07.10.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் கப்பலான எம். வி. மற்சுசிமாவைத் தாக்கிய போது சிறிலங்கா கடற்படையுடன் எதிர்ச்சமரில் ஈடுபட்டு இறுதிவரை எதிரிகளிடம் அகப்படாது
கப்பலையும் தகர்த்து தங்கள் இன்னுயிர்களையும் ஈகம் செய்த அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவில் சுமந்து அவர்களுக்கு எமது நினைவு வணக்கங்களைச் செலுத்துவோம்.
தமிழினத்தின் விடிவிற்காய் சர்வதேசக் கடலில்
தாவித்திரிந்த மற்சுசிமாவை அகிலத்தின்
ஆக்கிரமிப்புச் சக்திகளின் உதவியுடன்
அழித்துவிட்ட இந்நாளை மறந்துவிடலாகாது!
மறத்தமிழர் வரலாற்றிலே எம்மாவீரர்களின்
மண்டியிடாத வீரத்தினை நினைத்திருப்போம்.
கப்பலின் தலைவனாக நின்ற கபிலனும் கூடவே
கப்பல்; பொறியியலாளனாய் தன் பணியைச்
செவ்வனே செய்து நின்ற நாதனும்
துணைநின்ற எங்களின் அரிய கடற்புலி வீரர்களும்
துணிவுடன் எதிரியுடன் போரிட்டு கடலன்னையுடன்
கலந்துவிட்ட இந்நாளை மறந்து விடலாகாது!
பொங்கும் கடலலை மீதினிலே உலாவந்து
புதியதோர் போர்ப்பரணி எழுதிய
கடற்புலி வேங்கைகளே!
காலங்கள் மாறலாம் ஆனால் உங்களின்
இலட்சியக் கனவை மட்டும் அழித்துவிட முடியாது!
மற்சுசிமா எனும் பெயர் கொண்டு
மானத் தமிழர் பரம்பரைக்கு எண்ணற்ற கருவிகளை
கரைசேர்த்து எம் விடுதலைப் போராட்டத்திற்கு
காத்திரமான பங்களிப்பை வழங்கிவிட்ட
கடற்கலத்தினை என்றும் மறந்துவிடலாகாது!
வரலாற்றின் வரிகளில் கூடத் தயக்கம் – ஏனெனில்
வரிப்புலி வீரர்களின் வீரத்தினை எண்ணியதனால்
எதிரியின் கடற்கலங்கள் அவர்களைச் சூழ்ந்தபோதும்
எண்ணத்தில் சலனமின்றி எதிர்த்தனரே
எரியும் வேளையிலும் அண்ணையின் பெயரை
உச்சரித்தல்லவா உயிரை விட்டார்கள்.
தமிழீழக்கனவுடன் தங்களையே ஆகு
தியாக்கிய
தன்மான புலிகளை நாம் என்றும் மறந்து விடலாகாது.
நீலக்கடலலை தன்னில் வலம்வந்து – என்றும்
நீங்கா இடம் பிடித்து எம்மனதில் நிறைந்து
வரலாற்றிலே புதிய அத்தியாயமாகினீர்கள்
வாழும் தமிழர்களுக்கென புதிய பாதையினை
வரைந்து விட்டுச்சென்ற உங்கள் பாதையில்
அன்புத் தலைவவனின் எண்ணத்திலே- நாங்கள்
ஆழக்கடல் எங்கும் மீண்டும் எழுவோம்.
இவர்களுடன் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களையும் இந்நாளில் நினைவில் சுமந்து அவர்களுக்கு நினைவு வணக்கங்களைச் செலுத்துவோம்.

