பரந்த கடல் வெளியில், கரையோரத்தில் ஒரு சிறிய உருவம். நீண்ட நாட்களாக, உப்புக் கடலின் நீரிலும், சுட்டெரிக்கும் கடற்கரை மணலிலும் தினமும் பயிற்சி பெற்று, அங்கயற்கண்ணியின் உடல் காய்ந்து மெலிந்திருந்தது. அவளது உடலில் மேலும் கருமை ஏறியிருந்தது.
அவளது உருவத்திற்கும், அவள் செய்யப்போகும் அச் செயலுக்கும் யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாது.
அந்தக் கடற்கரையோரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்த மீன்களை, தினமும் ஒரு இராட்சத திமிங்கிலம் அலட்சியமாக வேட்டையாடி உண்டு மகிழ்ந்தது. அதைப் பார்த்து கோபம் கொண்ட மீன் குஞ்சு ஒன்று, அந்த இராட்சதத் திமிங்கிலத்தை விழுங்கிவிடக் கடற்கரையில் சபதம் எடுத்து நின்றது.
மீன் குஞ்சு ஒன்று திமிங்கிலத்தை விழுங்குவதா? ஆம், இவ்வாறான அற்புதங்கள் தமிழீழ மண்ணில் மட்டும்தான் நடந்தேறின. கம்பனும் இளங்கோவும் உயிரற்ற கதாபாத்திரங்களுக்குத் தங்கள் சுந்தரத் தமிழாலும் கற்பனைத் திறனாலும் மட்டுமே உயிர் கொடுக்க முடிந்தது.
ஆனால், தமிழீழ மண்ணில் எந்தவொரு கவிஞனும் காப்பியங்களும் காணாத, கற்பனைக்கு எட்டாத அற்புதமான சாதனைகளைப் படைத்துவிட்டு, உயிருள்ள நிஜக் கதாபாத்திரங்கள் உயிரற்றுப் போயின.
அவள் திமிங்கில வேட்டைக்குத் தயாரானாள். தோழிகள் சூழ்ந்து நின்று வழியனுப்ப, அவள் மெல்லத் தன் காலைக் கடலில் எடுத்து வைத்தாள். அவளது சிறிய பாதங்களைத் தழுவி, பணிந்து பணிந்து அலைகள் அவளை வரவேற்றன.
அவள் கடல் தாயின் மார்பின் மீது நீந்தி நீந்தி, உயர உயரச் சென்றாள். தோழிகள் அவளது உருவம் மறையும் வரை கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவளது உருவம் மறைந்த பின்பும் அங்கேயே நின்றனர். அவள் மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கையில், அவளது வரவுக்காகக் காத்து இருந்தனர்.
கரையை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டாள். பல மணி நேரப் பயணம். அலைகள் அவளைத் தழுவிச் செல்லச் செல்ல, அவளது மன ஓட்டத்தில் பல நினைவுகள் அலையலையாக வந்து மோதி இருக்கும்.
அவளது தாய் நிச்சயமாக அவளது எண்ணப் பிம்பத்தில் தோன்றி இருப்பாள். “மகளே! போகாதே!” என்று தடுத்து இருப்பாள். அவளது மார்பிலும் தோளிலும் ஒட்டி உறவாடியவள் இன்று கடலோடு கடலாகக் கரைய, அவள் எப்படி அனுமதிப்பாள்? “மகளே! திரும்பி வா!” என்று புலம்பி இருப்பாள்.
இவள் எப்படித் தாயைச் சமாதானம் படுத்தி இருப்பாள்? “அம்மா! என் மாமாவையும் சித்தியையும் கொன்று தின்ற திமிங்கிலம், நாளையும் உன்னையும் என் தம்பியையும் கொன்று தின்றுவிடும். ஊரில் உள்ள அனைவரையும் ஒரு நொடியில் தன் அகண்ட வாய்க்குள் அமிழ்த்திக் கொன்றுவிடும். என்னைத் தடுக்காதே, அம்மா! உங்கள் நிம்மதியான வாழ்வு அதன் மரணத்திலேயே தொடங்கும். அதை இன்று நான் கொல்லப் போகிறேன். விடை தா, அம்மா!” என்று கேட்டிருப்பாள்.
தன் பிள்ளையை அள்ளியணைக்கக்கூட முடியாதே என்று தாய் புழுங்கி இருப்பாள். அரை மனதோடு விடை கொடுத்து இருப்பாள்!
பின்னர் அவளது எண்ண ஓட்டங்களில் தம்பி, அண்ணா, நண்பர்கள், தோளோடு தோள் நின்ற தோழிகள் என அனைவரும் வந்து போய் இருப்பார்கள்.
அனைவருக்கும் ஏதேதோ காரணங்கள் கூறிச் சமாதானம் சொல்லி இருப்பாள்.
பல மணி நேர எண்ண அலைகளுக்குள் போராடிப் போராடி முன்னேறிச் சென்றாள். அதோ, அந்த இராட்சத உருவம்! அவள் தேடிச் சென்ற இராட்சதக் கட்டளைக் கப்பல். பல உயிர்களைச் சர்வ சாதாரணமாகக் குடித்துவிட்டு, அமைதியாகத் தூங்கிக்கொண்டிருக்கிறது.
அதன் தூக்கத்தைக் கலைக்காமல், மெல்ல மெல்ல அதன் அருகில் செல்கிறாள். அவளது உடலின் இடையை விடவும் அதிகமாக எடை பொருந்திய வெடிமருந்துப் பொதியை எப்படித்தான் எட்டு மணி நேரம் நீந்திக் கொண்டு வந்தாளோ தெரியவில்லை.
அதனை இராட்சத கப்பலின் அடிவயிற்றில் வைத்து வெடிக்கச் செய்தாள்.
அவளும் கடலோடு கடலாகக் கரைந்து போனாள்; நீராவியாக மேல் எழுந்தாள்; மழை நீராய் பூமி எங்கும் தூவி நிறைந்து நின்றாள்.
