சோமதேவ அறிக்கையை நிராகரிக்க வேண்டும்

0 0
Read Time:22 Minute, 1 Second

“மனிதப் புதைகுழி” எனும் பதம் வேண்டுமென்றே தவிர்ப்பு; பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் யாழ். நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கடந்த திங்கட்கிழமை தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால சுருக்க அறிக்கையை நிராகரிக்க வேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்ட தரப்பினரான வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த நகர்த்தல் பத்திரத்தில், தனது முந்தைய மூன்று அறிக்கைகளிலும் ‘மனிதப் புதைகுழி’ என்ற பதத்தைப் பயன்படுத்தி வந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ, தற்போதைய இடைக்கால சுருக்க அறிக்கையில் வேண்டுமென்றே அப்பதத்தைத் தவிர்த்திருக்கிறார் எனவும், இந்தத் தவிர்ப்பானது இடைக்கால அறிக்கையின் துல்லியத்தன்மை மற்றும் செல்லுபடியாகும் தன்மை தொடர்பில் தீவிர சந்தேகங்களைத் தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ள உடல்களின் உயர்வான எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அவை தொற்றுநோயினாலோ அல்லது இயற்கை அனர்த்தத்தினாலோ உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கக்கூடுமோ எனும் கேள்வி எழுவதாகவும், அங்கு உயிரிழந்தோரின் தனிப்பட்ட உடைமைகளைச் சேர்த்துப் புதைப்பதை விடவும், அவர்களது உடல்களை விரைவாக அடக்கம் செய்வதே பிரதான காரணத்துக்குரிய விடயமாக இருந்திருக்கலாம் என்றும் கடந்த திங்கட்கிழமை (19) யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனையடுத்து அவரது அறிக்கையை நிராகரிக்குமாறு கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (22) தாக்கல் செய்யப்பட்டுள்ள நகர்த்தல் பத்திரத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களாவன:

இவ்வழக்கு கடந்த 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி தளத்தில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பான தனது கண்டுபிடிப்புகள் மற்றும் அவதானிப்புகள் அடங்கிய ஓர் இடைக்கால சுருக்க அறிக்கை பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் இச்சுருக்க அறிக்கையில் உள்ள கண்டுபிடிப்புகள், அவதானிப்புகள், விளக்கங்கள் மற்றும் முடிவுகளை எதிர்ப்பதுடன், அவ்வறிக்கையானது அவசியமான சூழ்நிலைகளையும் கிடைக்கப்பெற்ற சான்றாதாரங்களையும் முழுமையாகக் கவனத்திற்கொள்வதற்குத் தவறிவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

அத்தளத்தில் கண்டறியப்பட்ட மனித எச்சங்கள் இருந்த இடம், அவை கண்டெடுக்கப்பட்ட சூழ்நிலைகள், தொல்லியல் பின்னணி, மீட்கப்பட்ட பொருட்கள், எச்சங்களின் எண்ணிக்கையும் பரவலும், சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் அவ்விடத்தினது வரலாற்றுச் சூழல் என்பவற்றின் அடிப்படையில் இவ்வறிக்கையில் உள்ள கண்டுபிடிப்புகள் பரிசீலிக்கப்பட வேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்ட தரப்பினர் இவ்விடயங்களைச் சமர்ப்பிக்கின்றனர்.

செம்மணி, சித்துபாத்தி தளத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அத்தளம் யாழ்ப்பாண நீதிவானால் ஒரு குற்றத்தளமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட தரப்பினரின் புரிதலின்படி, இந்தப் பகுதி இந்து சமய, கலாசார சடங்குகளுக்கு ஏற்ப தகன முறைமை மாத்திரமே வழக்கத்தில் இருந்த ஒரு இந்து மயானத்துடன் தொடர்புடையதாகும்.

எச்சங்கள் மீட்கப்பட்ட துல்லியமான இடத்துடன் தொடர்புடைய வகையில் குறித்து ஒதுக்கப்பட்ட அடக்கம் செய்யும் பகுதியையோ அல்லது அதிகாரபூர்வ மயானப் பகுதியையோ அடையாளம் காணவில்லை எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் வாதிடுகின்றனர். சம்பந்தப்பட்ட மயானப் பதிவுகள், நிலப்பயன்பாட்டு வரலாறு, பொருத்தமான சட்ட விதிகள் மற்றும் ஏனைய நம்பகமான சான்றுகளின் அடிப்படையில், அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட குறித்த பகுதியைச் சாதாரணமாக உடல்களை அடக்கம் செய்யும் இடமாகக் கருதுவதற்கான உண்மையானதும் சட்டபூர்வமானதுமான அடிப்படைகள் ஏதேனும் இருப்பின், அவை குறித்து மேற்படி இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

அதேபோன்று, தனது முந்தைய மூன்று அறிக்கைகளிலும் ‘மனிதப்புதைகுழி’ என்ற பதத்தைப் பயன்படுத்திவந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ, தற்போதைய இடைக்கால அறிக்கையில் வேண்டுமென்றே அப்பதத்தைத் தவிர்த்திருக்கிறார் என்பதையும் நாங்கள் முன்வைக்கின்றோம். இந்தத் தவிர்ப்பானது இடைக்கால அறிக்கையின் துல்லியத்தன்மை மற்றும் செல்லுபடியாகும் தன்மை தொடர்பில் தீவிர சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

அதற்கமைய, பொருந்தக்கூடிய சட்டம் மற்றும் சான்றுகள் இருந்தாலன்றி, மயானங்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள் கட்டளைச் சட்டத்தின் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஏனைய தொடர்புடைய சட்டங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோருகின்றனர்.

அதேவேளை, அகழ்வாராய்வுத் தளத்தில் தரையிலிருந்து சுமார் ஒரு மீற்றர் அல்லது அதனைவிடக் குறைவான ஆழத்தில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் குறிப்பிடுகின்றனர். எச்சங்களின் ஆழம், பரவல், அடுக்குநிலை என்பன தடயவியல் மற்றும் தொல்லியல் சார்ந்த முக்கிய பரிசீலனைக்குரிய விடயங்களாகும். இந்த அம்சங்கள், ‘சாதாரண அடக்கம்’ என்ற முன்மொழியப்பட்ட விளக்கத்துக்கு ஏற்புடையனவாக இருக்கின்றனவா என்பதை இடைக்கால அறிக்கை விளக்கவேண்டும். அத்தோடு முடிவுகளை எட்டுவதற்கு அடிப்படையாக அமைந்த அறிவியல் அவதானிப்புகள் மற்றும் ஒப்பீட்டுச்சான்றுகள் எவை என்பதையும் அடையாளம் காண்பிக்க வேண்டும்.

அகழ்வாராய்வுடன் தொடர்புடையவர்களால் வர்ணிக்கப்பட்டவாறு திரட்சியான நிலையில் பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பதுனது, அவை எத்தகைய சூழ்நிலையில் அடக்கம் செய்யப்பட்டன என்பது குறித்த நியாயமான கேள்விகளை எழுப்புவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறுகின்றனர். இந்நிலையில் இடைக்கால அறிக்கையானது அவதானிக்கப்பட்ட உண்மைகளுக்கும் எடுகோள்களுக்கும் இடையிலான வேறுபாட்டைப் பிரித்துக் காட்டுவதுடன், எச்சங்கள் தொடர்பான விளக்கத்துக்கு அடிப்படையாக அமைந்த அறிவியல் ரீதியான தெளிவுபடுத்தலை வழங்கவேண்டும். எனவே முறையான சான்றுகள் மற்றும் தொல்லியல் பின்னணி என்பன பற்றிய போதிய பரிசீலனை ஏதுமின்றி, வெறும் ஊகத்தின் அடிப்படையில் மாத்திரம் ‘சாதாரண அடக்கம்’ என்றவாறான எந்தவொரு முடிவையும் பாதிக்கப்பட்ட தரப்பினர் எதிர்க்கின்றனர்.

ஒரு வயது வந்தவருடன் ஒரு குழந்தை இணைக்கப்பட்டவாறு ஒன்றுக்கு மேற்பட்ட எலும்புக்கூட்டு இணைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது மிக அசாதாரணமானதும், சாதாரண அடக்க செயல்முறைக்குப் பொருந்தாததுமான அடக்கமாகும். மனித எச்சங்கள் எத்தகைய சூழலில், எந்த முறையில் அடக்கம் செய்யப்பட்டன என்பதை தீர்மானிப்பதற்கு இவை மிக்க கவனமாக தடயவியல் மற்றும் தொல்லியல் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று அடையாளம் காணக்கூடிய மற்றும் சரிபார்க்கக்கூடிய அறிவியல் சான்றுகள் மூலம் ஆதரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் தவிர, இந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தொற்றுநோய், இயற்கைப்பேரழிவு அல்லது பிற குற்றமற்ற நிகழ்வு ஒன்றினால் எலும்புக்கூட்டு எச்சங்களுக்கான காரணத்தை விளக்கலாம் என்றவாறான எந்தவொரு வாதத்தையும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மறுக்கின்றனர்.

மேலும் இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விளக்கத்துடன் ஒத்துப்போகாத எலும்புக்கூடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொருட்களைக்கொண்ட சில எலும்புக்கூடுகள் என்பன தொடர்பில் போதுமான பரிசீலனையை முன்வைப்பதற்கு அவ்வறிக்கை தவறிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் வாதிடுகின்றனர். உதாரணமாக காலனி ஒன்றுடன் இணைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு எலும்புக்கூடு தொடர்பில் கவனம் செலுத்தினால், அந்தப் பொருளின் (காலனி) முக்கியத்துவம், அது துல்லியமாக இருந்த இடம், எச்சங்களுடன் அதற்கான தொடர்பு மற்றும் அது தயாரிக்கப்பட்ட காலப்பின்னணி என்பன விசித்திரமாக விடுபட்டுள்ளமை போல் தோன்றுகிறது. சரியானதும், குறைபாடற்றதுமான முடிவுகளை உறுதிசெய்வதற்கு இதுபோன்ற அனைத்துத் தனிப்பட்ட கண்டுபிடிப்புகளும் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டு, பட்டியலிடப்பட்டு, அறிவியல் ரீதியாக மதிப்பீடு செய்யப்படவேண்டும்.

1991 மற்றும் 1994 போன்ற ஆண்டுகளை தாங்கியிருப்பதாகக் கூறப்படும் நாணயங்கள் உள்ளடங்கலாக மனித எச்சங்களுடன் இணைத்து மீட்கப்பட்ட நாணயங்கள் மற்றும் பிற பொருட்கள் தொடர்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் வாதிடுகின்றனர். இந்தப் பொருட்கள், அவற்றின் நம்பகத்தன்மை, தோற்றம், துல்லியமான இருப்பிடம் தொடர்பும் எலும்புக்கூட்டு எச்சங்களிலான தொடர்பு என்பவற்றின் அடிப்படையில் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டு, காலப்பின்னணியை நிறுவுவதற்கு முக்கியமானவையாக இருக்கலாம். அத்தோடு மீட்கப்பட்ட நாணயங்களை அவை அச்சிடப்பட்ட காலப்பகுதிக்குப் பிந்தைய கால அடிப்படையில் அடையாளம் காணவேண்டும்.

யாழ். குடாநாட்டில் ஆயுதமோதலின் போது நிலவிய வரலாற்றுச் சூழ்நிலைகள், இராணுவக்கட்டுப்பாட்டுடன் தொடர்புடைய இப்பகுதிசார் சூழ்நிலைகள் மற்றும் மனித எச்சங்கள் புதைக்கப்பட்ட காலம் என்பன மிக்ககவனமாக விசாரணைக்கான சூழலியல் தேவைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளன. தொற்றுநோய் அல்லது பிற குற்றமற்ற நிகழ்வு தொடர்பான விளக்கத்தை முன்வைப்பதற்கு முன்பதாக, மேற்படி இடைக்கால அறிக்கையானது இந்த வரலாற்றுச் சூழ்நிலைகள் தொடர்பில் போதியளவு கவனம் செலுத்தப்படவில்லை என்பது பற்றி பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலையடைந்துள்ளனர். ஆயுதமோதல் மாத்திரம் எந்தவொரு நபரின் இறப்புக்கான காரணத்தையோ, நிகழ்வையோ அல்லது சூழ்நிலையையோ அதுவாகவே ஏற்படுத்திவிடாது. இருப்பினும் சம்பந்தப்பட்ட வரலாற்றுப் பதிவுகள், சமகால அறிக்கைகள், காணாமல்போனோர் பற்றிய தகவல்கள், சாட்சியங்கள் மற்றும் கிடைக்கப்பெறக்கூடிய பிற சான்றுகள் என்பன தடயவியல் மற்றும் தொல்லியல் கண்டுபிடிப்புகளுடன் சேர்த்துப் புறவய அடிப்படையில் கருத்திற்கொள்ளப்படவேண்டும். எனவே கிடைக்கக்கூடிய சான்றுகளின் விரிவானதும், பக்கச்சார்பற்றதுமான மதிப்பீடின்றி, வேறு எந்தவொரு நியாயமான சாத்தியக்கூறுகளையும் விலக்கிவிட்டு, எந்தவொரு வரலாற்று அல்லது அறிவியல் எடுகோளையும் ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் கோருகின்றனர்.

இடைக்கால அறிக்கையானது அதன் முடிவுகளை எட்டுவதற்கு முன்னர் எலும்புக்கூட்டு எச்சங்கள், தொடர்புடைய பொருட்கள், அகழ்வாராய்வுப் பதிவுகள், சூழலியல் சான்றுகள் மற்றும் சம்பந்தப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் என்பன போதுமானளவு பரிசீலிக்கப்பட்டன என்பதை நிரூபிக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கருதுகின்றனர்.

பேராசிரியர் ராஜ் சோமதேவ அவரது இடைக்கால சுருக்க அறிக்கையில் தனது அவதானிப்புகளும் கண்டுபிடிப்புகளும் தற்காலிகமானவை எனக் குறிப்பிட்டிருந்தாலும், அவையும் அவற்றிலிருந்து பேணப்படும் முடிவுகளும் நீதித்துறையின் கவனமான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோருகின்றனர்.

அதேபோன்று தற்போதைய இடைக்கால அறிக்கைக்கும் பேராசிரியரின் முந்தைய அறிக்கைகளுக்கும் இடையில் ஏதேனும் பொருள்சார்ந்த முரண்பாடுகள் இருப்பின், அவை வெளிப்படையாக அடையாளம் காணப்பட்டு பரிசீலிக்கப்படவேண்டும். இந்த அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ள அவதானிப்புகளைத் தற்காலிகமானவை என விவரிப்பது மாத்திரமே அறிக்கைக்கு இடையிலான முரண்பாட்டிலிருந்து எழும் பொருள்சார்ந்த கேள்விகளை தீர்த்துவிடாது. எனவே பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தற்போதைய இடைக்கால சுருக்க அறிக்கைக்கும் இந்த மன்றில் தாக்கல் செய்யப்பட்ட அவரது முந்தைய அறிக்கைகளுக்கும் இடையிலான பொருள் சார்ந்த முரண்பாடுகளை மன்று கவனத்திற்கொள்ளவேண்டும் என்றும், அதனடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோருகின்றனர்.

மேலும் பேராசிரியர் சோமதேவ அவரது நிபுணத்துவம் மற்றும் சிறப்புத்தேர்ச்சிக்கு அப்பாற்பட்ட விடயங்களைக் கையாண்டிருப்பதாகத் தோன்றும் காரணிகள் அடங்கியுள்ள இவ்வறிக்கையின் 18 – 190 வரையான பக்கங்கள் முழுமையாக நிராகரிக்கப்படவேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் வாதிடுகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் பேராசிரியர் ராஜ் சோமதேவினால் 19.10.2026 திகதியிட்டு சமர்ப்பிக்கப்பட்ட சுருக்க அறிக்கை தொடர்பில் இங்கு முன்வைக்கப்பட்டுள்ள கரிசனைகளைக் கவனித்து ஆவணப்படுத்தவேண்டும், பேராசிரியர் ராஜ் சோமதேவனின் இடைக்கால அறிக்கையை நிராகரிக்கவேண்டும், எலும்புக்கூடுகளுடன் இணைந்ததாக மீட்கப்பட்டதாகக் கூறப்படும் நாணயங்கள், செருப்பு மற்றும் பிற பொருட்கள் தொடர்பான தொல்லியல் பின்னணி அடையாளம் காணப்பட்டு, பட்டியலிடப்பட்டு, மதிப்பீடு செய்யப்படவேண்டும் என உத்தரவிடப்படவேண்டும், எலும்புக்கூடுகளின் ஆழம், பரவல், அடுக்குநிலை என்பன தொடர்பான அகழ்வாராய்ச்சிப் பதிவுகளும் கண்டுபிடிப்புகளும் முழுமையாக ஆவணப்படுத்தப்படவேண்டும் என்று உத்தரவிடப்படவேண்டும், தொற்றுநோய், இயற்கைப்பேரிழிவு அல்லது பிற குற்றமற்ற நிகழ்வு பற்றிய எடுகோள் நம்பப்பட்டால், அது தொடர்புடைய அறிவியல் சான்றுகளின் அடிப்படையிலான நியாயமான விளக்கத்தினால் ஆதரிக்கப்படவேண்டும் என உத்தரவிடப்படவேண்டும், இவ்வறிக்கையிலிருந்து எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சுயாதீனமான சர்வதேச நிபுணர் மதிப்பாய்வு அல்லது மேலதிக தடயவியல் தொல்லியல் பரிசோதனை அவசியமானது என்பதை பரிசீலிக்கவேண்டும், இங்கு அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகள் முறையாகப் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பதாக, இடைக்கால சுருக்க அறிக்கையின் சர்ச்சைக்குரிய முடிவுகளை உறுதியானவையாகக் கருதுவதைத் தவிர்க்கவேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் மன்றிடம் கோருகின்றனர் – என்று அந்த நகர்த்தல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Copy

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment