எம் உறவுகள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்காலின் பெருங்கடலோரத்தில் மே மாதம் 18ம் நாள், 2023 அன்று காலை 7:30 மணிமுதல்நீத்தார் நினைவேந்தல் நிகழ்வுகளும் ஆன்ம அமைதிக்கான தமிழ்வழி ஈமவழிபாடுகளும் உணவுக்கொடை வழங்கலும் நடைபெற இருக்கின்றன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை ஏற்பாடு செய்துவரும் ‘நம் உறவுகளுக்கு நாமே கை கொடுப்போம்’ என்ற அமைப்போடு இணைந்து, அகில இலங்கை சைவத்தமிழ் மன்றம், தமிழர் பாரம்பரிய வழிபாட்டு அமைப்பு, அன்பே சிவம், சைவநெறிக்கூடம் ஆகிய நான்கு அமைப்புக்களும் இணைந்து சைவநெறியில் தெய்வத் தமிழில் வழிபாட்டுச் சடங்குகளை ஆற்றிவைக்க முன்வந்துள்ளன.
2009 இல் இவவழிப்புச் செய்திகள் எம்மை எட்டியபோது, ‘இது உண்மையாக இருக்க முடியாது, இதுவொரு கெட்ட கனவுதானா? எழுந்து இடர்களை எதிர்கொள்வோமா?’ என்றே எமது முதற்கட்ட உணர்வுகள் தோன்றின. வீழ்ச்சியையும் அழிவையும் மனம் வலிகளோடு ஏற்றுக்கொண்ட நிலையில் சோகம், கோபம், ஆத்திரம், பயம் அமைதியின்மை போன்ற துயர்மிகு உணர்வுகள் அனைத்தும் ஒரேநேரத்தில் தோன்றின. அழிவுக்குக் காரணமானோரை உள்ளத்தில் தேடித் தோற்றோம்.
அடுத்தநிலையில் அறைகளில், நிலப்பரப்புகளில், புகைப்படங்களில், உள்ளத்து கற்பனைகளில் நாம் இழந்த உறவுகளை தேடி அழுது அரற்றி ஆறுதல் அடைய முயன்றோம். நான்காம் கட்டத்தில், இழந்த எம் இனத்து உறவுகளை நெஞ்சகத்துள் உள்ளுருவமாக வைத்துப் போற்றும் வழக்கத்தைத் தொடர்ந்தோம்.
கடந்த பதின்னான்கு ஆண்டுகளாக எமது பெருவலிகளை மேற்குறித்த வகைகளிலேயே கையாண்டும் எம்மை நாமே தேற்றிக்கொண்டும் காலங்களைக் கடக்கின்றோம்.
இப்பெருந்துயரம் உள்ளத்தில் பெருக்கெடுக்கும் உணர்ச்சிநிலையே. இது உளச்சோர்வையும் உணர்வுகளின் உணர்ச்சி இழப்பையும் ஏற்படுத்தி, எமது இயக்கத்தை உறைவடையச் செய்கின்றது. வலி, பீதி, சோகம், கோபம், குற்றவுணர்வு, வாழ்க்கைக்கான ஆர்வமின்மை போன்ற எம்மை கடுமையாகத் தாக்குகின்ற மாதமும் இதுவே. இவ்வலிகளைக் காலந்தோறும் சுமக்க வேண்டிவர்கள் நாமே என்ற போதும் இவற்றில் இருந்து விடுபட்டு, மீள எழுந்து, இறந்தோருக்கும் இருப்போருக்கும் ஆற்றவேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டியவர்களும் நாங்களே.
இழப்புகள் ஏற்படுத்திய பெருந்துயரை ஆற்றுப்படுத்தி, இழந்தோரும் உறவுகளும் தம்மை மீளச் சீர்செய்து, உணர்வுகளுக்கு உரம் ஏற்றிக்கொள்ளவேண்டியது காலத்தின் தேவையாகும்.
இறை நம்பிக்கையோடு வாழும் நம் வாழ்வில், இறந்தோருக்கான இறுதிச்சடங்குகள் ஆழப்பொருள் கொண்டதோடு, இறந்தோருக்கு ஆன்ம அமைதியையும் இழந்தோருக்கு அக அமைதியையும் தரவல்லவை. துக்ககாலத்தில் அணிகின்ற ஆடைவகைகள், மனம் நிறைந்த துக்கத்தைத் தாங்கியிருக்கும் கால அளவுகள் எனப் பல தனித்துவமான நடைமுறைகளைக் கொண்ட வழிபாட்டு நெறிகள் தமிழரிடையே உண்டு.
ஒரு நாட்டில் இவ்வாறனதொரு பேரிடர் நிகழ்ந்தால், அந்த நாட்டின் அரசானது, இழப்புகளுக்கான இழப்பீட்டை வழங்கி, அத்துயரத்தைத் தேசிய துக்கமாக அறிவிக்கவேண்டிய அரசு, உறவுகளையும் உறுப்புகளையும் இழந்து வலியால் துடித்த மக்களை முகாம்களுக்குள் அடைத்து வதைத்தது. இழந்தோருக்கு முறையாக சடங்குகளைச் செய்யவும் பரந்தவொரு இரங்கலை நிகழத்தவும் தடைகள் விதிக்கப்பட்டன.
தடைகள் சற்றே தளர்த்தப்பட்டிருக்கும் இக்காலத்தில் இனவழிப்பட்டு ஒன்றிணைந்து, சமய நம்;பிக்கையின் அடிப்படையில் பண்பாட்டு நிலைநின்று, இறுதிச்சடங்குகளை இனவழிப்பு நடைபெற்ற கடற்கரையில் செய்வது உற்றார் உறவினற்குப் பெரும் ஆற்றுப்படுத்தலாக அமையும்.
ஒருசில மைல் சதுரநிலப்பரப்புக்குள்; கொத்துக்கொத்தாக இறந்தவர்களை நினைவில் கொள்ளமுடியாமலும் உரிய முறையில் இறுதிச் சடங்குகளை ஆற்றமுடியால் போனமையும் எம் மக்களின் மனதில் ஆறா வடுக்களாகப் பதிந்துள்ளன. இந்த வேதனையே எஞ்சியிருப்போரை வாட்டிக்கொண்டிருக்கின்றது.
அன்றைய இனவழிப்பு நாள் ஈந்த வலிகள், எதிர்காலத்தைப் பற்றிய கேள்வியை எழுப்பி நிற்கின்றது. இவ்வலிகளை மறத்தல், உணர்ச்சிச் செறிவினை இழத்தல் என்பவற்றுக்கு எதிராகவும் நாம் நிமிர வேண்டிய தேவைகளை வலியுறுத்துகின்றது.
தாயகத்தில் மட்டுமல்ல, புலம்பெயர்ந்தோர் பலரும் குற்ற உணர்வு, உடல்நலக்குறைவு, உளச்சோர்வு போன்ற துயர்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். துயருற்றிருப்போர் தாமே மீண்டெழுவர் என நாம் சோம்பியிருத்தல் சமூகப்பணி ஆகாது. வலிகளால் துவள்வோரை மீட்கும் முன்னகர்வுகளைச் சமூகமாக நாம் முன்னெடுக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் 18. 05. 2023 அன்று தாய்மொழியில் நடத்தி வைக்கப்படும் ஈம வழிபாட்டு நிகழவுகளும் 1000 பேருக்கு மேற்பட்ட உணவுக்கொடையும் அரசியல் உட்பட, பிற நோக்கங்கள் எதுவுமற்று, சமய நம்பிக்கைக்கு அமைவாக உயிர்களுக்கு வீடுபேற்றையும் தோன்றாப் பெருமையன் இணையடியில் நற்பேற்றையும் அடைதலையும் நலன்பேண் செயலாக இழப்புகளால் வாடியிருப்போரை ஆற்றுப்படுத்தலையும் நோக்கங்களாகக் கொண்டே இவ்வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இனத்தின் பெருந்துயரை தமிழ்ப்பண்பாட்டு சார்ந்து இறை நம்பிக்கையோடு இயைந்து பல்வகைச் சமயவழிநின்று ஆற்றுப்படுத்தலை நல்வளமாகக் கொண்டு மீளெழுவோம்.