஜி என்ற உயர்தர தர வகுப்பு மாணவியைக் கூட்டுப்பாலியல் வன்முறைறைக்குள்ளாக்கி விட்டு கொலை செய்து ஆற்றில் வீசினர். இவரது சடலத்தை வழங்குவதென்றால் அனுஷ்யா நல்லதம்பி என்ற இந்த யுவதி ஒரு பயங்கர வாதியென்று கையெழுத்திட வேண்டுமென அதிகாரத்தரப்பு உத்தரவிட்டது. இந்தப் பாதகங்களைச் செய்த அன்வர், வெள்ளை , ராபட் ஆகியோருக்குப் புலிகள் சாவொறுப்பு த்தண்டனை வழங்கினர். ஜனாவின் தம்பி டெலோ மாமா லண்டனில் 30.10.2017 அன்று பார்வை இழந்த நிலையில் மரணமடைந்தார். ஜனாவும் , ராமும் இப்போதும் உள்ளனர்.
நாட்டுப்பற்றாளர் பூரணலட்சுமி சின்னத்துரை
பிறந்த திகதி : 1945 – அழிப்பு 22.10.1990
