ஐக்கிய இலங்கைக்குள் நீதி, சமாதானம், இன சமத்துவம் கிடைக்குமென்று தமிழ்மக்கள் உங்களுக்குச் சொன்னார்களா ஜெய்சங்கர்?.
உங்கள் விருப்பத்தை, ஏன் எங்கள் விருப்பமாக எடுக்கிறீங்க அமைச்சரே?.
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு வருமென்ற நம்பிக்கை இருந்தால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றை(ICC), சர்வதேச நீதிமன்றை(ICJ), இலங்கைக்கான சர்வதேச தீர்ப்பாயத்தை(ICT-SL) ஏன் தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புகளும்நாட வேண்டும்?
இதுதான் தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு வெளிநாட்டமைச்சரே!.
ஈழத்தமிழர்கள் இன அழிப்பிற்கான விசாரணையைக் கோருகின்றனர்.
மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை நடந்தேறிய அனைத்து இன அடியழித்தலிற்கான சர்வதேச நீதி விசாரணையைக் கோருகின்றனர்.
1948 இலிருந்தே இலங்கையில் தேசிய இன முரண்பாடு தீவிரமடைந்து, 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை என்கிற உச்ச அடக்குமுறை வடிவத்தை எட்டியது.
ஆயுதப் போராட்டமே தீர்விற்கு இடையூறாக இருந்ததாக நீங்களும் ஏனைய வல்லரசுகளும் இப்போதும் கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.
எங்கள் அடிப்படை உரிமைகள் எவையென்று நாம் அழுத்திக் கூறினாலும் நீங்கள் செவிமடுக்கத் தயாரில்லை.
கிழக்கு முனையம் கை நழுவிப் போகையிலே, ஈழத்தமிழர்களின் பிரச்சினை குறித்து பேசுவீர்கள்.
கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நங்கூரமிட்டவுடன் 13 வது திருத்தச்சட்ட விவகாரத்தை கையிலெடுப்பீர்கள்.
நீங்கள் அண்மையில் கொடுத்த 400 மில்லியன் டொலரை இலங்கை அரசு திருப்பிச் செலுத்திவிட்டதாம்.
உங்கள் BRICS, AIIB மற்றும் SCO கூட்டின் நண்பரே (சீனா) இதன் பின்னணியில் இருப்பதாகப் பேசப்படுகிறது.
உட்கட்டமைப்பினை மேம்படுத்த, வங்கிகளையும் LIC இன் பங்குகளையும் விற்கும் உங்களின் நிதிநிலைமையே கவலைக்குரியதாகவிருக்கிறது.
IMF உடனும் பிரச்சினை என்று அறிகிறோம்.
எங்கட பிரச்சினைக்கான தீர்விற்கு இந்தியாவைவிட்டால் வேறு வழியில்லையென்று எரிக் சூல்கெயிம் முதல் உள்ளூர் வித்துவான்கள் வரை அடித்துக் கூறுகின்றனர்.
ஆனால் உங்கட பிராந்தியப் பிரச்சினையை கையாள எங்களைப் பயன்படுத்துகிறீர்களே சங்கர்!.
அதில் நாம் என்ன கேட்க வேண்டும்? எப்படிக் கேட்க வேண்டும்? எதைக் கேட்க கூடாது, என்பதையெல்லாம் நீங்களே தீர்மானிக்கிறீர்கள்.
எதைக் கேட்டால் சிங்களத்திற்கு கோபம் வரும் என்பதைப் புரிந்து, சாணக்கியரின் வாரிசு போல் கமுக்கமாக நடந்து கொள்கிறீர்கள்.
பார்ப்போம்…..உங்கள் இராஜதந்திர தோல்விப் பட்டியல் மியன்மார் முதல் நேபாளம் வரை நீண்டு செல்கிறது.
அதில் இலங்கையும் இணையும் நாள் வெகுதூரத்திலில்லை.
-இதயச்சந்திரன்.
07-02-2021